தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சியில், கடைசி அதிபராகப் பதவி வகித்த பிரடெரிக் வில்லெம் டி கிளார்க் (18.03.1936-11.11.2021) நவ.11-ல் மரணம் அடைந்தார். நிறவெறி ஆட்சியின் சகாப்தத்தில் வெள்ளையர் அல்லாத இனத்தவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக, கடைசியாக ஒருமுறை அவர் மன்னிப்பு கோரியது, அவருடைய மரணத்துக்குப் பிறகு காணொலியாக வெளியிடப்பட்டது. 1948 முதல் 1991 வரையில், தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மை வெள்ளையர்களின் நிறவெறி அல்லது இன ஒதுக்கல் ஆட்சி நடந்தது. “கறுப்பின, பழுப்பு நிறத்தினர், இந்திய வம்சாவழியின மக்கள் தென்னாப்பிரிக்காவில் அடைந்த வேதனைகளுக்கும் பட்ட கொடுமைகளுக்கும் அவமரியாதைகளுக்கும் எந்தவித நிபந்தனையுமின்றி மன்னிப்பு கோருகிறேன்” என்று அக்காணொலியில் அவர் கூறியிருந்தார். இதற்கு முன்னரும் இப்படிப் பலமுறை மன்னிப்பு கோரியிருக்கிறார்.
நிறவெறி ஆட்சியில் நடந்தது என்ன?
தென்னாப்பிரிக்காவில் மக்கள் அவர்களுடைய இனம், நிறம் அடிப்படையில் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டனர். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளில்கூட இன அடிப்படையில்தான் மக்கள் படிக்க வேண்டும், சிகிச்சை பெற வேண்டும். உணவகங்களில் சாப்பிடுவது, பொது நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் குடிப்பது, பொதுக் குளியலறை – கழிப்பறைகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றிலும் அந்தந்த இனத்தவர் மற்றவர்களுடையதைப் பயன்படுத்தக்கூடாது. திரையரங்க இருக்கைகள், பேருந்து இருக்கைகள், குடியிருப்பதற்கான வாடகை வீடுகள், தங்குவதற்கான விடுதி அறைகள், சொந்தமாக வாங்குவதற்கான வீடுகள் போன்றவைகூட இன அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்று அரசு அமல்படுத்தியது. தொட்டில் முதல் சுடுகாடு வரை இன ஒதுக்கல் நிலவியது.
நிறவெறி அரசை முடிவுக்குக் கொண்டுவந்ததில் மக்களுடைய போராட்டம் முழு முதல் காரணம் என்றாலும், யாரும் எதிர்பாராத வகையில் அதை வெகு விரைவாகச் சாத்தியமாக்கியவர் கிளார்க்.
இன அடிப்படையில் படிநிலை உருவாக்கப்பட்டு, ஒரு இனம் இன்னொரு இனத்துக்கு கட்டுப்பட்டது என்றாக்கப்பட்டது, ஆனால் அனைவரும் வெள்ளை இனத்தவருக்கு சேவை செய்ய வேண்டியவர்கள் என்று விதிக்கப்பட்டது. இந்த நிறவெறிக் கொள்கையைத்தான் உலகம் கண்டித்தது. ஒரே சமயத்தில் இது இனவெறியாகவும் நிறவெறியாகவும் மக்களை வாட்டியது.
அமைதிக்கான நோபல் விருது
நிறவெறி அரசாக இருந்ததை, அனைத்து இனத்தவருக்கும் பொதுவான ஜனநாயக அரசாக மாற்றியதற்கு மக்களுடைய போராட்டம் முழு முதல் காரணம் என்றாலும், யாரும் எதிர்பாராத வகையில் அதை வெகு விரைவாகச் சாத்தியமாக்கியவர் கிளார்க். இந்த மாற்றத்துக்காக 1993-ல் அமைதிக்கான நோபல் விருதை நெல்சன் மண்டேலாவுடன் அவர் பகிர்ந்துகொண்டார். நிறவெறி அரசிலிருந்து ஜனநாயக அரசாக தென்னாப்பிரிக்கா மாறுவது குறித்து, 1990 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை தென்னாப்பிரிக்க மக்களை மட்டுமல்ல, உலக மக்களையே வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. அரசமைப்புச் சட்ட அடிப்படையிலான முழு ஜனநாயகத்துக்கான பேச்சு, அரசியல் கட்சிகளுடன் அதன் பிறகு தொடங்கியது. தென்னாப்பிரிக்காவில் வாழும் அனைத்து மக்களுக்கும் இன, மொழி, மத வேறுபாடில்லாமல் சம உரிமைகளைப் புதிய அரசு அளித்தது.
