புதிய கரோனா வகையான ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவுகிறது என்று தென்னாப்பிரிக்காவிலிருந்து வெளியான தகவலால் உலகம் மீண்டும் பீதி அடைந்திருக்கிறது. பொருளாதாரத்தைத் திறந்துவிட நினைத்திருந்த அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் மீண்டும் முழு ஊரடங்கு அமல் யோசனையைப் பரிசீலிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் மக்களிடையே இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பும் அமைதியின்மையும் பரவிக்கொண்டிருக்கிறது. எனவே முழு ஊரடங்கு இல்லாவிட்டாலும், சர்வதேச விமானப் பயணத்தை நிறுத்த அல்லது கட்டுப்படுத்த திட்டமிடப்படுகிறது.
இந்தக் காரணத்தால் பெட்ரோலிய உற்பத்தி - ஏற்றுமதி நாடுகள் அமைப்பு (ஒபெக்) தங்களுடைய வியாபாரம் மீண்டும் மீட்சி அடையாதோ என்று அஞ்சுகின்றன (இந்த அமைப்பில் ஈரான், இராக், குவைத், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன). இதன் விளைவாக எண்ணெய் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை நேற்று (நவ.26) சரிந்தது. அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் மாநில எண்ணெய்ச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் கீழே சரிந்தது. கடந்த செப்டம்பருக்குப் பிறகு எண்ணெய் விலை இப்படிச் சரிந்தது இதுவே முதல்முறை. உலக அளவில் அதிகம் கவனிக்கப்படும் பிரென்ட் (BRENT) சந்தையில் பீப்பாய் 75 டாலர்களுக்கும் கீழே இறங்கியது.
கரோனாவிலிருந்து நாடுகள் விடுபட்டு, பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கிய பிறகும் கச்சா பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்காமல் விலையை மட்டும் உயர்த்தி வந்த ஒபெக் நாடுகளைக் கடுமையாக எச்சரித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இதனால் விலைவாசி உயர்ந்து நாடுகள் படும் அவதியைச் சுட்டிக்காட்டி உற்பத்தியை, கரோனா தாக்குதலுக்கு முன்பிருந்த அளவுக்கு உயர்த்துமாறு கோரினார். ஒபெக் நாடுகள் அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்தன. கரோனா காலத்தில் தாங்கள் அடைந்த வருவாய் இழப்பை ஈடுகட்டக் கருதிய ஒபெக் அமைப்பு, அதை நேரடியாகக் கூறாமல், உற்பத்தியை அதிகரிக்கத் தேவையில்லை என்று கூறியது.
அப்படியானால் குளிர்காலத் தேவைக்காக வாங்கி கையிருப்பில் வைத்திருக்கும் எண்ணெய் சேமிப்பிலிருந்து கணிசமான அளவைச் சந்தைக்குத் திறந்துவிடுவதாகவும் இதே போல சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, தைவான் போன்ற நாடுகளும் எண்ணெய்யைச் சந்தைக்குத் தர வேண்டும் என்றும், 4 நாட்களுக்கு முன்னர் பைடன் கேட்டுக்கொண்டார். எல்லா நாடுகளும் அதை ஏற்று முடைக்காலக் கையிருப்பை விடுவிக்கத் தயாராயின. ஒபெக் அமைப்பு இந்த முடிவைக் கடுமையாக எதிர்த்தது.
இப்போது கரோனாவின் வைரஸ் அடைந்துள்ள புதிய உருமாற்றம், எல்லா நாடுகளையும் மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தடுப்பு ஊசிகள், மருந்துகள் அனைத்தும் இதுவரை தெரிந்த வைரஸ்களுக்கானவை. புதிய வைரஸ் கொடூரமாகவும் வேகமாகவும் பரவும் என்ற அச்சத்தால் இதைச் சமாளிக்க ஒரேவழி, பழையபடி முழு ஊரடங்குதான் என்று பல நாடுகளும் கருதுகின்றன. அப்படியானால் ஒபெக் நாடுகளால் இப்போது ஏற்றுமதி செய்யும் அளவுக்குக்கூட விற்க முடியாமல் தேவை குறைந்துவிடும். எனவே, அந்நாடுகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. இதன் காரணமாகவே சந்தையில் எண்ணெய் விலை கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு, குறைந்திருக்கிறது.
டிச.1 அல்லது 2-ம் தேதி சந்திக்கவிருந்த ஒபெக் நாடுகள், உற்பத்தியை ஓரளவுக்கு ஜனவரி முதல் அதிகப்படுத்தும் முடிவை எடுப்பதாக இருந்தன. புதிய வைரஸ் கண்டுபிடிப்புக்குப் பிறகு விமானப் பயணங்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியதால் உலகப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்தன.
மீட்சியடையும் பொருளாதாரம் காரணமாக எண்ணெய்க்குத் தேவை ஏற்படும், விலை உயர்வைச் சமாளிக்க முடியாவிட்டாலும் நாடுகளால் வாங்காமல் இருக்க முடியாது என்று ஒபெக் கணக்குப் போட்டது. அமெரிக்காவும் பிற நாடுகளும் கையிருப்பைச் சந்தையில் விற்றாலும் விலையை அவற்றால் குறைத்துவிட முடியாது என்று ஒபெக் நாடுகளுக்குத் தெரியும். எனவே, சற்று அலட்சியமாகக்கூட இருந்தன. இப்போது புதிய வைரஸ் அச்சத்தால் மீண்டும் தங்களுடைய சரக்குக்குத் தேவை குறைந்துவிட்டால், தத்தமது நாடுகளிலும் பொருளாதார நிலைமை மோசமாகிவிடுமே என்று ஒபெக் நாடுகள் கவலைப்படுகின்றன.
கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய நாடுகளில் நன்றி தெரிவிக்கும் நாளாகக் கொண்டாடியதால், எண்ணெய் சந்தை திறக்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை, அமெரிக்காவில் நன்றியறிவிப்பு நாள் கொண்டாடப்பட்டது. எனவே, அடுத்தடுத்து 2 நாட்கள் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய்க்குக் கேட்பு இல்லாததும் விலைச் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அமெரிக்கா கோரியதால் ஜப்பான், இந்தியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கையிருப்பை விற்க முன்வந்தாலும் சீனாவும் அதைப்போலச் செய்யுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உறவு சுமுகமாக இல்லை. தைவான் பிரச்சினை காரணமாக இரு நாடுகளும் மோதலுக்குத் தயாராவது போலப் பேசுகின்றன. இருந்தும் வர்த்தகப் பேச்சுகளில் இரு நாடுகளும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கின்றன. எனவே, பைடன் கோரிக்கையை ஜி ஜின்பிங் ஏற்பார் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். பைடன் சொல்லி ஜி ஜின்பிங் கேட்டுவிட்டால், சீனாவுக்குள் அவருடைய மதிப்பு குறைந்துவிடும் எனவே கேட்கமாட்டார் என்று இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.
மொத்தத்தில், மக்களுடைய அன்றாட வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ள எரிபொருள், சர்வதேச அரசியல்-பொது சுகாதாரம் ஆகியவற்றையும் இப்போது மையம் கொண்டிருக்கிறது.