அமெரிக்காவின் முதல் ஒமைக்ரான் தொற்றாளர்


தென்னாப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதை, அமெரிக்க சுகாதாரத் துறைத் தலைமை ஆலோசகர் ஆன்டனி பவுசி உறுதிப்படுத்தியிருக்கிறார். தொற்றுக்குள்ளானவர் 18 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர் என்பதைத் தாண்டி, அவரைப் பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

நவ.22-ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து கலிபோர்னியா மாநிலத்துக்குத் திரும்பிய பயணியிடம் கரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவருக்குக் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 29-ம் தேதி அவருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியவர் என்பதால், அவருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில், அவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தீவிரமான ஆய்வில் இறங்கினர்.

இந்நிலையில், அவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. எனினும், அவர்களில் யாருக்கும் தொற்று உறுதிசெய்யப்படவில்லை.

அந்த நபர், 2 தவணை மாடர்னா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவர். பூஸ்டர் டோஸ் இன்னும் செலுத்தப்படவில்லை எனத் தெரிவித்திருக்கும் கலிபோர்னியா சுகாதாரத் துறை அதிகாரிகள், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்கர்கள் 2 தவணை தடுப்பூசிகளுடன் பூஸ்டர் தடுப்பூசியையும் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆன்டனி பவுசியும் சுகாதாரத் துறை நிபுணர்களும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

நவ.29 முதல் தென்னாப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா திரும்பிய பயணிகள் குறித்த தகவல்களைத் தருமாறு, விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஒமைக்ரான் தொற்றுப் பரவலை எதிர்கொள்வது குறித்த முக்கிய அறிவிப்பை அதிபர் ஜோ பைடன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

x