போலிக் கரத்தில் தடுப்பூசி... பிடிபட்ட இத்தாலிக்காரர்!


கரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றன. மறுபுறம், தடுப்பூசி முறைகேடுகளும் ஆங்காங்கே நடக்கின்றன. அந்த வரிசையில், இத்தாலியில் ஒருவர் போலிக் கரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முயன்று பிடிபட்டிருக்கிறார்.

கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் பலரிடம் தயக்கம் தெரிகிறது. ஜெர்மனி, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் தடுப்பூசி உள்ளிட்ட கரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட்டங்களே நடக்கின்றன.

எனினும், ஒமைக்ரான் பரவலால் அச்சமடைந்திருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகளைக் கண்டிப்புடன் அமல்படுத்துகின்றன. அந்த வகையில், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள், இரவு விடுதிகள், மைதானங்கள், உணவகங்கள் எனப் பொது இடங்களுக்குச் செல்பவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும் அல்லது கரோனா தொற்றிலிருந்து குணமாகியிருக்க வேண்டும் என்று இத்தாலி அரசு அறிவித்திருக்கிறது.

கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கவிருப்பதால், டிச. 6 முதல் ஜன.15 வரை இந்த நடைமுறை தொடரும். அதன்படி, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ‘சூப்பர் கிரீன் பாஸ்’ எனும் அட்டை வழங்கப்படும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு, 48 மணி நேரத்துக்குத் தற்காலிக பாஸ் கிடைக்கும். ஆனால், கரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என முடிவு வந்திருந்தால்தான் அந்த அட்டை வழங்கப்படும். இதை வைத்துத்தான் உள்ளூர் பொதுப் போக்குவரத்து, மாகாணங்களுக்கு இடையிலான ரயில் பயணம் ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்நிலையில், இத்தாலியின் வடக்கு பீட்மோன்ட் பிராந்தியத்தின் ட்யூரின் நகர் அருகில் உள்ள சிறுநகரான பீலாவைச் சேர்ந்த ஒரு நபர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக நாடகமாடி, சூப்பர் கிரீன் பாஸ் பெற்றுக்கொள்ள முடிவெடுத்தார். சிலிக்கானில் செய்யப்பட்ட செயற்கைக் கரத்தை வாங்கிப் பொருத்திக்கொண்டார். மருத்துவர் முன்னிலையில் தடுப்பூசிப் படிவத்தில் கையெழுத்திடுவது உட்பட அனைத்துக் கட்ட வேலைகளையும் கச்சிதமாகச் செய்திருந்தார். தடுப்பூசி செலுத்தும் பெண் பணியாளர் முன்பு அமர்ந்து தனது சட்டைக் கையைச் சுருட்டிவிட்டுக்கொண்டு புஜத்தைக் காட்டினார். அசல் கரமாகவே தென்பட்ட அந்தக் கையைப் பார்த்தபோது, ஆரம்பத்தில் அந்தச் சுகாதாரப் பணியாளருக்கு விஷயம் புரிபடவில்லை. எனினும், அந்த நபரின் உடல் நிறத்துக்கும் கரத்தின் நிறத்துக்கும் பொருத்தமில்லாதது போல் ஏதோ பொறி தட்டவே, சட்டையை முழுமையாகக் கழற்றுமாறு சொன்னார்.

அப்போதும் ஏதேதோ சொல்லிச் சமாளிக்கப் பார்த்திருக்கிறார் அந்த நபர். ஒரு கணம், அவர் மாற்றுத்திறனாளியாக இருப்பாரோ என்றும் மருத்துவப் பணியாளருக்குச் சந்தேகம் இருந்திருக்கிறது. சட்டையை முழுமையாகக் கழற்றியதும்தான் அந்தக் கரம் சிலிக்கானில் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது (அதேவேளையில், அது முழுமையாகவே சிலிக்கானில் செய்யப்பட்டதா அல்லது ஊசி போடும் புஜத்தின் மீது சிலிக்கான் லேயரை ஒட்டியிருந்தாரா என்பது ஊடகங்களுக்குத் தெளிவாகச் சொல்லப்படவில்லை).

அந்த நபரின் குட்டு வெளிப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஊசி போட மறுத்து, அவரைப் பற்றிப் புகார் செய்தார் மருத்துவப் பணியாளர். இதையடுத்து, அந்த நபர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தடுப்பூசியில் முறைகேடு செய்வதற்காகவே, இப்படியான சிலிக்கான் கரங்கள் இத்தாலியில் விற்பனைக்குக் கிடைத்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில், சிலிக்கான் கரங்கள் விற்பனைக்கு என சமூக வலைதளங்களில் சிலர் விளம்பரமும் செய்துவருகிறார்கள். இத்தாலி அரசு அவற்றையும் கட்டுப்படுத்துமா எனத் தெரியவில்லை.

ஒமைக்ரான் யுகத்தில், தடுப்பூசிகளுடன் பூஸ்டர் டோஸும் அவசியம் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்திவருகிறார்கள். இந்த நேரத்தில் ஆபத்து புரியாமல் சிலர் அபத்தமாக விளையாடி மாட்டிக்கொள்கிறார்கள்!

x