சீனாவின் திட்டத்தை எதிர்க்கும் பாகிஸ்தானியர்கள்!


உலகின் 160 நாடுகளைச் சாலை வழியாகவும் கடல் மார்க்கமாகவும் இணைக்கும் மாபெரும் சாலைப் போக்குவரத்துத் திட்டத்தை. சீனா அமல்படுத்தி வருகிறது. இதில். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் செயல்படுத்திவரும் குவாதர் துறைமுக வளர்ச்சித் திட்டத்துக்கு அம்மாகாண மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பலூச் மாகாண அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், மீனவர்கள் இதில் முன்னிலை வகிக்கின்றனர். ஒரு வாரமாக நடந்துவரும் போராட்டம் இன்று (நவ.21) உச்சம் பெற்றது.

துறைமுக திட்டத்துக்காக, நகரின் இதரப் பகுதி மக்களுக்குக் கிடைக்க வேண்டிய குடிநீரின் அளவைக் குறைத்துவிட்டதாகவும் நகர மக்களுடைய அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைக்கும் வகையில் அடிக்கடி மின் தடையை ஏற்படுத்தி, மின்சாரம் அனைத்தையும் சீனத் துறைமுகத் திட்டத்துக்குத் திருப்பிவிடுவதாகவும் மீனவர்களுடைய வாழ்க்கையைச் சீரழிப்பதாகவும் மக்கள் கொந்தளித்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல நகரின் முக்கியமான இடங்களில் புதிதாகக் காவல் சாவடிகளை ஏற்படுத்தி, மக்கள் அந்தப் பக்கமாகச் செல்லும்போது அடையாள அட்டையைக் காட்டுமாறு கேட்பது, இந்தப் பகுதியில் உங்களுக்கென்ன வேலை என்று கேட்டு தடுப்பதும் தங்களை வேதனையில் ஆழ்த்துவதாக அப்பகுதி மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

குவாதர் துறைமுகத்தைப் பெரிய கப்பல்கள் வந்து நிற்கும் அளவுக்கு விரிவுபடுத்துவதுடன் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏற்றவாறு செய்வதுதான் சீன - பாகிஸ்தான் திட்டம். இந்தத் திட்டத்துக்கு உதவியாக, சீனக் கப்பல்கள் மட்டும் கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாமல் தடுக்கப்படுகின்றனர். மீன்பாடு முழுவதையும் சீனாவே எடுத்துக்கொள்கிறது.

கோரிக்கைகள்

‘உள்ளூர் மக்களைத் தேவையில்லாமல் தடுத்து நிறுத்துவதை பாகிஸ்தான் அரசு நிறுத்த வேண்டும், காவல் சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும், நகர மக்களுக்குப் போதிய அளவு குடிநீர் வழங்க வேண்டும், தடையில்லா மின்சாரத்துக்கு வழி செய்ய வேண்டும், மக்ரான் கடற்கரையில் உள்ள மிகப் பெரிய சீன மீன்பிடிக் கப்பல்களை அகற்ற வேண்டும், பாகிஸ்தானின் கடல் பரப்பில் பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமே மீன்பிடிக்கும் உரிமை மீட்கப்பட வேண்டும், அருகில் உள்ள ஈரான் நாட்டில் எளிதாக நுழைவதற்கு வசதியாக பாஞ்ச்கர் எல்லையைத் திறந்துவிட வேண்டும்’ என்று பாகிஸ்தானியர்கள் போராடுகின்றனர்.

குவாதர் இழந்த உரிமையை மீட்க, மௌலானா இதாயத்துர் ரெஹ்மான் தலைமையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தங்களுடைய கோரிக்கைகளைப் பலமுறை வலியுறுத்தியும் பாகிஸ்தான் அரசு அதைத் தீர்ப்பதில் அக்கறை காட்டாமல் சீனர்களுக்கு வசதிகளைச் செய்து தருவதில் மட்டுமே கவனமாக இருக்கிறது என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குவாதர் மக்களுடைய அடிப்படைத் தேவைகளைக்கூட புறக்கணித்துவிட்டு சீனாவுக்கு அஞ்சி நடப்பதேன் என்று மக்கள் கேட்கின்றனர். உள்ளூர் மக்களுக்கு வேலையும் வருமானமும் இல்லாமல் தவிர்ப்பதை அரசு தடுக்க வேண்டும் என்றும் கோருகின்றனர். சீன, பாகிஸ்தான் பொருளாதார ஒத்துழைப்பில் குவாதர் துறைமுகத் திட்டம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்று இரு நாடுகளும் கூறி வருகின்றன. ஆனால், இந்தத் திட்டத்துக்கு காட்டும் சலுகைகளால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதைச் சீன அரசும் கண்டுகொள்ளவில்லை. திட்ட அமலில் சீனர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சீனா கட்டளையிட்டதால் நகரமே இப்போது பலத்த காவல் கோட்டையாக மாற்றப்பட்டிருக்கிறது.

