பரஸ்பரம் பழிசொல்லும் பிரிட்டனும் பிரான்ஸும்?


ஆங்கிலக் கால்வாயில் மூழ்கி 31 அகதிகள் உயிரிழந்த நிலையில், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பரஸ்பரம் குற்றம்சாட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

நேற்று (நவ.24) பிரான்ஸிலிருந்து பிரிட்டனை நோக்கிப் படகில் வந்த அகதிகளில் 31 பேர், வடக்கு பிரெஞ்சு கடற்கரை அருகே ஆங்கிலக் கால்வாய் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். முதலில் 27 பேர் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

இதுதொடர்பாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசியில் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இந்த விவகாரத்தில் பிரான்ஸின் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டதுடன், இதை அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியிருக்கிறார். இவ்விஷயத்தில் பிரிட்டன் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பிரான்ஸின் உள் துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனினும் கூறியிருக்கிறார்.

2018 முதல், பிரான்ஸிலிருந்து அகதிகள் ஆங்கிலக் கால்வாய் வழியே பிரிட்டனுக்குள் நுழைவது அதிகரித்திருக்கிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டுவருகின்றன. இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மட்டும் 31,500 பேர் பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்குப் படகின் மூலம் செல்ல முயன்றதாகவும், 7,800 பேர் கடலிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும் பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது இரு மடங்காகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை மோசமாகிவரும் சூழலில், இனியும் ஆங்கிலக் கால்வாய் ஒரு கல்லறையாக மாற அனுமதிக்கப்போவதில்லை எனச் சூளுரைத்திருக்கிறார் இம்மானுவேல் மெக்ரான். மறுபுறம், அகதிகள் மேற்கொள்ளும் இதுபோன்ற ஆபத்தான பயணங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பிரான்ஸை பிரிட்டன் வலியுறுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே, மீன்பிடிக்கும் உரிமைகள் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பிணக்குகள் நீடிக்கின்றன. எப்போதும் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும் ஆங்கிலக் கால்வாயில், அலைகளின் தீவிரமும் அதிகமாக இருக்கும். அகதிகளைப் படகில் அழைத்துவரும் சட்டவிரோத கும்பல்கள், பிரிட்டன் எல்லையைத் தொடுவதற்கு முன்பாகவே அவர்களைக் கடலில் இறக்கிவிடும் அவலமும் நடக்கிறது.

பொதுவாக, சிறிய படகுகளில்தான் அகதிகள் பிரிட்டனுக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள். குளிர்காலத்தில் அகதிகளின் படகுப் பயணம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது பெரிய படகுகளில் அகதிகள் அழைத்துச்செல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், இரு நாடுகளும் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதன் மூலம் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கலாம் என இரு நாடுகளும் பரிசீலித்துவருகின்றன.

x