அகண்ட இஸ்லாமிய தேசத்துக்கு அடித்தளமிடும் ஐஎஸ்-கோராசன்!


ஐஎஸ்-கோராசான்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே, கடந்த வருடத்தின் மத்தியில் அந்தக் கோரம் நிகழ்ந்தது. மகப்பேறு மருத்துவமனையில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில், தாயும் சேயுமாக 25 பேர் கொல்லப்பட்டனர். அதன் முதல் வருட நினைவின்போது, அதேபகுதியில் இன்னொரு கோரம் நிகழ்ந்தது. பள்ளியிலிருந்து வெளியேறும் மாணவியர் மத்தியிலான தாக்குதலில் 24 சிறுமிகள் கொல்லப்பட்டனர். ரத்தம் தோய்ந்த சீருடைகளும், சதைத் துணுக்குகள் படிந்த புத்தகங்களும், வெளியுலகுக்கு அபாயகரமான ஒரு செய்தியை அறிவித்தன. நவீன உலகத்தின் பெரும் தீவிரவாத இயக்கமாக, ஐஎஸ்-கோராசன் என்ற அமைப்பு தங்களை பிரகடனப்படுத்தியதே அந்தச் செய்தி.

எத்தனுக்கு எத்தன் - ஐஎஸ் கோராசன்

இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்தே ஆப்கனிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள், ஆட்சியமைக்கும் தாலிபான்கள் ஆகியோரைச் சுற்றியே சர்வதேசப் பார்வை இருந்தது. அவற்றின் மத்தியில் சத்தமின்றி வளர்ந்த கோராசன், காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பின் மூலமே கவனம் பெற்றது. அதன் பின்னர் தாலிபான் - கோராசன் என இரு அடிப்படைவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் அடித்துக்கொள்வதை, வெளியாரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இராக் - சிரியாவில் போராடிவந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மாதிரியாக, ஆப்கனில் உருவான ஐஎஸ்-கோராசன், எதற்காக தாலிபான்களைத் தாக்குகிறது என்பது பெரும் கேள்வியாக நிலவியது. அடிப்படைவாதத்திலும், காட்டுமிராண்டித்தனத்திலும் சம காலத்தில் தாலிபான்களை அடித்துக்கொள்ளவே முடியாது. அவர்களுக்கே சவால்விடும் அளவுக்கு இன்னொரு அடிப்படைவாத அமைப்பா என்று கோராசனின் இருப்பு பலருக்கும் ஆச்சரியம் தந்தது. வெளியார் மட்டுமல்ல, தாலிபானே இதை எதிர்பார்க்கவில்லை என்பது அதன் எதிர்வினைத் தடுமாற்றங்களில் புரிகிறது.

ஐஎஸ்-கோராசன் பயிற்சி முகாம்

கோராசன் உதயம்

அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அக்டோபர் இறுதியில் தனது அச்சத்தை வெளிப்படுத்தியது. ’அல்-காய்தா அமைப்பின் ’செப்டம்பர் 11’ தாக்குதலைவிட மோசமான ஒன்றை அமெரிக்கா மீது நிகழ்த்த ஐஎஸ்-கோராசன் அமைப்பு தயாராகி வருகிறது; அடுத்த 6 மாதத்தில் இது நடக்கும்’ என்பதுதான், பென்டகன் வெளியிட்ட எச்சரிக்கை. தாலிபான் அமைப்பைத் துணுக்குறச் செய்திருக்கும் இந்தச் செய்தி, உலக நாடுகளுக்கு, குறிப்பாக, மத்திய மற்றும் தெற்காசிய தேசங்களுக்குக் கவலைக்குரிய தகவலாகும். ஐஎஸ்-கோராசனின் அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை அமைக்கும் தொலைநோக்கில், இந்தப் பிராந்தியங்களே நேரடியாகப் பாதிக்கப்படப் போகின்றன.

‘கோராசன்’ என்பது மிகவும் தொன்மையான பதப் பிரயோகம். கி.மு 3-ம் நூற்றாண்டிலிருந்து அடையாளம் காணப்படும் இதற்கு, ‘சூரியனின் ஆளுகைக்குட்பட்ட நிலம்’ என்றும் அர்த்தம் உண்டு. ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய மார்க்கம் பரவுவதற்கு முன்பிருந்த, ’ஆர்யன்’ அடையாளத்தை இட்டு நிரப்பவும், கோராசன் பிரயோகத்தைப் பயன்படுத்தி உள்ளார்கள். அரேபியர்கள் இதை மாகாண நிலப்பரப்பின் அடையாளமாகப் பயன்படுத்தினார்கள். தங்கள் கனவான அகண்ட சாம்ராஜ்யத்தை உள்ளடக்கியதன் ஆதிப் பெயராகவும் கோராசன் என்பதன் பரப்பைச் சொல்வார்கள்.

