ஏன் வேலையைவிட்டு விலகுகிறார்கள் அமெரிக்கர்கள்?


அமெரிக்கா வித்தியாசமான நாடு என்பதில் சந்தேகமே இல்லை. கோவிட் பெருந்தொற்றுக்காக ஊரை அடைத்தாலும் எதிர்ப்பு காட்டுகிறார்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்றாலும் மறுக்கிறார்கள். அதே நேரத்தில், நாட்டு மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டதாக அரசைக் குறை சொல்லிப் போராட்டம் நடத்தவும் வீதிக்கு வருகிறார்கள். இந்நிலையில், வேலை விஷயத்திலும் அமெரிக்கர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை நிரூபித்துவருகிறார்கள். ஆம், கடந்த சில மாதங்களாக லட்சக்கணக்கானோர் பணியிலிருந்து விலகிவருகிறார்கள்.

அமெரிக்காவில், தற்போது விலைவாசி உயர்வு கடுமையான பிரச்சினையாகி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இருந்திராத வகையில் நுகர்வோர் விலை விகிதம், கடந்த ஆண்டைவிட 6.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. எரிபொருள் விலை உயர்வால், குடும்பங்கள் தங்களுடைய செலவுகளைக் கணிசமாகக் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. வீட்டு வாடகையும் கட்டுப்படியாகவில்லை. வாடகைக்கு வீடு கிடைப்பதும் குதிரைக் கொம்பாக இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் 4.6 சதவீதமாக இருக்கிறது.

கோவிட் 19 பெருந்தொற்றுக்குப் பிறகு எல்லா நாடுகளையும் போல, அமரிக்காவிலும் லட்சக்கணக்கானோர் வேலையிழந்தனர். வேலையிழந்ததால் வருமானத்தையும் இழந்தனர். அமெரிக்கப் பங்குச் சந்தைகளுமே உற்சாகம் இழந்தன. இந்தச் சூழலில், தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு ஏராளமானோருக்கு அது போடப்படுவதை அடுத்து ஊரடங்குகளில் தளர்வு, வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதி, வெளிநாட்டவர் வர அனுமதி என்று இயல்பு நிலைக்குத் திரும்புகிறது அமெரிக்கா. இன்னமும்கூட விமானப் பயணங்களும் கப்பல் போக்குவரத்தும் பழைய நிலையை எட்டவில்லை. உலக அளவிலான வர்த்தகம் இப்போதுதான் மீட்சி அடைந்துகொண்டிருக்கிறது.

லட்சக்கணக்கில் வெளியேறும் ஊழியர்கள்

இந்த நிலையில்தான் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 44 லட்சம் பேர், தாங்கள் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டதாக அந்நாட்டின் தொழிலாளர் நலத் துறை தெரிவித்திருக்கிறது. இது கிட்டத்தட்ட அமெரிக்காவில் வேலைக்குச் செல்வோரின் மொத்த எண்ணிக்கையில் 3 சதவீதம். செப்டம்பர் மாதத்தில் மட்டுமில்லை, ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களிலும் பலர் பணியிலிருந்து விலகியிருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் 42,36,000 பேர் வேலையைவிட்டு விலகியுள்ளனர். வேலையை விட்டால் வேறு வேலை கிடைப்பது நிச்சயம் என்கிற நிலையிருந்தால்தான், தொழிலாளர்கள் இப்படி முடிவெடுப்பார்கள்; எனவே, தொழிலாளர்கள் விரும்பிய இடத்தில், கேட்ட ஊதியம் கிடைக்கும் என்ற நிலையிலேயே இப்படி வேலையிலிருந்து விலகுகிறார்கள் என்று தொழிலாளர் நலத் துறை தெரிவிக்கிறது. அக்டோபர் மாதத்தில் தொழிலாளர்களின் ஒரு மணி நேர உழைப்புக்கான ஊதியம் 4.9 சதவீதம் அதிகரித்திருக்கிறது. விலைவாசி உயர்வுடன் ஒப்பிட்டால் இது போதாதுதான். ஆனால் ஊதியத்தையும் நிர்வாகங்கள் ஓரளவுக்காவது உயர்த்துகின்றன.

சீனாவுடனான வர்த்தக மோதல்களுக்குப் பிறகு, உள்நாட்டிலேயே ஆலைகளைத் தொடங்குமாறு அமெரிக்கப் பெருநிறுவனங்களுக்கு அரசு அழுத்தம் கொடுத்துவருகிறது. அமெரிக்கத் தொழிலதிபர்களும் சீன அரசின் போக்கினால் கவலையடைந்து, சொந்த நாட்டுக்கே திரும்ப வர முடிவு செய்துள்ளனர். அந்நாட்டில் செய்த முதலீடுகளும் திரும்பப் பெறப்படுகின்றன. இதனால், அமெரிக்காவிலேயே வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கோவிட் பெருந்தொற்று அச்சம் காரணமாக, ஏராளமான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த நாடுகளுக்கு அல்லது பூர்விக நாடுகளுக்குத் திரும்பிவிட்டனர். அப்படி காலியான பணியிடங்களை நிரப்ப தொழிலதிபர்கள் கூடுதல் சம்பளம் தரத் தயாராகின்றனர். தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்தால்தான், உள்நாட்டில் நுகர்வு அதிகரித்து தங்களுடைய வருவாய் மேலும் அதிகரிக்கும் என்பதையும் தொழில் துறையினர் உணர்ந்துள்ளனர்.

