வங்கிக் கணக்கில் பெட்ரோல் மானியம்!


பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை உயர்வை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் அனைத்துமே தத்தளிக்கின்றன. விலை உயர்வின் ஒருபகுதியை அரசே ஏற்று, மொத்த வரி வருவாயிலிருந்து மானியம் தந்து, விலை உயராமல் தடுப்பது ஒரு வழிமுறை. இந்தியாவில் முன்னர் அந்த வகையில்தான் பெட்ரோல், டீசல் விலை பராமரிக்கப்பட்டது.

இது சொந்த வாகனம் வைத்துள்ளவர்களுக்குப் பலன் அளித்தாலும், வாகனமே இல்லாத ஏழைகளும் அதன் சுமையைச் சுமக்கும்படி நேரிட்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வரி வருவாய் என்பது பெரும்பாலும் மறைமுக வரிகளிலிருந்து கிடைப்பதுதான் அதிகம். இதற்குப் பதிலாக சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் என்ன விலையோ அதற்கேற்ப விலையை இந்தியா உள்ளிட்ட நாடுகள் தற்போது அனுமதிக்கின்றன. கச்சா பெட்ரோலிய எண்ணெய்யை எண்ணெய் வள நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து, அதை இந்திய பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்தம்செய்து, பிறகு நுகர்வோருக்கு மாநிலங்கள்தோறும் எடுத்துச்செல்லும் செலவையும் அரசுத் துறை நிறுவனங்கள் சேர்க்கின்றன. அத்துடன் மத்திய அரசு உற்பத்தி வரியையும் மாநில அரசுகள் மதிப்புக் கூட்டு வரியையும் விதிக்கின்றன. பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐத் தாண்டியதால் விலைவாசி உயர்வும் அதிகமானது. இதையடுத்து மத்திய அரசு உற்பத்தி வரியில் சிறிதளவு குறைத்துள்ளது. சில மாநிலங்கள் மதிப்புக் கூட்டுவரியைக் குறைத்துள்ளன. இருந்தும் நுகர்வோருக்கு இது போதுமானதாக இல்லை.

இந்த முயற்சி இரட்டை லாபங்களை தரக்கூடும். அரசு பெட்ரோல்-டீசலுக்கு மட்டும் அதிக மானியத்தை விரயம் செய்வதை இது தடுக்கும். ஏழைகளின் கைகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி கிடைப்பது அடிப்படைத் தேவைகளை அவர்கள் நிறைவேற்றிக்கொள்ள உதவும்.

பெட்ரோலிய உற்பத்தி நாடுகள், கோவிட் 19 பெருந்தொற்றுக் காலம் அடுத்த கட்டத்தை எட்டிவரும் இந்த வேளையில், தேவை அதிகமாகியும்கூட உற்பத்தியைக் கூட்டாமல், விலையை மட்டும் தொடர்ந்து உயர்த்தி லாபம் சம்பாதிக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பலமுறை வலியுறுத்தியும் ஒபெக் நாடுகள் இதுவரை தாங்கள் இழந்த வருவாய் இழப்பை ஈடுகட்டும் நோக்கில், விலையைக் குறைக்க மறுக்கின்றன. இதைத் தடுக்க, குளிர்காலத்துக்காக வாங்கி வைத்துள்ள முடைக்கால கையிருப்பைச் சந்தையில் விடுவிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானித்துள்ளன. ஒபெக் நாடுகள் இந்த முடிவையும் கடுமையாக எதிர்த்துள்ளன.

நைஜீரியா முடிவு

இப்படி வெவ்வேறு நாடுகள் எண்ணெய் விலை உயர்வைச் சமாளிக்கப் பல்வேறு வகைகளைக் கையாண்டு பார்க்கும்போது, நைஜீரியா புதிய முடிவை எடுத்திருக்கிறது. நைஜீரியா நாட்டில் அடுத்த ஜூலை மாதம் முதல் 4 கோடி மக்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 2.4 டிரில்லியன் நைராவைச் செலுத்துவது அந்த முடிவு. இது மாதம் 580 கோடி அமெரிக்க டாலர்களாகும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதந்தோறும் 5,000 நைரா கிடைக்கும். இந்த உதவித்தொகை அளிக்கப்படும் ஜூலை மாதம் வரையில் அரசு மானியத்தைத் தொடரும். அதற்குப் பிறகு சந்தையில் விற்கும் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை, தினசரி மாறுதலுக்கு உள்ளாகும். மாதந்தோறும் 5,000 நைரா வழங்கும் திட்டம் 2022 ஜூலை முதல் 6 மாதங்களுக்கோ 12 மாதங்களுக்கோ தொடரும். இதை நிதியமைச்சர் ஜைனப் அகமது தெரிவித்திருக்கிறார்.

தேர்தலுக்கானதா?

