ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்ற மக்தலேனா ஆண்டர்சன், அரைநாளில் தனது ராஜினாமாவை அறிவித்தார்.
சமூக ஜனநாய கட்சியைச் சேர்ந்த மக்தலேனா ஆன்டர்சன், க்ரீன் கட்சி உள்ளிட்ட கூட்டணிகளின் துணையோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனால், அரசிலிருந்து விலகுவதாக க்ரீன் கட்சி திடீரென முடிவெடுத்ததில், மக்தலேனா ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. க்ரீன் கட்சி பரிந்துரைந்த பட்ஜெட்டை நாடாளுமன்றம் நிராகரித்ததால், அரசிலிருந்து விலகுவதாக அக்கட்சி அறிவித்தது.
பதவி துறந்திருக்கும் மக்தலேனா, கூட்டணிக்கு பதிலாக ஒற்றைக் கட்சி ஆட்சி அமைக்கவிருப்பதாக நாடாளுமன்ற சபாநாயகரிடம் உறுதியளித்துள்ளார். ஆனால், அதன் நடைமுறை சாத்தியம் கேள்விக்குறியானதில், ஸ்வீடனின் அரசியல் ஸ்திரமின்மை தொடர்கிறது.
முன்னதாக, பிரதமராக இருந்த ஸ்டீபன் தலைமையிலான அரசு, நாடாளுமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இதையடுத்து, இவர் அண்மையில் ராஜினாமா செய்தார். எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால், கூட்டணி கணக்குகள் பலமுறை கூட்டி கழிக்கப்பட்டன.
அந்த வகையில், நிதியமைச்சராக இருந்த மக்தலேனா கூட்டணிகளின் பலத்தோடு பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார். ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் 349 இடங்களில் 175 ஆதரவு கிட்டினால் மட்டுமே பிரதமராக முடியும். மக்தலேனாவுக்கு போதிய ஆதரவு ஓட்டுகள் கிடைக்காதபோதும், எதிர்த்து வாக்களித்தவர்களில் பெரும்பான்மை இல்லாததால் பிரதமராக தேர்வானார்.
முன்னாள் நீச்சல் வீராங்கனையான மக்தலேனா, 90-களின் மத்தியில் அரசியலுக்கு வந்தவர். அப்போதைய பிரதமர் கோரன் பெர்சனின் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றியவர், பின்னர் சுயமாக அரசியல் களமாட ஆரம்பித்தார். அவரது கனவுப்படியே ஸ்வீடனின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அடைந்தார். ஆனால், கூட்டணி காலைவாரியதில் பதவி இழந்திருக்கிறார்.
இருப்பினும், மக்தலேனாவின் அரசியல் எதிர்நீச்சல் தொடர்வதாகவே தெரிகிறது.