பணக்காரச் சமூகம் நினைத்தால் பட்டினியை ஒழிக்கலாம்!


உலகில் வறுமைக்கோட்டுக்கும்கீழே வாழும் 75 கோடி ஏழைகள் பட்டினி கிடக்காமல் இருக்க, புதிய யோசனையை முன்வைத்திருக்கிறார் மெக்ஸிகோ அதிபர் ஆந்திரேஸ் மேனுவல் லோபஸ் ஓப்ரடார். பணக்கார நாடுகள், பெரும் பணக்காரர்கள், தொழில் நிறுவனங்கள் தங்கள் வருவாயில் ஒருபகுதியை ஒதுக்கினாலே வறுமையை ஒழித்துவிடலாம் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த யோசனை பல தரப்பினரிடமிருந்து வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இடதுசாரி சிந்தனையுள்ள ஆந்திரேஸ், மெக்ஸிகோ அதிபராகப் பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகின்றன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிப் பேசுகையில், இந்த யோசனையை அவர் வெளியிட்டார்.

பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்துக்கு இந்த மாதம் தலைமை வகிப்பது மெக்ஸிகோ என்பதால், நேற்று (நவ.9) தலைமை உரையாற்றினார் ஆந்திரேஸ். அப்போது அவர் தெரிவித்த கருத்துகள் பலரையும் சிந்திக்கவைத்திருக்கின்றன.

“அன்றாடம் 2 டாலருக்கும் குறைவாக வருவாய் ஈட்டுகின்ற - அல்லது வருவாயே இல்லாத - ஏழைகள் எண்ணிக்கை சுமார் 75 கோடி. இவர்கள் பட்டினி கிடக்காமல் சாப்பிடுவதற்கு உதவ வேண்டியது உலக சமுதாயத்தின் கடமை. உலகின் பெரும் பணக்காரர்கள் தங்களுடைய ஆண்டு வருமானத்திலிருந்து 4 சதவீதத்தையும், உலகின் ஆயிரம் பெரிய தொழில் நிறுவனங்கள் வருவாயில் 4 சதவீதத்தையும், ஜி-20 அமைப்பில் உள்ள நாடுகள் அனைத்தும் தங்களுடைய ஜிடிபியில் 0.5 சதவீதத்தையும் தந்தால் அந்த மொத்த நிதியைக் கொண்டு பட்டினியிலிருந்து ஏழை மக்களைக் காக்கலாம்” என்று கூறியிருக்கிறார் ஆந்திரேஸ்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “உலக நன்மைக்காக, உலக நாடுகளிடையே ஒற்றுமை ஏற்படுவதற்காகத் தொடரப்பட்ட இந்த அமைப்பு ஏழைகளுக்காக, ஆகச் சிறந்த சேவை எதையும் இதுவரை செய்துவிடவில்லை. நியாயம் வழங்க இத்தனை ஆண்டுகள் தாமதமாகிவிட்டதே என்று வருந்த வேண்டியதில்லை. இனியாவது இதைச் செய்வோம். ஏழைகள், விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், ஏன் இந்த நிலைமைக்கு வந்தார்கள் என்று விவாதிப்பதுடன், அவர்கள் இப்படி ஏழைகளாவதன் விளைவுகளையும் நாம் விவாதித்தாக வேண்டும்.

