ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் பறவைக் காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதால், லட்சக்கணக்கான பண்ணைக் கோழிகள் உள்ளிட்ட பறவைகள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில நாடுகளில், மனிதர்கள் மத்தியிலும் பறவைக் காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
அண்மையில், ஜப்பானில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதில் உடனடியாக ஒன்றரை லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன. அப்படியும் சீனா, தென்கொரியா போன்ற ஆசிய நாடுகளும், பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. இந்த 2 ஆசிய நாடுகளும் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவி இருப்பதை உறுதி செய்துள்ளன. பீதிக்கு ஆளான தென்கொரியா, சுமார் 8 லட்சம் பண்ணைக் கோழிகளை இதுவரை அழித்துள்ளது.
நார்வே, பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் பறவைக் காய்ச்சலை, அதன் ஆரம்ப கட்டத்தில் அடையாளம் கண்டதுடன் தலா சில ஆயிரம் கோழிகளை அழித்துள்ளன. இதற்கிடையே ஜப்பான், மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவலை உறுதி செய்துள்ளது.