ஒமைக்ரானும் ‘ஆஃப்ரோஃபோபியா’வும்!


தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒமைக்ரான் பரவத் தொடங்குவதாக வெளியான செய்திகளுக்குப் பிறகு பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என வரிசையாகப் பல நாடுகள், தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்திருக்கும் நிலையில், ஒமைக்ரானைப் பரப்பியவர்கள் எனும் பழிச்சொல்லுக்கு ஆப்பிரிக்கர்கள் ஆளாகியிருக்கின்றனர்.

தென்னாப்பிரிக்கா மட்டுமல்லாமல், மலாவி, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா உள்ளிட்ட 8 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்திருக்கிறது. பிரேசில் 6 ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தடை விதித்திருக்கிறது. இலங்கை, வங்கதேசம், இஸ்ரேல் என ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணத் தடைவிதிக்கும் நாடுகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்தச் சூழலில் உலக நாடுகள் ஒமைக்ரானைக் காரணம் காட்டிக் கதவடைத்துக் கொண்டுவிட்டதாக ஆப்பிரிக்க தேசங்கள் வருத்தத்தில் ஆழ்ந்திருக்கின்றன.

கரோனா பரவலின் ஆரம்பகாலத்தில், பெருந்தொற்றைப் பரப்பியதாக, சீனர்கள் மீது பல்வேறு நாடுகளில் இனவெறிக் குற்றச் செயல்கள் நடந்தன. சீனாவுக்குள்ளேயே வூஹான் மாகாணத்தினரை வெளிமாகாணத்தினர் பாரபட்சமாகவும், வெறுப்புடனும் நடத்திய செய்திகள் வெளியாகின. போதாக்குறைக்கு, கரோனா வைரஸ் ஆப்பிரிக்கர்களிடமிருந்து பரவியதாகவும் வதந்திகள் பரவியிருந்தன. சீனாவுக்குள்ளேயே நைஜீரியா, கென்யா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், மாணவர்களும் இனரீதியாக அவமதிக்கப்பட்டனர். பெரும்பாலான ஆப்பிரிக்கர்களுக்குக் கட்டாயமாகக் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பலர் தனிமைப்படுத்தப்பட்டனர். கடந்த ஆண்டு, அமெரிக்காவின் பல மாகாணங்களில் கரோனா தொற்றுக்குப் பலியானோரில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களே அதிகம். பொதுமுடக்கம் ஏற்படுத்திய பொருளாதார இழப்பிலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்தான்.

தற்போது, ஒமைக்ரான் பரவல் காரணமாகப் பலரது கோபம் தென்னாப்பிரிக்கா மீது, இன்னும் சொல்லப்போனால் ஒட்டுமொத்த கறுப்பினத்தவர்கள் மீதும் திரும்பியிருக்கிறது.

கோவிட் தொடர்பான நடவடிக்கைகள் அறிவியலின் அடிப்படையில்தான் எடுக்கப்பட வேண்டும்; ஆஃப்ரோஃபோபியாவின் அடிப்படையில் அல்ல!

இதை மலாவி அதிபர் லாசரஸ் சக்வெரா வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார். ஆப்பிரிக்க நாடுகள் மீதான பயணத் தடை என்பது ‘ஆஃப்ரோஃபோபியா’வின் (ஆப்பிரிக்கர்கள் மீதான பயம் கலந்த வெறுப்பு) வெளிப்பாடு என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“பிறர் அடையாளம் காண்பதற்கு முன்பாகவே தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் ஒமைக்ரானைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணத் தடை விதித்திருப்பது தேவையில்லாதது. கோவிட் தொடர்பான நடவடிக்கைகள் அறிவியலின் அடிப்படையில்தான் எடுக்கப்பட வேண்டும்; ஆஃப்ரோஃபோபியாவின் அடிப்படையில் அல்ல” என்று நவ.28-ல் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியிருந்தார். இதே கருத்தைத் தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசா எதிரொலித்திருக்கிறார்.

பிரச்சினை இது மட்டுமல்ல. தடுப்பூசி விஷயத்திலும் ஆப்பிரிக்கர்கள் மீது பாரபட்சமும் புறக்கணிப்பும் நிகழ்ந்திருப்பதை ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், மருத்துவ நிபுணர்களும் வருத்தத்துடன் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். முக்கியமாக, ஒமைக்ரான் முதன்முதலில் கண்டறியப்பட்ட நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அதிகக் கட்டணம் விதிக்கப்பட்டிருக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 24 சதவீதம் பேர்தான்.

அதற்கு முக்கியக் காரணம், பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளுக்கு, முன்னேறிய நாடுகள் தடுப்பூசிகள் வழங்காததுதான். ஆப்பிரிக்க நாடுகள் சொந்தமாகத் தடுப்பூசி தயாரிப்பதற்கான அனுமதியும் வழங்கப்படவில்லை. இப்போது சொல்லுங்கள், ஒமைக்ரான் விஷயத்தில் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் ஆப்பிரிக்கர்களா?

x