மக்களுடைய போராட்டம் குறித்து பாகிஸ்தானின் ‘தி டான்’, ‘தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன்’, ‘ஜங்’ ஆகிய பத்திரிகைகள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுவருகின்றன. சீனாவின் திட்டத்தால் மக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சீனர்களுக்கு எதிரான உணர்வும் அதிகரித்துள்ளது. இதனால் சீனர்கள் மீது அவ்வப்போது தாக்குதலும் நடத்தப்படுகிறது.

தாக்குதல்கள்

கடந்த ஆகஸ்ட் மாதம், சீன வாகனத் தொடர்மீது தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் நடத்திய திடீர் தாக்குதலில், ஒரு சீனரும் 2 உள்ளூர் சிறுவர்களும் காயம் அடைந்தனர்.

கடந்த அக்டோபர் மாதம், குவாதரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த சீன வாகனங்கள் மீது துப்பாக்கி ஏந்திய ஒருவர் நடத்திய திடீர் தாக்குதலில் 14 பேர் இறந்தனர்.

2019-ல் குவாதர் துறைமுகத்துக்கு அருகில் ‘பேர்ல் கான்டினென்டல்’ என்ற ஹோட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானியக் கடற்படை வீரர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தக் காரணங்களுக்காகவே கடலிலும் உள்ளூர் மக்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிகிறது.

ஒரே சாலை – ஒரே பாதை

2013-ல் சீனா, ‘ஒரே சாலை – ஒரே பாதை’ திட்டத்தைத் தொடங்கியது. உலகின் 160 நாடுகளை கடல் வழியாகவும் சாலை மார்க்கமாகவும் இணைக்கும் இந்தத் திட்டம் ஆசியா, ஐரோப்பா, மத்திய ஆசியா, அமெரிக்கா ஆகிய கண்டங்களை இணைக்கும் பெருந் திட்டமாகும். 2049-ல் இதை முடிக்க சீனா திட்டமிட்டிருக்கிறது. சீனப் பொருட்களை நில வழியாக எளிதில் கொண்டுசெல்லவே இந்தத் திட்டம் என்று கூறப்பட்டாலும், சீன ராணுவத்தை விரைவாக எந்த நாட்டுக்கும் தரை, கடல் வழியாகவும் அனுப்பவும் உலக நாடுகள் மீது வல்லாதிக்கத்தை நிலைநாட்டவும் சீனா மிகுந்த தொலைநோக்குடன் இதை அமல்படுத்துகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்தத் திட்டம் முடிவடைந்தால் உலகின் 60 சதவீத மக்களுடன் சீனாவால் எளிதில் தொடர்புகொள்ள முடியும். உலகப் பொருளாதாரத்தின் 35 சதவீதம் இந்தப் பாதை வழியான சந்தையைப் பயன்படுத்தி வளரும். இப்போதே உலக நாடுகளிலேயே அதிக வருமானமுள்ள நாடாக அமெரிக்காவைப் பின் தள்ளிவிட்டு சீனா முதலிடத்துக்கு வந்திருக்கிறது. இந்தியாவைச் சுற்றியுள்ள நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளைச் சீனம் கூட்டுப் பொருளாதார திட்டங்களால் தனது கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. வங்கதேசத்துக்கும் கணிசமாக உதவிகளைச் செய்கிறது. மியான்மர் ராணுவத் தலைமை மீது பிற நாடுகள் தடை விதித்துவிடாத வண்ணம் பாதுகாப்பு தருகிறது.

இந்தியா சேராதது ஏன்?

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதியை சீனாவிடம் எப்போதோ வழங்கப்பட்டுவிட்டது. அந்தப் பகுதி வழியாக இந்தச் சாலை செல்கிறது. அத்துடன் இந்தியாவின் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்ய தொடர்ந்து முயல்கிறது. இவற்றால்தான் இந்தத் திட்டத்தில் சேர இந்தியா மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

x