மறுபடியும் கடத்தப் பார்க்கிறார்கள்: மெகுல் முதலைக் கண்ணீர்


மெகுல் சோக்‌ஷி

ரூ13,500 கோடி வங்கிக் கடன் மோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டு ஓடிய மெகுல் சோக்‌ஷி, அடைக்கலமான தேசத்தில் தான் கடத்தல் அபாயத்துக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளார்.

வைர வியாபாரியான மெகுல் சோக்‌ஷி தனது அரசியல் தொடர்புகளின் அழுத்தங்கள் மூலம், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ13,500 கோடி கடன் வாங்கினார். இந்த வங்கிக் கடன் மோசடி தொடர்பாக குட்டு உடைபடும் தருணத்தில் நாட்டை விட்டு ஓடிப் போனார். வழக்குப் பதிவு செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் மெகுல் சோக்‌ஷிக்காக காத்திருக்கின்றனர்.

டொமினிகா சிறையில் மெகுல் சோக்‌ஷி

முன்கூட்டியே மெகுல் சோக்‌ஷி செய்திருந்த ஏற்பாடுகளின்படி, அவருக்கு கரீபியன் தீவிகளில் ஒன்றான ஆன்டிகுவா தேசத்தில் குடியுரிமை கிடைத்தது. இந்தியாவுக்கும் இந்த குட்டி தேசத்துக்கும் இடையே, தேடப்படுவோரை ஒப்படைப்பதற்காக ஒப்பந்தம் எதுவும் கிடையாது. அதனால் மெகுல் சோக்‌ஷியை கைது செய்வதற்கான இந்தியாவின் ராஜிய முயற்சிகள் எடுபடவில்லை.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி என மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டும் ஓடும் பெரும் பணக்காரர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களின் சொத்துக்கள் பறிமுதல், வழக்குகள் தொடுத்தல் ஆகியவற்றோடு, நாட்டுக்கு திரும்ப கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதற்காக சாம, தான, பேத, தண்டம் என சகல உபாயங்களையும் இந்திய ஏஜெண்டுகள் பரிசோதித்தனர்.

அவற்றில் ஒன்றாக, ஆன்டிகுவா தேசத்தில் சொகுசு வாழ்க்கை நடத்திய மெகுல் சோக்சி ’ஹனி டிராப்’ வலையில் வீழ்த்தப்பட்டார். பெண் ஒருவர் உதவியோடு ஆன்டிகுவாவிலிருந்து கடத்தப்பட்ட மெகுல் சோக்‌ஷி, பக்கத்து தீவு தேசமான டொமினாகாவில் சட்ட விரோதமாக குடியேறியதாக கைதானார். டொமினிகா நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றவர் மீண்டும் தனது அரசியல் செல்வாக்கால் ஆன்டிகுவா திரும்பினார்.

அதன் பின்னரான 6 மாதங்களில் மிகவும் எச்சரிக்கையாக காலம் கழித்து வரும் மெகுல் சோக்‌ஷி, இன்று(நவ.29) வெளியான வீடியோ பதிவு ஒன்றில் தனது புதிய அச்சம் குறித்து பேசியுள்ளார். அதில் ‘இந்திய ஏஜென்டுகள் மீண்டும் தன்னை கடத்த முயற்சிப்பதாகவும், இந்தியாவுக்கு நெருக்கமான கயானா வாயிலாக தன்னை கடத்திச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும்’ புலம்பி உள்ளார்.

குடியுரிமை பெற்று வசித்து வரும் ஆன்டிகுவா தேசத்தில், பல முக்கிய எதிர்க்கட்சிகளின் ஆதரவை மெகுல் சோக்‌ஷி ‘வாங்கி’ உள்ளார். இன்டர்போல் விடுத்த ரெட் நோட்டீஸ், இந்திய ஏஜென்டுகளின் தொடர் கண்காணிப்பு ஆகியவற்றின் மத்தியிலும், தனது மோசடி சொத்தைக் கரைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

x