ஐ.நா-வின் பருவநிலை மாற்றத்தை விவாதிப்பதற்கான கிளாஸ்கோ உச்சி மாநாட்டில், புவி வெப்பமயமாதலை தடுப்பது உட்பட சூழலியல் சார்ந்த பல்வேறு சவால்களை எதிர்கொள்வது குறித்த விவாதங்கள் தொடர்கின்றன.
இதற்காகப் பல்லாயிரம் டன் கார்பன் கழிவுகளை வெளியேற்றும் ஜெட் விமானப் பயணங்கள் மூலம் உலகத் தலைவர்கள் கிளாஸ்கோவை அடைந்தது குறித்தும், வெற்று வாய்ப்பந்தல்களாகவே கடந்த 30 ஆண்டுகளாக அந்நாடுகளின் அறைகூவல்கள் தேங்கிப்போனது குறித்தும், உலக மக்களின் அலட்சியம் குறித்தும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன. ஆனால், மாநாட்டில் ஆஜராகி முழங்கிய தலைவர்களை விட, தங்கள் தேசத்தில் இருந்தவாறு தீனக் குரலில் ஒரு குட்டி தேசம் விடுத்த அபயக்குரல், உலகின் கவனத்தை திருப்பியுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் மீச்சிறு தீவு தேசம் துவாலு. புவி வெப்பமயமாதலால் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக, அடுத்து வரும் ஆண்டுகளில் காணாமல் போகவிருக்கும் கடற்கரை நகரங்கள் பட்டியல் பெரிது. அந்தப் பட்டியலில், முழு தேசமாக முதல் வரிசையில் காத்திருக்கிறது துவாலு.
‘புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தாது, வாளாவிருக்கும் வளர்ந்த நாடுகளால் நாங்கள் பலியாகிக்கொண்டிருக்கிறோம்’ என்பதை குறிப்பால் உணர்த்த முடிவு செய்தது துவாலு. இதற்கான கிளாஸ்கோ மாநாட்டுச் செய்தியை, துவாலு வெளியுறவுத் துறை அமைச்சரான சைமன் கோஃப் வெளியிட்டார்.
உயரும் கடல்பரப்பால் மூழ்கிக் கொண்டிருக்கும் தங்கள் மண்ணில், முழங்காலைத் தாண்டிய நீரில் நின்றபடி துவாலுவின் வேதனையை அறிக்கையாக அவர் வாசித்தார். கிளாஸ்கோவில் கூடிய உலகத் தலைவர்களின் முழக்கங்களை விட, கடந்த வாரம் கடலில் நின்றவாறு அபயக் குரல் விடுத்த துவாலு அமைச்சரின் குரல் அதிகம் பேரைச் சென்றடைந்துள்ளது. கிளாஸ்கோ மாநாட்டை விவாதித்து வருவோரின் சமூக ஊடகப் பகிர்வுகளில், சைமன் கோஃப்பின் புகைப்படங்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளன.