பிராட்வாட்டர் பாலியல் குற்றவாளி அல்ல!


அமெரிக்காவில், 1981-ல் நடந்த சம்பவம் அது. பல்கலைக்கழக மாணவி ஒருவர், சாலையில் நடந்துசென்றபோது, தன்னைக் கடந்துசென்ற ஒரு கறுப்பின இளைஞரைப் பார்க்கிறார். மனதுக்குள் பொறி தட்டுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்த நபர் அவர்தான் என நினைக்கிறார். போலீஸாரிடம் அவரை அடையாளம் காட்டுகிறார். அந்த இளைஞரோ, தான் அப்பாவி எனக் கதறுகிறார். ஆனால், யாரும் அதைக் கேட்கவில்லை. விசாரணை நடந்து அந்த இளைஞருக்கு 1982-ல் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது.

16 வருடச் சிறைத்தண்டனைக்குப் பிறகு 1998-ல் அந்தக் கறுப்பின மனிதர் விடுதலையாகிறார். எனினும், பாலியல் குற்றவாளிகள் ஆவணப் பட்டியலில் அவரது பெயர் தொடர்கிறது. இறுதியாக, கடந்த வாரம், ஆன்டனி பிராட்வாட்டர் எனும் அந்த நபர் குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் சமூகம், எழுத்துலகம், திரையுலகம் எனப் பல்வேறு தளங்களில் அதிர்வுகளை எழுப்பியிருக்கிறது.

20 வயது பிராட்வாட்டர் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியவர், அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆலிஸ் சீபோல்டு. நியூயார்க்கில் உள்ள சீரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, ஒரு பூங்கா அருகே உள்ள சுரங்கப்பாதையில் அடையாளம் தெரியாத கறுப்பின இளைஞரால் ஆலிஸ் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்திருந்த அவர், குற்றவாளி யார் என்பதில் தெளிவில்லாமல் இருந்தார். சந்தேகத்துக்குரிய நபர்களின் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த பிராட்வாட்டரைக் குழப்பங்களுக்கு இடையில்தான் அடையாளம் காட்டினார். தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்த நபர் பிராட்வாட்டராகத்தான் இருக்க வேண்டும் எனும் அனுமானத்திலேயே அவர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

ஆலிஸின் மீதும் தவறு இல்லை. தான் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமையால் ஆலிஸ் பல துர்க்கனவுகளைக் கடந்துவந்தவர். தான் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாகப் பகிரங்கமாக வெளியில் சொன்னதால், தனது குடும்பத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தவர். அவரது வாழ்க்கை தடுமாறியது. போதைமருந்துக்கும் அடிமையானார். ஒருகட்டத்தில் எழுத்தின் மூலம் தன்னை மீட்டெடுத்துக்கொண்டார். ஆலிஸ் பாலியல் வன்கொடுமைக்குள்ளான அதே சுரங்கப்பாதையில், அதற்கு முன்பு வேறொரு பெண் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக, தான் கொல்லப்படவில்லை என்பதால் ‘லக்கி’ (1999) எனும் பெயரில் புத்தகம் எழுதினார் ஆலிஸ். புகழ்பெற்றார். தனது கொடூர அனுபவங்களை வைத்து புனைவு கலந்து அவர் எழுதிய ‘தி லவ்லி போன்ஸ்’(2002) எனும் நாவலும் பெரும் புகழைத் தேடித்தந்தது. அதே பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

‘தி லவ்லி போன்ஸ்’ திரைப்பட ட்ரெய்லர்:

மறுபுறம், அடையாளம் தெரியாமல் தன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சொல்லி சிறைத்தண்டனை வழங்கவைத்துவிட்டார்களே என பிராட்வாட்டர் குமுறிக்கொண்டிருந்தார்.

இதற்கிடையில், ‘லக்கி’ புத்தகத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் தயாரிக்க முன்வந்த திமோத்தி முகெய்ன்டேயின் ‘ரெட் பேட்ஜ் பிலிம்ஸ்’ படத் தயாரிப்பு நிறுவனம், 1981-ல் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தைப் பணியில் அமர்த்தியது. துப்பறியும் நிபுணர்களின் தீவிர விசாரணையும் தேடுதலும் உண்மையான குற்றவாளி பிராட்வாட்டர் அல்ல என்பதை உணர்த்தின. இதையடுத்து, அந்த ஆதாரங்களை வைத்து நியூயார்க்கின் சீரக்யூஸ் நீதிமன்றத்தை பிராட்வாட்டரின் வழக்கறிஞர்கள் அணுகினர். வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி, பிராட்வாட்டர் குற்றமற்றவர் எனக் கடந்த வாரம் அறிவித்தார்.

எனினும், தீர்ப்பு வெளியாகி சில நாட்களுக்கு ஆலிஸ் தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை. இந்நிலையில், நேற்று (நவ.30) பிராட்வாட்டரிடம் மன்னிப்பு கோரும் அறிக்கையை ஆலிஸ் வெளியிட்டார்.

அவரது மன்னிப்புக்கோரலை ஏற்றுக்கொண்ட பிராட்வாட்டர், தான் நிம்மதி அடைந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். அத்துடன், “அப்படி ஒரு அறிக்கையை ஆலிஸ் விடுத்திருப்பது துணிச்சலான செயல். அவர் மட்டுமல்ல நானும் ஒரு பாதிக்கப்பட்ட நபர்தான் என்பதை அவர் புரிந்துகொண்டிருப்பதை இது காட்டுகிறது” என பிராட்வாட்டர் கூறியிருக்கிறார்.

‘லக்கி’ புத்தகத்தில் இடம்பெற்ற தகவல்கள் தவறானவை என்பதால், நெட்ஃபிளிக்ஸ் மூலம் வெளியிடத் திட்டமிட்டிருந்த ‘லக்கி’ திரைப்படத்தைக் கைவிடுவதாக திமோத்தி முகெய்ன்டே கூறியிருக்கிறார். இப்போது தனது இன்னொரு தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஹாக் பிலிம்ஸ்’ தயாரிப்பில் ‘அன்லக்கி’ எனும் பெயரில் ஒரு ஆவணப் படத்தை அவர் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதில், பிராட்வாட்டரின் நேரடிப் பங்களிப்பு இருக்கும். அதேசமயம், ‘லக்கி’ நூலில் இடம்பெற்ற தகவல்களைத் திருத்துவதற்கு, அதை வெளியிட்ட ஸ்க்ரிப்னர் பதிப்பகம் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

x