மேலும் மோசமடைகிறதா இந்தியா - சீனா உறவு?


இந்தியாவின் பாதுகாப்புக்கு, பாகிஸ்தானைவிடவும் சீனாதான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியிருப்பதும் அதற்குச் சீனா கண்டனம் தெரிவித்திருப்பதும் அநாவசியமான நகர்வுகள் என விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக, சீனாவின் எதிர்வினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே இந்தியாவுக்கு நல்லது என்றும் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் சார்பில் சுட்டிக்காட்டப்படுகிறது.

நவ.25-ல், சீன ராணுவத்தின் மாதாந்திர ஊடகச் சந்திப்பின்போது, அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செய்தித் தொடர்பாளர், பிபின் ராவத்தின் வார்த்தைகள் பொறுப்பற்றவை என்றும், ஆபத்தானவை என்றும் விமர்சித்தார். இப்படிப் பேசுவதன் மூலம் இந்திய எல்லையில் அவ்வப்போது நடத்திவரும் அத்துமீறல்களைப் பற்றிய விமர்சனங்களை நீர்த்துப்போகச்செய்ய சீனா முயல்கிறது என்கிறார்கள். கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் நுழைந்தது குறித்த விமர்சனங்களுக்கு, அந்நாட்டின் தரப்பிலிருந்து இதுவரை காத்திரமான விளக்கம் அளிக்கப்படவில்லை என, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதுதொடர்பாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் சீனா அசைந்துகொடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இன்னொரு பக்கம் இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் சீனாதான் என, இந்தியாவின் முன்னாள் ராணுவ அதிகாரிகளும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஒருபுறம் இப்படிச் சொல்லிக்கொண்டு, எல்லையில் படைகளைக் குவிப்பது, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் என இந்தியாவின் பிற அண்டைநாடுகளுடன் கைகோத்துக்கொண்டு இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்பது எனத் தொடர்ந்து செயல்படும் சீனா குறித்த இந்தியாவின் கருத்து சரிதான் என்பது அவர்களின் கருத்து.

இப்போதைக்கு இரு தரப்பிலும் சலசலப்பு எழுந்திருந்தாலும், இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே 13-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்திருந்த நிலையில் கசப்புணர்வு காரணமாக, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படவில்லை. இருதரப்பும் மிக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் எனக் கடந்த வாரம் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தனைப் பிரச்சினைகளுக்கு இடையிலும், 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைச் சீனாவில் நடத்துவதற்கு ரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியாவும் ஆதரவு தெரிவித்திருக்கிறது. எனவே, பதற்றம் விரைவில் தணியும் என எதிர்பார்க்கலாம்.

x