கரோனா பெருந்தொற்றிலிருந்து உலகம் மீண்டுவிடும் எனும் நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில், செய்திகள் வெளியாகிவருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் தொற்றுப் பரவல் அதிகரித்துவருவது, சுகாதார நிபுணர்களைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. குறிப்பாக, கரோனா முதல் அலையின்போது தொற்றுப் பரவலின் மையப் பகுதியாக இருந்த ஐரோப்பாவில், இப்போது 4-வது அலை வேகமாகப் பரவிவருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் சில நாட்களுக்கு முன்பே எச்சரித்திருந்தது. இந்நிலையில், ஐரோப்பாவில் ஒவ்வொரு 3 நாட்களிலும் 10 லட்சம் பேர் தொற்றுக்குள்ளாகிவருகிறார்கள். குறிப்பாக, ஜெர்மனியில் மட்டும் தினமும் 50,000 பேர் கரோனா தொற்றுக்குள்ளாகிறார்கள்.
பெருந்தொற்று விஷயத்தில் அசட்டையாக இருப்பது நிச்சயம் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத்தான், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன.
ஜெர்மனியைப் பொறுத்தவரை தடுப்பூசி தொடர்பாக இருக்கும் தவறான கருத்துகள், கரோனா பரவல் அதிகரிக்க முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது. அங்கு 3-ல் ஒரு பங்கினர் கரோனா தடுப்பூசி குறித்து எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள். தற்போது தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்தவர்கள்தான். தவிர, கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றவும் ஜெர்மானியர்கள் பலர் மறுத்துவருகிறார்கள். ‘உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்’ என்று மக்களிடம் கெஞ்சும் நிலைக்குச் சென்றிருக்கிறார், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல். ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டேயிருக்கும் நோயாளிகளால், மருத்துவர்கள் கடும் பணிச் சுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
நிலைமை மோசமடைவதையடுத்து இலவசத் தொற்றுப் பரிசோதனை, சிகிச்சை என ஜெர்மனி அரசு தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது. மேலும், உணவகங்கள், திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசிச் சான்றிதழ் தேவை என்றும் கட்டுப்பாட்டின் பிடியை இறுக்கியிருக்கிறது. இதற்கும் பலர் எதிர்ப்பு தெரிவிப்பதுதான் விநோதம். தொற்று எண்ணிக்கை அதிகரித்துவரும் ஆஸ்திரியாவிலும் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்படுகின்றன. நெதர்லாந்தும் பகுதியளவில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியிருக்கிறது.
கரோனா முதல் அலை தந்த வலி மிகுந்த பாடத்தை, ஐரோப்பா இன்னமும் மறந்துவிடவில்லை. எனினும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் ஐரோப்பியர்கள் பலர் கரோனா குறித்த அச்சத்திலிருந்து விலகிவிட்டனர். அதுதான் இப்போது பிரச்சினைக்கு வழிவகுத்திருக்கிறது. எனவே, பெருந்தொற்று விஷயத்தில் அசட்டையாக இருப்பது நிச்சயம் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத்தான், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன. தவிர, அறிவியல்பூர்வமாகச் சிந்திக்காமல், ‘என் உடல் என் உரிமை’ எனும் தவறான கொள்கையுடன் தடுப்பூசியைத் தவிர்க்க நினைப்பவர்களால், ஒட்டுமொத்த தேசமும் பாதிக்கப்படும் என்பதையும் ஜெர்மனியின் இன்றைய நிலவரம் சுட்டிக்காட்டுகிறது.