ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி அமைந்த பின்னர், ஏராளமானோர் அண்டை நாடுகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் தஞ்சம் புகத் தொடங்கினர். இன்றும் அங்கு வாழ்பவர்கள், கடுமையான வறுமையில் சிக்கித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். அடிப்படைவாதிகளான தாலிபான்களின் ஆட்சியில் பெண்களின் நிலை மிக மிக மோசமாகியிருக்கிறது. இந்நிலையில், ‘ஆப்கன் பெண்’ எனும் புகைப்படம் மூலம் புகழ்பெற்ற ஷர்பத் குலா இத்தாலியில் தஞ்சம் புகுந்திருக்கிறார்.
1984-ல் ஸ்டீவ் மெக்கரி எனும் புகைப்படக் கலைஞர், ஆப்கன் அகதிப் பெண்ணான ஷர்பத் குலாவைப் புகைப்படம் எடுத்தார். அந்தப் புகைப்படம், ‘நேஷனல் ஜியாக்ரஃபிக்’ இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றது. குலாவின் பச்சை நிறக் கண்கள், ‘நேஷனல் ஜியாக்ரஃபிக்’ இதழுக்கும் ஸ்டீவ் மெக்கரிக்கும் பெயர் பெற்றுத் தந்தன. அதன் பின்னர் குலாவின் கண்கள் குறித்தும், ஆப்கன் பெண்களின் நிலை குறித்தும் அவ்வப்போது பேசிவந்த உலகம், ஒருகட்டத்தில் அவரை முற்றிலுமாக மறந்துபோனது.
2002-ல் குலாவை மீண்டும் தேடிக் கண்டடைந்தார் மெக்கரி. சொல்லப்போனால், தன் புகைப்படம் உலகப் புகழைப் பெற்றிருந்தது என்பதே பல வருடங்களுக்குப் பின்னர்தான் குலாவுக்குத் தெரியவந்தது. பஷ்தூன் இனப் பெண்ணான குலா, பாகிஸ்தானின் நசீர் பாக் அகதிகள் முகாமில் இருந்தபோது அவரைப் புகைப்படம் எடுத்தார் மெக்கரி. அது சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்பில் ஆப்கானிஸ்தான் இருந்த காலம்.
“சொந்த மண்ணில் ஏழையாகவே வாழ நேர்ந்தாலும், அது நமது சொந்த மண். நமது சொந்த வீட்டுக்கு நிகராக வேறு எந்த இடமும் இருக்க முடியாது” என்றவர் ஷர்பத் குலா!
இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டபோது தனக்கு 10 வயது என, பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குலா நினைவுகூர்ந்திருக்கிறார்.
2014-ல் போலி ஆவணங்களை வைத்திருந்ததாகக் கூறி அவரை பாகிஸ்தான் அரசு மீண்டும் ஆப்கனுக்கு அனுப்பியது. குலாவின் சொந்த மண்ணில் அவரை வரவேற்றார் ஆப்கனின் அப்போதைய அதிபர் அஷ்ரப் கனி. குலாவுக்கு ஒரு புதிய வீடும் கிடைத்தது. எனினும், தாலிபான்களின் ஆட்சியின்கீழ் மீண்டும் ஆப்கன் வந்துவிட்ட நிலையில், பெண்களின் நிலை மோசமாகிவருவதால் அங்கிருந்து வெளியேற உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று இத்தாலி அரசு, விமானம் மூலம் அவரை அழைத்துச் சென்றிருக்கிறது. புதிய வாழ்வைத் தொடங்க அவருக்கு உதவவும் இத்தாலி இசைந்திருக்கிறது.
எனினும், சொந்த மண்ணை இழந்து எங்கோ வாழ்க்கையை நகர்த்துவது எத்தனை துயரமானது என்பதற்கு, 8 வயதிலேயே அகதியாகிப்போன குலாவின் வாழ்க்கையே சாட்சி. ஆப்கனின் ‘டோலோ டிவி’ எனும் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட குலாவிடம், “சொந்த மண்ணில் வாழ்வதற்கும், அந்நிய மண்ணில் அகதியாக வாழ்வதற்கும் என்ன வேறுபாடு?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு, “இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. சொந்த மண்ணில் ஏழையாகவே வாழ நேர்ந்தாலும், அது நமது சொந்த மண். நமது சொந்த வீட்டுக்கு நிகராக வேறு எந்த இடமும் இருக்க முடியாது” என்று பதிலளித்தார் குலா.
இத்தாலியில் தஞ்சம் புகுந்திருக்கும் குலாவின் மனதில் அவரது வார்த்தைகளே திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கும்!