அவையில் இருந்த வெள்ளையின உறுப்பினர்கள் தங்களுடைய காதுகளையே நம்ப முடியாமல் கிளார்க்கின் பேச்சைக் கேட்டனர். பலருக்கு எதுவுமே சொல்லத் தோன்றாமல் நெஞ்சடைத்தது. பலர் அவையிலிருந்து வெளியேறினர். அவரிடம் தென்பட்ட அந்த மாற்றம் பலரையும் வியக்கவைத்ததில் ஆச்சரியமில்லை. காரணம், நிறவெறிக்கு ஆதரவான நிலைப்பாட்டில்தான் அவர் பல காலம் இருந்தார். உலக ஜனநாயகவாதிகளால் பலமுறை கடுமையாகக் கண்டிக்கப்பட்ட பிக் போத்தாவின் அரசில், தொடர்ந்து பல்வேறு துறைகளில் அமைச்சராக கிளார்க் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மண்டேலாவின் பாராட்டு
இனவெறி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதாக கிளார்க் அறிவித்த 9 நாட்களுக்குப் பிறகு, 27 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறையில் இருந்த தென்னாப்பிரிக்க காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலா விடுதலை பெற்றார். “நிறவெறிக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்த அரசில் இருந்த கிளார்க், அதே நிறவெறி அரசைப் பதவியிலிருந்து அகற்ற முன்வந்தது அரிய செயல்” என்று மண்டேலா தன்னுடைய சுயசரிதையில் பாராட்டியிருக்கிறார். ஆனால், இருவரும் அரசியல்ரீதியாக கொள்கைகளில் தொடர்ந்து முரண்பட்டனர். இதனால் அவர்களுடைய நட்புறவு முறிந்தது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிபர் தேர்தலில் மண்டேலா அதிபரானார். அந்தத் தேர்தலில்தான் அனைத்து கறுப்பின மக்களும் முதல்முறையாக வாக்களித்தனர். நிறவெறி அரசு, ஜனநாயக அரசாக மிகவும் அமைதியான முறையில் மாறியது.
தொடரும் கண்டனங்கள்
ஆனாலும் கறுப்பின இளைஞர்கள், கிளார்க் சார்ந்த தேசியக் கட்சி கடைபிடித்த நிறவெறிக் கொள்கைக்காக அவரைக் கண்டிக்கின்றனர். இனி மேற்கொண்டு நிறவெறியைக் கைக்கொள்ள முடியாது என்ற நிலை வந்த பிறகே வெள்ளையர்கள் இறங்கிவந்தனர் என்று தொடர்ந்து விமர்சிக்கின்றனர். காந்திய வழியில், அகிம்சையைக் கடைபிடித்துப் போராடிய மண்டேலா, சாத்வீகமான போராட்ட முறைகளுக்கு நிரந்தரப் பலன் உண்டு என்பதை ஆப்பிரிக்க மண்ணில் நிரூபித்தார். நிறவெறி அரசுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடை உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி உட்பட அந்நாட்டு விளையாட்டுக் குழுக்களும் பிற நாடுகளால் பல ஆண்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டன. ‘நிறவெறிக் கொள்கையைக் கடைபிடித்ததற்காக உரிய வகையில் தண்டிக்காமல் விடப்பட்டார் கிளார்க்’ எனும் ஆதங்கம் இன்றும் பலரிடம் உண்டு.
நிறவெறிக் குடும்பம்
பிரெடரிக் வில்லெம் டி கிளார்க், ஜோகன்ஸ்பர்க் நகரில் பிறந்தார். வெள்ளை நிறத்தவரான அவர்கள் டச்சு (ஹாலந்து) நாட்டிலிருந்து குடியேறியவர்கள். கிளார்க்கின் தந்தை நிறவெறியைத் தீவிரமாகக் கடைப்பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர். சிறிது காலம் அவர் இடைக்கால அதிபராகக்கூட இருந்திருக்கிறார். நிறவெறியை நிறுவனப்படுத்திய தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரடெரிக் வில்லெம் கிளார்க், சட்டம் படித்தவர். நிறவெறி அரசில் பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்த அவர் 1989-ல் அதிபரானார். பி.டபிள்யூ. போத்தா, உடல் நலிவு காரணமாக தேசியக் கட்சியின் (நேஷனல் பார்ட்டி) தலைவர் பதவியையும் அடுத்து அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தார். இவ்விரு பதவிகளிலும் கிளார்க் அமர்ந்தார். போத்தாவின் நிறவெறிக் கொள்கையையே இவரும் தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதுதான், இன ஒதுக்கல் கொள்கையைக் கைவிடுவது என்ற முடிவை அவர் எடுத்தார். வெவ்வேறு இனத்தவருக்கு இடையிலான பகைமை உள்நாட்டுப் போருக்கு இட்டுச் செல்கிறது என்பதைப் புரிந்துகொண்ட பிறகே, இந்த முடிவை எடுத்தார். நிறவெறிக்கு எதிராகப் போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்தார். அணு ஆயுத தயாரிப்புத் திட்டத்தைக்கூட அவர் கைவிட்டார்.
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் என்பதால்தான், அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யக்கூடாது என்ற அளவுக்குக் கண்டனங்கள் குவிந்துவருகின்றன.