கோராசன் அமைப்பு உருவானதிலும் தாலிபானுக்கு இணையான பின்னணி உண்டு. ’தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான்’ என்ற அமைப்பு, மார்க்கம் பயிலும் மாணவர்களுக்காகப் பாகிஸ்தானில் இயங்கி வந்தது. தாலிபானின் பால்ய தருணத்தைப் பிரதிபலித்த அந்த அமைப்பின் நோக்கம், மார்க்கத்தின் அடிப்படையான சித்தாந்தங்களைப் பரப்புவதாகவே இருந்தது. அவர்களில் ஒருசிலர் பயங்கரவாதத்துக்குத் துணைபோக, எஞ்சியவர்கள் பாகிஸ்தானால் விரட்டியடிக்கப்பட்டு ஆப்கனில் அடைக்கலமானார்கள். அங்கே, அடிப்படைவாதத்தில் தீவிரமாக இருந்த சலாஃபிக்களுடன் கைகோத்து ஐஎஸ்-கோராசனாக மாறினார்கள். இதில் படிப்படியாகப் பல்வேறு ஜிகாதி அமைப்பிலிருந்தும் பிரிந்தவர்கள் சேர்ந்தார்கள். தாலிபான் தனது அடிப்படைவாதக் கொள்கையிலிருந்து நீர்த்துப்போவதாகக் குற்றம்சாட்டிய அதன் தளபதிகள் சிலர், கணிசமான தாலிபான்களைப் பிரித்துக்கொண்டு கோராசனில் சேர்ந்தபோது இதன் பலம் வெகுவாக அதிகரித்தது. ஜூன் கணக்கின்படி சுமார் 10 ஆயிரம் பேர் கோராசனில் இருக்கிறார்கள்.

தாலிபான்கள்

தாலிபான் - கோராசன்

ஷரியத் சட்டம், கலிபா ஆட்சி, அகண்ட இஸ்லாமிய ராஜ்ஜியம் என அடிப்படைவாதிகளுக்கான இலக்கண நோக்கங்கள் அத்தனையும், தாலிபான் மற்றும் கோராசன்களுக்குப் பொதுவாகப் பொருந்தும். பிறகு, ஏன் தாலிபான்கள் மீது கோராசன்கள் போர் தொடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு இன்னும் ஆழமாகப் போக வேண்டும். அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் என்பது தாலிபான்களைப் பொறுத்தவரை ஆப்கன் எல்லைகளுக்குள் முடிந்துவிடுகிறது. கோராசனைப் பொறுத்தவரை அது இராக்கில் தொடங்கி, ஆப்கன், பாகிஸ்தான், இந்தியா வரை நீள்கிறது. மேலும், தாலிபான் இயக்கம் தொடங்கப்பட்டதன் நோக்கத்திலிருந்து விலகி வருவதாகவும் கோராசன் குற்றம்சாட்டுகிறது.

ஆப்கனை ஆளும் சொகுசுக்காகவும், மேற்கு நாடுகளின் நிதியுதவிக்காகவும், பெண்களைப் படிக்கவைப்பது, மனித உரிமைக்கு மதிப்பு தருவது என்பதான பொல்லாதப் போக்குகளில் தாலிபான் தடம்புரண்டிருப்பதாகக் கோராசன் கருதுகிறது. மகப்பேறு மருத்துவமனை, பள்ளி செல்லும் பெண்கள், வெள்ளிக்கிழமை தொழுகை நடக்கும் பள்ளிவாசல்கள் என தொடரும் கோராசனின் தற்கொலைப் படைத் தாக்குதலில் இருந்தே, அதன் உக்கிரத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

அல்-ஹிந்த் அபாயம்

கோராசன் அபாயம் ஆப்கானின் தாலிபான்களோடும், அவற்றை அடியோடு எதிர்க்கும் அமெரிக்காவோடும் முடிந்துவிடவில்லை. அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்காக அதன் கரங்கள் இந்தியா வரை நீள்கின்றன. இந்திய எல்லையில் வாலாட்டும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரோடு திருப்தி அடைந்துவிடுவார்கள். ஆனால், அகண்ட கனவில் இருக்கும் கோராசன்கள், வட இந்தியா முழுமைக்கும் குறிவைத்திருக்கிறார்கள். அதாவது, முகலாயர் ஆட்சிக் காலத்து இந்தியாவை அடையத் துடிக்கிறார்கள். அப்படி தாங்கள் உருவாக்கப்போகும் இந்திய மாகாணத்துக்கு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர் ’அல்-ஹிந்த்’!

அகண்ட சாம்ராஜ்யம் அமைப்பதோடு, கோராசன்கள் திருப்தியடையப்போவதில்லை. இஸ்லாமியர் அல்லாத எதிரிகளை அழிக்கப் போர் பிரகடனம் செய்வார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, உலகின் ஆகப்பெரும் அடிப்படைவாத பயங்கரவாதிகளாக அறியப்பட்ட தாலிபான்கள், தற்போது கோராசன் முன்பாகச் சிறுத்துப் போகிறார்கள். கோராசன் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தத்தளிக்கிறார்கள்.

