தாலிபான்களை ஆதரிப்பது ஆபத்து!


தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்திருக்கும் தாலிபான்களை அதிகம் ஆதரித்தால், பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தீவிர மதச்சிந்தனை அமைப்புகளான தேரிக்-இ-தாலிபான், (டிடிபி) தேரிக்-இ-லப்பைக் (டிஎல்பி) ஆகியவற்றுக்கு வலு அதிகமாகிவிடும் என்று லாகூரில் நடந்த கருத்தரங்கில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 20-ல் நடந்த மாநாட்டின் ஒரு பகுதியாகக் கருத்தரங்கம் இடம்பெற்றது. தேரிக்-இ-தாலிபான், தேரிக்- இ-லப்பைக் அமைப்புகளுடன் பாகிஸ்தான் அரசு சமீபத்தில் பேச்சு நடத்தியதால். அவற்றின் ஆதரவாளர்கள் இந்தக் கருத்தரங்குக்கு அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்கவும் குழுக்களில் உறுப்பினர்களாக இடம்பெறவும் விரும்பிய சில ஆப்கானியர்களுக்கு, பாகிஸ்தான் அரசு விசா வழங்க மறுத்துவிட்டது. ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் சமரச தாலிபான் பேச்சுக்கான குழு உறுப்பினர் நாதர் நதேரி, ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அமைச்சர் அப்துல்லா கென்ஜானி, ஆப்கானிஸ்தானின் ‘டோலோ நியூஸ்’ ஊடகத்தின் இயக்குநர் லுட்ஃபுல்லா நஜாஃபிஜாடா ஆகியோர் முக்கியப் பங்கேற்பாளர்கள். காபூலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னதாகவே ‘விசா’ வாங்கி வைத்திருந்ததால், அவர்களால் வர முடிந்திருக்கிறது.

நிகழ்ச்சியில் பேசிய நஜாஃபிஜாடா, “ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்திருப்பது நம் அனைவருடைய கூட்டுத் தோல்வியாகும். தாலிபானும், உலகமும் எதிர்காலம் குறித்துத்தான் பேச வேண்டும். கடந்த ஆட்சிகளில் நடந்த தவறுகளைப் பேசுவதால் பயனில்லை. 2001-ல் தாங்கள் ஆண்ட ஆப்கானிஸ்தானுக்கும் 2021-ல் மீண்டும் தங்கள் கையில் கிடைத்திருக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் வித்தியாசம் இருப்பதைத் தாலிபான்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஆப்கானியர்கள் இந்த இடைக்காலத்தில் கல்வியில் முன்னேறி உலகின் பிற நாடுகளுடன் நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.

பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுமாறு ஆப்கானிஸ்தான் அரசுக்குப் பாகிஸ்தான் அரசு நெருக்குதல் தர வேண்டும்.

தாலிபான்கள் தங்களுடைய செயல்களில் முதிர்ச்சியைக் காட்ட வேண்டும். தங்களுடைய கருத்துகளை ஏற்க முடியாதவர்களும் இருக்கிறார்கள் என்பதை ஏற்கும் பக்குவம் வேண்டும். அமெரிக்காவை சதா தூற்றிக்கொண்டிருப்பதால் சோறு கிடைத்துவிடாது. ஆப்கானிஸ்தானியர்களிடம் திறமை உள்ளது. அமெரிக்கர்கள் முழுதாக நீங்கிவிட்டார்கள். எனவே, இந்த நிலையில் ஆப்கான் நினைத்தால் முன்னேறலாம் அல்லது பழமையைத் தீவிரமாகப் பின்பற்றி மேலும் பின்னடைவை அடையலாம்” என்றார்.

