நோபல் பரிசு புகழ் அபிஜித் பானர்ஜியின் புதிய சமையல் புத்தகம்!


எல்லோருக்கும்தான் பசிக்கிறது. எல்லோரும்தான் சாப்பிடுகிறோம். இருந்தாலும் இன்றுவரை, சமையலறை பெண்களுக்கானதாக மட்டுமே கருதப்படுகிறது. இத்தனைக்கும் பெரும்பாலான ஹோட்டல்களில், முதன்மை சமையலராக வேலை செய்பவர்கள் என்னமோ ஆண்கள்தான். ஆனாலும் அதே ’செஃப்’ வேலை முடிந்து வீடு திரும்பியதும், தனது இல்லத்தில் சமைப்பாரா என்றால் கேள்விக்குறியே!

அடுப்பங்கரை பெண்ணுக்கானது என்ற எண்ணம் இன்றுவரை மாறவில்லை. ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ என்ற திரைப்படம்கூட அண்மையில் இதை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்நிலையில், இத்தகைய தேய்வழக்கில் சற்று உப்பு காரம் சேர்த்துப் புரட்டிப்போட, தனது கரங்களை நீட்டியுள்ளார் நோபல் புகழ் அபிஜித் பானர்ஜி. இந்திய அமெரிக்கரான இவருக்கு, 2019-ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அபிஜித்துடன் சேர்த்து அவரது மனைவி எஸ்தர் மற்றும் மற்றொரு பொருளாதார ஆய்வாளரான மைக்கேலுக்கு, அப்போது நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இடதுசாரி சிந்தனையாளரான அபிஜித் பானர்ஜி, இந்தியப் பொருளாதாரம் மிகவும் பின்னடைந்திருப்பதை சுட்டிக்காட்டியபோது சர்ச்சை கிளம்பியது. அதன்பிறகு அவரைப் பலர் மறந்திருப்பார்கள். இந்நிலையில், மீண்டும் தலைப்புச் செய்தியாகி இருக்கிறார் அபிஜித். இம்முறை தனது புத்தகத்தின் வழியாகக் கவனம் ஈர்த்திருக்கிறார். அதுவும், ‘குக்கிங் டு சேவ் யுவர் லைஃப்’ (Cooking To Save Your Life) என்ற சமையல் குறித்த புத்தகம் மூலமாக.

சூப், காய்கறிகள், இறைச்சி வகைகள் என்பதாக ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தலைப்பிட்டு இப்புத்தகத்தை அபிஜித் எழுதியுள்ளார். ”உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் மகிழ்விக்கவும் காதலரை மயக்கவும்” என்றே, தனது புத்தகத்தில் குறும்புத்தனமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது மருமகனுக்கு உதவ, சமையல் குறிப்புகளைச் சொல்வதில் ஆரம்பித்திருக்கிறது இந்தப் புத்தகத்துக்கான முதல் பிடி சோறு. அதேநேரம் வெறும் சமையல் குறிப்பாக இல்லாமல், கூடுதல் சுவாரசியத்தைத் தூவலாமே என்று தோன்றவே பல்வேறு கருத்துகளைச் சேர்த்துச் சுவைபட எழுதியுள்ளார். உதாரணத்துக்கு, ’குர்தி’ என்ற மட்டன் சூப் குறித்து எழுதும்போது, “இது இந்தியாவின் மேற்கு கடற்கரை மாநிலமான குஜராத்தின் பிரபல குளிர்கால சூப் வகையைச் சேர்ந்தது. சைவ உணவுக்குப் பெயர்போன மாநிலத்தில், இப்படியொரு இறைச்சி சூப் வகை உள்ளது என்பதே அட்டகாசமான செய்தி இல்லையா!” என்று எழுதியுள்ளார்.

x