மீண்டும் சர்ச்சையில் ஜே.கே.ரவுலிங்


ஜே.கே.ரவுலிங்

திருநங்கையர் தொடர்பான சர்ச்சையில் மீண்டும் அடிபட்டிருக்கிறார், பிரபல ஹாரிபாட்டர் எழுத்தாளரான ஜே.கே.ரவுலிங்.

ஹாரிபாட்டர் வரிசை நாவல்களின் மூலம் கோடீஸ்வரரானவர் எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங். சிறார் மற்றும் பதின்மருக்கான இந்த நாவல்கள் அனைத்து வயதினரையும் கவர்ந்தவை. இந்த நாவல்கள் அதே வரிசையில் திரைப்படங்களாக வெளியாகி, வசூல் சாதனையில் சேர்ந்தன.

வாழ்க்கையின் அடித்தளத்திலிருந்து போராடி உச்சம் தொட்டிருக்கும் ரவுலிங், புனைவு எழுத்துகளுக்கு அப்பால் காத்திரமான கருத்துகளுக்கும் சொந்தக்காரர். அப்படியான கருத்துகள் சர்ச்சையையும் கூட்டியுள்ளன.

அந்த வரிசையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு, திருநங்கையர் குறித்து ரவுலிங் எழுதிய வலைப்பூ பதிவொன்று இன்றுவரை அதிர்ந்தபடி உள்ளது. உடற்கூறு அடிப்படையில் திருநங்கையரை, பெண்களிடமிருந்து விலக்கும் நோக்கில், தான் எழுதிய கருத்துகளிலிருந்து ரவுலிங் பின்வாங்கவில்லை. எனவே, அவருக்கு எதிராக திருநங்கையரும் அவர்களின் ஆதரவாளர்களும் அவ்வப்போது தங்கள் அதிருப்தியை தெரிவித்தபடி உள்ளனர்.

இங்கிலாந்தின் எடின்பர்க் நகரில் இருக்கும் ரவுலிங் வீடு முன்பாக கடந்த வெள்ளியன்று இரண்டொரு திருநங்கையர் கூடினார்கள். ‘ரவுலிங் வீடு முன்பாக எங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம்’ என்று புகைப்படத்துடன் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்கள். இந்த விவகாரம் பின்னர் பற்றிக்கொண்டது.

தனது வீட்டின் முகவரி மற்றும் அடையாளங்களை பொதுவெளியில் பகிர்ந்ததன் மூலம் தனது தனியுரிமைக்கு பங்கம் நேர்ந்திருப்பதாக சாடினார் ரவுலிங். இங்கிலாந்து போன்ற நாடுகளில் தனியுரிமைக்கு சட்டப் பாதுகாப்பு அதிகம். ரவுலிங்குக்கு ஆதரவாக அவரது வாசகர்களும், விசிறிகளும் பதிவுகள் இட, திருநங்கையர் ஆர்வலர்களுக்கு நெருக்கடியானது. இதையடுத்து தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக திங்களன்று(நவ.22) ஜே.கே.ரவுலிங் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஸ்கார்ட்லாண்ட் யார்ட் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால், இம்முறை ரவுலிங் ஆதரவாளர்கள் குரல் சொற்பமாகவே எதிரொலிக்கிறது. வழக்கமாக, ரவுலிங் கருத்துகளை விதந்தோதும் ஹாரிபாட்டர் நடிகர்கள் எவரும் வாய் திறக்கவில்லை. ரவுலிங்கும் தனது நிலையிலிருந்து பின்வாங்குவதாகவும் இல்லை.

x