வேலைநேரம் முடிந்த பிறகும் உங்கள் நிறுவன மேலாளர் உங்களை அழைத்துப் பேசுவதும், குறுஞ்செய்தி அனுப்புவதும் உங்களைக் கடுப்பேற்றுகிறதா? அப்படியானால், நீங்கள் போர்த்துகீசிய நாட்டுக்குக் குடிபெயர்தல் குறித்து சீரியசாக யோசிக்க வேண்டியதுதான்.
போர்த்துகீசிய நாடாளுமன்றம் டிஜிட்டல் உலகுக்கு ஏற்றார்போல, அந்நாட்டு தொழிலாளர் சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டுவந்துள்ளது. அவற்றில் ஒன்று, ஊழியர்களுக்குச் சாதகமாக உள்ளது. வேலைநேரம் கடந்த பிறகு ஊழியரை நிறுவனத்தினர் தொடர்பு கொள்ளும்பட்சத்தில், நிறுவனத்தினருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தின் தீவிரம் குறைந்து, போர்த்துகீசிய நாட்டில் பழையபடி ஊழியர்கள் அலுவலகம் சென்று முழுநேரமாக பணிபுரியும் வழக்கம் தொடங்கிவிட்டது. ஆனாலும் இன்னமும் வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்யும் ஊழியர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கு அலுவலகச் சூழலிலிருந்து வேலை செய்வதுபோன்ற கறாரான வேலைநேரம் கடைபிடிக்கப்படுவதில்லை. இதுகுறித்துத் தொடர்ந்து ஊழியர்கள் சார்பில் புகார் எழுந்ததை அடுத்து, போர்த்துகீசிய நாடாளுமன்றம் புதிய சட்டம் பிறப்பித்துள்ளது. நாளை (நவ.12) முதல் இந்தச் சட்டம் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொழிலாளர் சட்டத்தின்படி வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்யும் ஊழியர்களின் வீட்டுச் சமையல் எரிவாயு கட்டணம், மின் கட்டணம், இணையப் பயன்பாட்டுக் கட்டணம் ஆகியவற்றையும் நிறுவனம் ஏற்க வேண்டும் என்றும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலன் சார்ந்த சட்ட திட்டங்கள், போர்த்துகீசிய நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.