உலகம் இன்று சந்தித்துவரும் பெரிய பிரச்சினை ஊழல். இதை நாம் குறைத்து மதிப்பிடுவதோ புறக்கணிப்பதோ உண்மையைப் பார்க்க மறுப்பதற்குச் சமம் ஆகும். இதனால் நாடுகளுக்கு இடையேயும் நாட்டிலேயே வெவ்வேறு சமுதாயங்களுக்கு இடையேயும் ஏற்றத்தாழ்வுகளும் வறுமையும் வன்செயல்களும், இவற்றின் காரணமாக மக்கள் தங்கள் சொந்த நாட்டைவிட்டு பாதுகாப்பான நாடுகளுக்குக் குடிபெயர்வதும் நடக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்றுக்கான தடுப்பூசி மருந்து எல்லா நாடுகளுக்கும் ஒரே சமயத்தில் கிடைக்கவில்லை. சிறிய நாடுகளைப் பெரிய நாடுகள் புறக்கணிக்கின்றன. எல்லா நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்களுக்கு மட்டுமே தடுப்பூசியில் முக்கியத்துவம் அளிக்கின்றன. மருந்து உற்பத்தி நிறுவனங்களும், நாடுகளும் குறுகிய காலத்தில் லாபம் நிறைய சம்பாதிக்கப்பார்க்கின்றன. இந்த லாபத்துக்காக ஒற்றுமையுணர்வு வலுவிழந்துவருகிறது. நாகரிகம் அடைந்த சமுதாயமாக இருந்த நாம் இப்போது காட்டுமிராண்டிகள் காலத்துக்குச் செல்கிறோம். நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் - மற்றவர்களுடன் சேராமல் தனியர்களாக, அறச் சிந்தனையைக் கைவிட்டவர்களாக, மனிதகுலத்தின் அவலங்களுக்கு முகம்கொடுத்து உதவாமல் முதுகைக் காட்டிக்கொண்டு, துயரங்களைப் பார்க்க மறுத்து முன்னேறுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், “இந்தப் போக்குகளை தடுக்க முடியவில்லை என்றால், மக்களின் எந்தப் பிரச்சினையையும் நம்மால் (ஐக்கிய நாடுகள் சபையால்) தீர்க்கவே முடியாது” என்றும் எச்சரித்திருக்கிறார் ஆந்திரேஸ்.

மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்தும் கரீபியக் கடலோர நாடுகளிலிருந்தும் அன்றாடம் ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறி, மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். அமெரிக்காவில் தங்களுக்குப் புகலிடம் கோருகின்றனர். மத்திய அமெரிக்காவிலும் கரீபியக் கடலோர நாடுகளிலும் நிலவும் பொருளாதார நிலைமையால், வேலைவாய்ப்புகளையும் வருமானத்தையும் இழந்து அகதிகளாக வருகின்றனர். ஆயுதமேந்திய சட்டவிரோத கும்பல்களின் மோதல்களாலும், உள்நாட்டுப் போர்களாலும், கலவரங்களாலும் எதிர்காலம் பற்றிய அச்சத்துடன் உயிரைக் காத்துக்கொள்ள பல நாடுகளிலிருந்தும் அமெரிக்காவுக்கு அகதிகளாக வருகின்றனர். இது, மிகப் பெரிய மனிதாபிமான பிரச்சினையாக மாறிக்கொண்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இருந்திராத அளவுக்குச் சாரிசாரியாக அகதிகள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.

அமெரிக்க அரசோ, பாதுகாப்புப் படையினரைக் கொண்டு அவர்களைத் தங்கள் நாட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிக்கொண்டிருக்கிறது. அகதிகள் தங்கள் நாட்டு வழியாகச் செல்வதை முதலில் அனுமதித்த மெக்ஸிகோவும், இப்போது ராணுவத்தைக் கொண்டு நாட்டின் வடக்கு, தெற்கு எல்லைகளில் அகதிகள் அமெரிக்காவுக்குள் செல்ல முடியாமல் தடுக்கிறது.

இந்தச் சூழலில் இப்படி ஒரு யோசனையை முன்வைத்திருக்கும் மெக்ஸிகோ அதிபர், இதன் மூலம் வறுமை ஒழிப்பில் மெகா திட்டத்தை முன்மொழிந்திருக்கிறார். உலகின் பணக்காரச் சமூகத்தினர் மனசாட்சியுடன் இதை முன்னெடுத்துச்செல்வார்களா, பார்க்கலாம்!

x