கனடாவில் உலகின் முதல் ‘பருவநிலை மாற்ற நோயாளி’ : மருத்துவர்கள் கவலையுடன் அறிவிப்பு


சுற்றுச்சூழலுக்கும் பூமிக்கும் பருவநிலை மாற்றம் பெருத்த அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்நிலையில் கனடா நாட்டு 70 வயது மூதாட்டி ஒருவர், உலகின் முதல் ‘பருவநிலை மாற்ற நோயாளி’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். புவி வெப்பமடைவதால் அதிகரித்து வரும் அனல் காற்றும், காற்று மாசுபாடும்தான் இவருக்கு சுவாசக்கோளாறு ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஏற்கெனவே, அவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டாலும் தற்போது அவர் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு, அனல் காற்றும் மாசுபட்ட காற்றும்தான் காரணம் என்று மருத்துவர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

கனடா நாட்டில், கடந்த ஜூன் மாதம் வீசிய அனல் காற்றின் அளவு 49.5 டிகிரி செல்சியஸைத் தொட்டது. இதன் காரணமாக 500-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதை அடுத்து காட்டுத்தீ பரவியதில் புகை மண்டலம் கனடாவின் பல பகுதிகளில் சூழ்ந்தது. இதன் தொடர்ச்சியாக, அந்நாட்டின் ஒட்டுமொத்தக் காற்றின் தரம் 40 மடங்கு மோசமடைந்ததாக எச்சரிக்கப்பட்டது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோருக்கு அனல் காற்று தாக்கத்தால், பல உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கின. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மட்டும் அளித்தால் போதாது, அதற்கான மூல காரணத்தைச் சீர்செய்ய வேண்டும் என்று கனடா நாட்டு மருத்துவர்கள் எச்சரித்தனர். சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் ஏற்படும் பாதகங்களை மக்கள் உணரத் தவறியதையே, நாம் வந்தடைந்திருக்கும் நிலை காட்டுவதாகவும் மருத்துவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இந்நிலையில் புவி வெப்பமடைவதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கும் மூதாட்டி, உலகின் முதல் ‘பருவநிலை மாற்ற நோயாளி’யாக அறிவிக்கப்பட்டிருப்பது, உலகெங்கும் வாழ்பவர்களுக்கு ஊதப்பட்டிருக்கும் அபாய சங்காகும்!

x