ஜூலை மாதத்தில் 111 லட்சம் வேலைவாய்ப்புகள் காலியாக இருந்தன. செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 73 லட்சமாகக் குறைந்தது. மூலப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள் மட்டுமல்லாமல், சாதனத்தை இயக்கத் தேவைப்படும் உள் கருவிகளுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. கார்கள், மொபைல் போன்கள் தயாரிப்பு வெகுவாக பாதிக்கப்படும் அளவுக்கு, சிப்(Chip) என்றழைக்கப்படும் சிலிக்கான் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை இதில் கூடுதல் பிரச்சினையாகியிருக்கிறது.

புரியாத புதிர்

பெருந்தொற்றுக்கால முடிவுக்குப் பிறகு, தொழில் துறையில் மீட்சி ஏற்படும்போது காலிப் பணியிடங்களுக்குத் தொழிலாளர்கள் கிடைத்துவிடுவார்கள் என்று நினைத்திருந்த வேளையில், லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலையை விடுவது அமெரிக்க அரசுக்கு மட்டுமல்ல பொருளாதார நிபுணர்களுக்கும் ஆலை நிர்வாகங்களுக்குகம் புரியாத புதிராக இருக்கிறது.

இதற்கு 2 முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. வேலையைவிட பெருந்தொற்றுக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வால் பலர் வேலையை விடுகின்றனர். ஓய்வுபெறும் வயதுக்கு சமீபகாலமாக வந்தவர்களும் வேலையை விட்டுவிடுகின்றனர். முன்பு பார்த்த பரபரப்பான வேலைக்குப் பதிலாக, எளிதான வேலைக்குச் செல்லலாம் என்ற முடிவில் பலர் வேலையை விடுகின்றனர். விலைவாசி உயர்வும் பிற பிரச்சினைகளும் பெரிதாகிவிட்டதால் ஊதியம் குறைந்தாலும் பரவாயில்லை, தங்களுடைய சொந்த ஊர் அல்லது தங்களுக்கு நன்கு பழக்கப்பட்ட ஊர்களில் போய் வேலைசெய்யலாம் என்ற முடிவினாலும் வேலையை விடுகின்றனர்.

பச்சிளம் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக வேலையை விடுகிறவர்கள், மாற்று வேலையில் சேர வேலையை விடுகிறவர்கள் என்றும் காரணங்கள் பலவாக இருக்கின்றன. வேலையை இழந்தாலும் அரசின் சமூக நலத் திட்டங்கள் மூலம் இடைக்காலத்தில் பட்டினியில்லாமல் சாப்பிட முடியும் என்கிற உத்தரவாதமும் இதற்கு முக்கியக் காரணம். தொழிலாளர்கள் பங்குச் சந்தையில் செய்த முதலீட்டுக்கு நல்ல வருவாய் கிடைத்ததாலும் வேலையை விடுகின்றனர் என்பதும் ஒரு காரணம்.

சிறுதொழில், வியாபாரம் பாதிப்பு

சிறு தொழில்கூடங்களிலும் கடைகளிலும் வேலை பார்ப்பவர்கள் இப்படி வேலையிலிருந்து செல்வது, நிறுவன உரிமையாளர்களுக்குப் பெரிய பிரச்சினையாகிவருகிறது. தயாரிப்புக்கான இடுபொருட்கள் பற்றாக்குறையும் சிறிய தொழிற்சாலைகளின் அதிபர்களை வாட்டுகிறது. தொழிலாளர்களை ஈர்ப்பதற்காக ஊதியத்தை உயர்த்துவது, பணி நேரத்தைக் குறைப்பது போன்ற சலுகைகளை நிறுவனங்கள், தொழிலாளர்களின் நேர்காணலின்போது அறிவிக்கின்றன. வேலைக்குத் தகுதியான, அனுபவம் உள்ள ஆட்கள் கிடைத்தால் ஊதியம் ஒரு பிரச்சினையே இல்லை, பேசிக்கொள்ளலாம் வாருங்கள் என்று இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அதிகமாகி வருகின்றன. இதுவே அமெரிக்காவில் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறது. ஆனால், பல்வேறு மட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பணி விலகல்கள் இருப்பதுதான் தற்போது அமெரிக்காவுக்குச் சிக்கலை ஏற்படுத்திவருகிறது.

x