மேலும், “ஆப்கானிஸ்தானில் சமரசம் காண தோஹாவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் நடந்த சமரசப் பேச்சுகளில் பல குறைபாடுகள் ஏற்பட்டன. ஆப்கானிஸ்தானில் இப்போது பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளதற்கு 4 அம்சங்கள் காரணங்களாக இருக்கின்றன. 1. ஆப்கானிஸ்தானிலிருந்து முற்றாக வெளியேறிவிடுவது என்ற அமெரிக்காவின் கொள்கை, பல குறைகள் மலிந்தது. 2. தாலிபான்களுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை, வெளியுலகம் மெச்சிக் கொள்வதற்காக நடத்தப்பட்டது. தீர்வு காணும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை. 3. அதிபர் கனி தலைமையிலான அரசு தனது பதவிக்காலத்தில், வலிமையான அரசு நிறுவனங்களை உருவாக்கத் தவறிவிட்டது. 4. ஆப்கானியர்களின் நலன்களுக்கு உழைக்க வேண்டும் என்பதைவிட இந்திய வெளியுறவுக் கொள்கையைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே பாகிஸ்தான் அரசின் வெளியுறவுக் கொள்கையாக இருக்கிறது” என்று நஜாஃபிஜாடா கூறினார்.

“உலக நாடுகளின் பெரும் நீரோட்டத்தில் கலப்பதற்கு உதவியான அரசியல் முறைமைக்கு ஆப்கானிய அரசு மாற வேண்டும். அவ்விதம் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுமாறு ஆப்கானிஸ்தான் அரசுக்குப் பாகிஸ்தான் அரசு நெருக்குதல் தர வேண்டும்” என்று நதேரி கருத்து தெரிவித்தார்.

“உலக நாடுகள் தங்களுடைய ஆட்சிக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்பதற்காக ஆப்கானிய மக்களை தாலிபான்கள் பிணையாட்களைப் போல பிடித்துக்கொண்டிருக்கின்றனர்” என்று கூறிய கென்ஜானி, “ஆப்கானிஸ்தானுக்கு தாங்கள்தான் ஆட்சியாளர்கள் என்பதை உணர்ந்து, மக்களுக்கு நன்மை செய்யும் வழிகளைக் கையாள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

“தாலிபான்களுக்கு தங்களுடைய போர்த் தளபதிகளுக்கு, அவர்களுடைய வெற்றிக்கேற்ப எப்படி சிறப்புச் செய்ய வேண்டும என்று தெரியுமே தவிர, மக்களுக்காக உழைத்தெல்லாம் பழக்கமில்லை” என்று சுட்டிக்காட்டிய பாகிஸ்தான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அஃப்ரசியாப் கட்டக், “உலகத்திலேயே தனக்கென்று தனி சட்டம், முறையான அரசு முறைமை இல்லாத ஒரே நாடு இப்போது ஆப்கானிஸ்தான் தான். பாகிஸ்தான் தன்னுடைய மேற்கு எல்லை நெடுகிலும் முள்கம்பி வேலி போட்டு அடைத்துக்கொண்டிருக்கிறது. முழு ஆப்கானிஸ்தானும் இப்போது வேலியடைக்கப்பட்ட திறந்த வெளிச் சிறைச்சாலையாகிவிட்டது” என்றார்.

பாகிஸ்தானின் ஆப்கானியக் கொள்கையைப் பிரதமர் இம்ரான் கான் தீர்மானிப்பதில்லை, வேறு யாரோ தீர்மானிக்கிறார். தேரிக்-இ- தாலிபானைத் தோற்கடிக்க விரும்பினால், ஆப்கனின் தாலிபான்களை பாகிஸ்தான் அரசு ஆதரிக்கக் கூடாது. ஆப்கானிஸ்தானின் தாலிபானும் பாகிஸ்தானின் தேரிக்-இ-தாலிபானும் ஒரே நாணயத்தின் இருவேறு பக்கங்கள். தேரிக்-இ-தாலிபானுக்கும் தேரிக்-இ-லப்பைக்கும் இஸ்லாமிய அரசியல்தான் இலக்கு. இந்தப் பொதுநோக்கம் காரணமாகவே இரண்டும் தோழமை அமைப்புகளாக இருக்கின்றன எனக் கருதப்படுகிறது.

ராணுவத்தின் கண் அசைப்புக்கேற்பச் செயல்படும் அரசுதான் பாகிஸ்தானில் நடக்கிறது என்றே பரவலாகப் பேசப்பட்டாலும், கருத்தரங்குகளில் இப்படித் துணிகரமாகப் பல விஷயங்களும் விவாதிக்கப்படுவது வரவேற்புக்குரியது.

x