நைஜீரியாவின் 36 மாநிலங்களில் மாநில ஆளுநர்கள் பதவிக்கான தேர்தல் நெருங்குவதால், மக்களுடைய வாக்குகளைக் கவர அதிபர் முகம்மது புகாரி இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றே பலரும் கூறுகின்றனர். ஒரே நடவடிக்கை மூலம் இரட்டை லாபங்களை இது தரக்கூடும். அரசு பெட்ரோல், டீசலுக்கு மட்டும் அதிக மானியத்தை விரயம் செய்வதை இது தடுக்கும். ஏழைகளின் கைகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி கிடைப்பது அடிப்படைத் தேவைகளை அவர்கள் நிறைவேற்றிக்கொள்ள உதவும். பெட்ரோல், டீசல் மானியம் மோட்டார் வாகனம் வைத்திருப்பவர்களுக்குத்தான் நன்மையைத் தரும். அவர்களுமே அடுத்தடுத்து விலை உயரும்போது, அரசால் மானியத்தை அதிகப்படுத்த முடியாத நிலையேற்பட்டால் அதிருப்தியாகத்தான் இருப்பார்கள். இப்போது சொந்தமாக வாகனமே இல்லாத, வறுமைக்கோட்டுக்கும்கீழே வாழும் ஏழைகூட சிறிதளவு பணம் கையில் கிடைப்பதால் வாழ்க்கைச் செலவுகளை ஓரளவுக்கு சமாளிப்பார். தேர்தலில் ஆளும்கட்சிக்கு இது வாக்குகளையும் பெற்றுத்தரும். ஏழைகளின் கணக்குக்கு நேரடியாகப் பணம் செலுத்தும் திட்டம், மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோ முதல் இந்தியா வரையில் பல நாடுகளில் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அமல் செய்யப்படுகிறது. நைஜீரியாவுக்கு இப்போதுதான் இது முதல்முறையாக அமலுக்கு வரவிருக்கிறது.

அதே வேளையில், நைஜீரியாவில் அனைவருக்கும் இப்போது வங்கிக் கணக்கு கிடையாது. எனவே, போலியான முகவரிகளில் போலியான பெயர்களில் பணம் செலுத்தப்படவும் ஊழல் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்று அஞ்சப்படுகிறது. அடுத்த ஜூலை முதல் அமலாகிறது என்பதால், அதற்குள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை, விரல் ரேகைப்பதிவு அடையாளம், தனி வங்கிக் கணக்கு ஆகியவற்றை செய்துதர உலக வங்கியிடம் திட்டத்தையும், அமல்படுத்த நிதி உதவியையும் கேட்டிருக்கிறது நைஜீரியா.

நைஜீரியாவில் பெட்ரோல், டீசல் மானியம் மட்டும் ஆண்டுதோறும் அரசின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 6.3 சதவீதமாக இருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால், நாட்டின் பொருளாதாரம் தாங்காது என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) சுட்டிக்காட்டுகிறது. மாதந்தோறும் 2,500 கோடி நைரா பெட்ரோலிய மானியமாகவே செலவாகிறது. இப்போது வறுமைக்கோட்டுக்கும்கீழே வாழும் நைஜீரியர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 1.90 டாலர்கள்தான் சம்பாதிக்கின்றனர். எனவே, புதிய நேரடி ரொக்க உதவி அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

ஆனால் இந்தத் தொகை எந்தச் சொத்துகளையும் உருவாக்க உதவாமல், வெறும் நுகர்வு ஊக்குவிப்பாக மட்டுமே இருக்கும் என்பதால், இதையும் நைஜீரிய அரசால் நீண்ட காலத்துக்குத் தொடர முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தத் தொகையால் வறுமையை ஒழித்துவிடவும் முடியாது என்பதும் உண்மை. தேர்தலுக்குப் பிறகு புதிதாகப் பதவிக்கு வரும் அரசுக்கு இது பெரிய சுமையாகவே மாறும். ஆனால் பெட்ரோலிய மானியச் சுமை சரியா, இந்த ரொக்க நிதியுதவி சுமை சரியா என்ற விவாதமும் முக்கியத்துவம் பெறுகிறது.

நைஜீரியா: சிறு குறிப்பு

நைஜீரிய கூட்டாட்சி குடியரசு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. தலைநகரம் அபுஜா. மக்கள்தொகை 21.1 கோடி. வடக்கில் நைஜர், வடகிழக்கில் சாட், கிழக்கில் கேமரூன், மேற்கில் பெனின் நாடுகள் உள்ளன. 36 மாநிலங்கள். நைஜீரியாவின் மிகப் பெரிய நகரம் லாகோஸ். அட்லான்டிக் பெருங்கடலில் கினி வளைகுடா அருகில் அமைந்துள்ள நாடு. பிரிட்டன் இந்நாட்டை பாரம்பரிய தலைக்கட்டுகள் மூலம் மறைமுகமாக ஆண்டது. 1960 அக்டோபர் 1-ல் அதிகாரபூர்வமாக சுதந்திரக் கூட்டரசாக மாறியது. 1967 முதல் 1970 வரையில் உள்நாட்டுப் போர் நடந்தது.

பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு, ராணுவ அரசு என்று மாறி மாறி அலைக்கழிக்கப்பட்டது. 250 இனக் குழுக்களும் 500-க்கும் மேற்பட்ட வித்தியாசமான மொழிகளும் உள்ள நாடு. வடக்கில் ஹவ்சா-ஃபுலானி, மேற்கில் யோருபா, கிழக்கில் இக்போ என்ற பெரிய பழங்குடிகள் உள்ளன. மக்கள்தொகையில் இந்த 3 இனங்கள் மட்டும் 60 சதவீதம். ஆட்சி மொழி ஆங்கிலம். நாட்டின் வடக்கில் வாழ்வோரில் அதிகம்பேர் முஸ்லிம்கள், தெற்கில் வாழ்வோரில் அதிகம்பேர் கிறிஸ்தவர்கள். உலக வங்கி இந்நாட்டை வளரும் சந்தை என்று மதிப்பிட்டுள்ளது. மனித ஆற்றல் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள இந்நாட்டில், ஊழல் அதிகம். நைஜர் நதி பாய்வதால் நைஜீரியா என்று பெயர் வந்தது. பக்கத்து நாடு நேரடியாகவே நைஜர் என்ற பெயரைப் பெற்றுள்ளது!

x