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் நெல்சன் மண்டேலாவைச் சிறையில் சந்தித்து, 3 மணி நேரம் அவருடன் விவாதித்தார். இடைக்கால அரசு எப்படி இருக்க வேண்டும் என்று இருவரும் தீர்மானித்தனர். வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை உண்டு என்று இருவரும் முடிவெடுத்தனர். அடுத்து பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமைந்த தேசிய ஒற்றுமை அரசில், மண்டேலா அதிபராகவும் கிளார்க் துணை அதிபராகவும் பதவியேற்றனர். மண்டேலா அரசின் தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை கிளார்க் ஆதரித்தார். ஆனால், மனித உரிமைகள் மீறல் குற்றங்களை விசாரிக்க ஆணையம் அமைப்பதையும், தவறுகளுக்காக மன்னிப்பு கோரி சமரசமாகப் போக வேண்டும் என்பதையும் ஏற்கவில்லை. நிறவெறிக் குற்றங்களைச் செய்த அனைவருக்கும் புதிய அரசு பொது மன்னிப்பு வழங்கிவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். 1996-ல், மண்டேலாவின் புதிய அரசியல் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசிலிருந்து வெளியேறினார். அடுத்த ஆண்டு கட்சியைக் கலைத்தார். பிறகு அதே கட்சி, புதிய தேசியக் கட்சியாக மறு அவதாரம் எடுத்தது. 1997-ல் அரசியலிலிருந்து முற்றாக ஓய்வு பெற்றார் கிளார்க்.
வெள்ளையர்களுக்கும் கோபம்
நிறவெறி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம், தொடர்ந்து ஆதரித்த தங்களுக்கு கிளார்க் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்று வெள்ளை இனத்தவரும் அவர் மீது கோபம் கொண்டனர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் அரசுகள் ஒன்றன்பின் ஒன்றாக மக்களுடைய ஆதரவை இழந்ததும், சோவியத் ஒன்றியம் மீண்டும் பல நாடுகளாகச் சிதைவுற்றதும் கிளார்க் இந்த முடிவை எடுக்க முக்கிய காரணம். நிறவெறி அரசு பதவி விலகினால், கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சி அமைத்துவிடுவார்கள் என்றே பல ஆண்டுகளாக அவர் கருதிவந்தார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் ஒன்றியத்திலும் நிகழ்ந்த சம்பவங்களைப் பார்த்த பிறகே, தென்னாப்பிரிக்காவில் கம்யூனிஸ்ட்டுகள் செல்வாக்கு இருக்காது என்ற முடிவுக்கு வந்தார்.
1994-ல் பல்வேறு இனத்தவரும் பங்குகொள்ளும் தேர்தல் நடந்தது. ஆனால், அந்தத் தேர்தலுக்கு முன்னால் நடந்த வன்செயல்களைக் கட்டுப்படுத்தத் தவறினார் என்பதும் கிளார்க் மீதான பெருங்குற்றச்சாட்டு. இப்படிப் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் என்பதால்தான், அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யக்கூடாது என்ற அளவுக்குக் கண்டனங்கள் குவிந்துவருகின்றன.
பிற சர்ச்சைகள்
அரசியலிலிருந்து ஓய்வுபெற்று நீண்ட காலமாகிவிட்ட பிறகும், 2016 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது தெரிவித்த கருத்துக்காக கிளார்க் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். அப்போதைய அதிபர் ஜேக்கப் ஜுமாவும் அவருடைய சகாக்களும் தங்களுடைய சொந்தநலனில் மட்டுமே அக்கறையாக இருந்து, ஜனநாயகத்தைச் சீர்குலைக்கின்றனர் என்று அவர் தெரிவித்த கருத்து பலத்த கண்டனத்துக்கு உள்ளானது.
‘ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறபடி நிறவெறி அல்லது நிற ஒதுக்கல் என்பது, மனித குலத்துக்கு எதிரான பெரிய குற்றம் என்று நான் கருதவில்லை’ என்று கடந்த ஆண்டு கிளார்க் கூறியிருந்தது, மீண்டும் கடும் விமர்சனங்களைக் கிளப்பியது.
1997-ல், யேல் சட்ட பல்கலைக்கழகத்தில் டி கிளார்க்குக்குப் பதவி தரப்பட்டது. அதை நிறவெறி எதிர்ப்பாளர்கள் கடுமையாகக் கண்டித்தனர். அதனால், அதை ஏற்க மறுத்துவிட்டார். அவருடைய மனைவி மரீகி, 38 ஆண்டுக்கால மணவாழ்க்கையை முறித்துக் கொண்டார். காரணம், கிரேக்க கப்பல் அதிபர் டோனி ஜார்ஜியாடஸ் என்பவருடைய மனைவி எலிடா ஜார்ஜியாடஸுடன் கிளார்க்குக்கு இருந்த கூடாநட்பை அவர் தெரிந்து கொண்டுவிட்டார். மணமுறிவுக்குப் பிறகு, எலிடாவை மறுமணம் செய்துகொண்டார் கிளார்க். கிளார்க்கின் தேர்தல் செலவுக்கும் அவர் தலைமையில் இருந்த தேசியக் கட்சிக்கும் நிறைய நன்கொடைகளை அளித்தவர் டோனி ஜார்ஜியாடஸ் என்பது குறிப்பிடத்தக்கது.