பென்டகன்

ஆப்கன், அமெரிக்க கவலைகள்

மண், ரத்தம், சித்தாந்தம் எல்லாம் ஒன்றாக இருக்க, தாலிபான் - கோராசன் இடையே தாக்குதல்கள் தொடர்வதை ஆப்கன் அரசியலில் செல்வாக்கு செலுத்துவோர் விரும்பவில்லை. ஹக்கானி நெட்வொர்க் என்பது, காபூலை மையமாகக்கொண்டு செயல்படும் செழிப்பான அமைப்பு. மதகுருக்கள், அயல் தேசங்களிலிருந்து நிதியாதாரங்களைச் சேகரிப்பவர்கள் இந்த வலைப்பின்னலில் இருக்கிறார்கள். இவர்களின் தயவு தாலிபான், கோராசன் இருவருக்குமே வேண்டும் என்பதால், ஹக்கானி மூலமான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. ஆப்கனுக்கு அடுத்தபடியாக கோராசன் குறித்த கவலையில் இருக்கும் 2-வது தேசம் அமெரிக்கா.

அமெரிக்க மண்ணில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் நிகழ்வதற்குள் முந்திக்கொண்டு, கோராசனை அழிக்க வேண்டும் என்பதில் பென்டகன் உறுதியாக இருக்கிறது. அதற்கு, ஆப்கன் மண்ணில் நுழைவது அவசியம். குறைந்தது ட்ரோன் தாக்குதல் நடத்த தோதாக, அண்மை நாடுகளின் தயவுவேண்டும். அந்த வகையில் பாகிஸ்தானில் இருந்தபடி, கோராசன் மீதான தாக்குதலை அமெரிக்கா நடத்தக்கூடும். ஆனால், உலகின் மோசமான 12 பயங்கரவாத இயக்கங்கள் பாகிஸ்தானில் செயல்படுவதாக ஆதாரபூர்வமாக குற்றம்சாட்டிய அமெரிக்காவுக்கு இந்த முயற்சியில், பாக். அரசாலும், பயங்கரவாத அமைப்புகளாலும் சவால்கள் வரலாம்.

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்

’ஐஎஸ்-ஹிந்த்’ ஸ்லீப்பர் செல்கள்

அடுத்தபடியாக கோராசன் குறித்த கவலையில் பீடிக்கப்பட்டிருக்கும் தேசம் இந்தியாதான். தற்போது ஜம்மு - காஷ்மீரில் தொடரும் பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையிலான தாக்குதலில், இளைஞர்கள் மத்தியிலான புதிய இயக்கத்தின் தாக்கத்தை என்ஐஏ அமைப்பு கண்டறிந்திருக்கிறது. படித்த இளைஞர்கள் அதிக அளவில் சேர்ந்துவருவதும், அவர்களுக்கான உத்வேகமூட்டும் வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் எல்லைக்கு அப்பாலிருந்து கிடைப்பதும் கவலை தந்திருக்கின்றன.

சந்தேகத்தின் பெயரில் கைதான உமர் நிஷார் என்ற இளைஞரை, ஜம்மு காஷ்மீர் போலீஸார் என்ஐஏ வசம் ஒப்படைத்தனர். அங்கே உளவு அதிகாரிகளே அதிரும்படியான தகவல்கள் கிடைத்தன. ஐஎஸ்-கோராசன் பாதிப்பில், அதே பாணியிலான ஐஎஸ்-ஹிந்த் என்ற அமைப்பு சத்தமின்றி இந்தியாவில் செயல்படுவது அதன் பின்னர் தெரியவந்தது. வழக்கமான குண்டுவைப்பு மற்றும் துப்பாக்கிச் சூடுக்குப் பின்னர் ஓடிஒளியும் தீவிரவாதிகளாக இவர்கள் இல்லை. படித்துப் பட்டம் பெற்றவர்களாகவும், கவுரவமான பணியில் இருந்தபடியும், ஸ்லீப்பர் செல்களாக இயங்கி வந்திருக்கிறார்கள். நாசகார களச்செயல்பாடுகளுக்கு இதர தீவிரவாத அமைப்புகளைப் பணிக்கு அமர்த்தியிருக்கிறார்கள். இவர்களின் வலைப்பின்னலில் ஆந்திரம், கேரளம் வரை உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.

நவீன இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தந்தை என்று மேற்கு நாடுகளால் குறிப்பிடப்பெறும், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அப்துல்லா யூசுப் அஸாம் என்பவரின் கவர்ச்சிகரமான கொள்கைகளால், இந்த இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவரின் கருத்துகளைத் தொகுத்தே ஒசாமா பின்-லாடன் தனது அல்-காய்தா அமைப்புக்கு இளைஞர்களை சேர்த்திருக்கிறார் என்றால், இந்த அப்துல்லாவின் வீரியம் புரியும்.

ஆக, ஆப்கனிலிருந்து நீளும் அல்-ஹிந்த், காஷ்மீரில் காலூன்றிவிட்ட ஐஎஸ்-ஹிந்த் அமைப்பு என்று இருபெரும் பயங்கவரவாதச் சவால்கள் இந்தியாவின் முன் எழுந்திருக்கின்றன!

x