ஜெர்மனியை ஒளிரச் செய்வாரா ஒலாஃப் ஷோல்ஸ்?


ஜெர்மனி நாட்டின் அடுத்த ஆட்சித் துறைத் தலைவராகப் (Chancellor பதவி, பிரதமர் பதவிக்கு நிகரானது) பதவியேற்கவிருக்கிறார் ஒலாஃப் ஷோல்ஸ் (63). ஏஞ்செலினா மெர்க்கல் ஆட்சியில் நிதியமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் மார்ச் 2018 முதல் பதவி வகித்தவர்தான் ஷோல்ஸ். வடக்கு ஜெர்மனியின் துறைமுக நகரமான ஹாம்பர்க்கில் மேயராக 2011 முதல் 2018 வரை பொறுப்பு வகித்திருக்கிறார். சமூக ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவராக 2009 முதல் 2019 வரையில் இருந்திருக்கிறார்.

ஜெர்மனியில் 2021 நவம்பரில் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பழைய கூட்டணியும் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை. பச்சை, மஞ்சள், சிவப்பு நிறக் கொடிகளைக் கொண்ட (தி கிரீன்ஸ், ஃப்ரீ டெமாக்ரடிக் பார்ட்டி, சோசியல் டெமாக்ரடிக்) 3 கட்சிகள் இணைந்து (போக்குவரத்து சிக்னல்!) கூட்டணி ஆட்சியமைக்கின்றன. மைய-இடதுசாரி அரசாக இது கருதப்படுகிறது. டிச.6 முதல் 9-க்குள் முறைப்படி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் ஷோல்ஸ்.

1985-ல் வழக்கறிஞராகப் பணிபுரியத் தொடங்கிய இவர், தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு சட்டங்களில் தனிக் கவனம் செலுத்தினார். 1970-லேயே சமூக ஜனநாயக (எஸ்பிடி) கட்சியில் உறுப்பினராகிவிட்டார். புந்தேஸ்டாக் என்று அழைக்கப்படும் ஜெர்மானிய நாடாளுமன்றத்தில் 1998 முதல் 2011 வரையில் உறுப்பினராக இருந்தார்.

ஓஸ்னாபுரூக் என்ற ஊரில், 1958 ஜூன் 14-ல் லுத்தரன் கிறிஸ்தவப் பிரிவுக் குடும்பத்தில் பிறந்தார். ஹாம்பர்கின் ரஹிஸ்டெட் மாவட்டத்தில் வளர்ந்தார். 2 தம்பிகள். ஜெர்மனியின் இவாஞ்சலிகல் தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார். மதச்சார்பற்றவர். வளர்ந்த பிறகு தேவாலயம் செல்வதை நிறுத்திவிட்டார். அதே சமயம் கிறிஸ்தவப் பாரம்பரியத்திலும் கலாச்சாரத்திலும் ஈடுபாடுள்ளவர். 1970-ல் கட்சியில் சேர்ந்திருந்தாலும் 1975-ல் கட்சியின் இளைஞர் அமைப்பில் தீவிரப் பங்கேற்புக்குப் பிறகே கட்சிக்குள் பிரபலமானார். பல்கலைக்கழகத்தில் மார்க்சிஸ்ட்டுகளை ஆதரித்தார். முதலாளித்துவப் பொருளாதாரத்திலிருந்து மீள வேண்டும் என்ற கருத்து கொண்டிருந்தார். நேட்டோ அமைப்பை ஆதிக்க மனோபாவம் மிக்க ஏகாதிபத்திய அமைப்பு என்று சாடினார். அணு ஆயுதப் பரவலைத் தடுக்க வேண்டும் என்று வாதாடினார். இவையெல்லாம் இவருடைய ஆரம்பகால அரசியல் நிலைப்பாடுகள். ஒலாஃப் ஷோல்ஸ் தன்னுடைய எஸ்பிடி கட்சித் தோழியைத் திருமணம் செய்துகொண்டார். அவருடைய பெயர் பிரிட்டா எர்ன்ஸ்ட்.

சர்ச்சைகள்

போதை மருந்து வியாபாரிகள் என்று சந்தேகிக்கப்படுவோருக்கு மலமிளக்கி மருந்து தந்து உண்மைகளை வரவழைக்கும் முறையை ஆதரித்தார். அது உடல்நிலையைக் கடுமையாக பாதிக்கும் என்று ஹாம்பர்க் நகர மருத்துவர்கள் சங்கம், அந்த முறையை நிராகரித்தது. பத்திரிகைக்குப் பேட்டி அளித்த பிறகு, பிரசுரத்துக்கு முன்னால் சில பதில்களை மாற்றிக்கொள்ள பேட்டி தந்தவருக்கு உரிமையுண்டு என்று கருத்தை இவர் ஆதரித்ததும் அவ்வாறே கண்டிக்கப்பட்டது. இப்படி பேட்டி அளித்துவிட்டுப் பிறகு அதை மாற்றச் சொல்வது, பத்திரிகைச் சுதந்திரத்துக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம் என்று கூறி, இவர் அளித்த பேட்டியில் பதில்களை எல்லாம் கறுப்பு மையால் பூசி மறைத்து வெளியிட்டது ஒரு பத்திரிகை.

மிதவாதி

எஸ்பிடி கட்சியினர் ஷோல்ஸை, மிதவாதி என்கின்றனர். பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் நேர்காணல்களிலும் இவர் அளிக்கும் பதில்கள் தானியங்கி இயந்திரம் பேசுவதைப்போல, வார்த்தைகள் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரே மாதிரி ஒலிக்கும் வகையில் இருக்கும் என்பதால், இவரை ‘ஷோல்ட்லோமேட்’ என்று பத்திரிகையாளர்கள் கேலியாக அழைப்பார்கள்.

பங்குப் பரிவர்த்தனைகள் மீது வரி விதிக்க வேண்டும் என்ற கருத்தை ஷோல்ஸ் தீவிரமாக ஆதரித்தார். பெரிய பணக்காரர்களை அதிகமான வரி விதிப்புக்கு உட்படுத்துவது எதிர்மறை விளைவுகளையே தரும் என்று பலரும் கண்டித்தனர். பிறகு ஆய்விலும் இவருடைய யோசனை எதிர்மறை பலனையே தந்தது தெரியவந்தது. நிதியமைச்சராகப் பதவியேற்ற பிறகு, ஜெர்மன் அரசு புதிய கடன் எதையும் வாங்கக்கூடாது, பொதுச் செலவுகளை வரம்புக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற 2 நடைமுறைகளைக் கடைபிடித்தார். இதனால், ஜெர்மனியின் பொருளாதாரம் வலுப்பெற்றது என்றே பலர் கருதுகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் வேலையிழப்புக்கு ஆளாவோருக்கு காப்பீட்டுத் துறை மூலம் இழப்பீடு தரும் திட்டத்தை இவர் பரிந்துரைத்தார். பருவநிலை மாறுதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து எஸ்பிடி கட்சி சார்பில் பேச்சுகளில் கலந்துகொண்டு சில முடிவுகளை எடுக்க வைத்தார். அந்த முடிவுகளை மிகப் பெரிய சாதனை என்று இவரே பாராட்டிக்கொண்டார். பருவநிலை மாறுதலைத் தடுக்க இந்த நடவடிக்கைகள் ஓரளவுக்குக்கூட திருப்தியளிக்கவில்லை என்று செயல்பாட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில், இவரது தலைமையில் ஜெர்மனியின் எதிர்காலம் எப்படி இருக்கும் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

x