‘அடுத்தவர்களுக்கு உதவ ஆயிரம் வழிகள் உண்டு; அதில் இதுவும் ஒரு வழி’ என்று முன்னதாரணமாகத் திகழ்கின்றனர், சீனாவின் நான்சாங் நகரத்தில் வாழும் வான்ஜுவோசெங், ஜியாங் ஜெங்ஜியாங் இணையர். அந்நாட்டின் கிழக்கில் உள்ள ஜியாங்ஸி மாகாணத்தில் இந்நகரம் இருக்கிறது.
இவ்விருவரும் நகரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை அருகில் திறந்தவெளியில் சிற்றுண்டிக் கடை நடத்துகின்றனர். இருவருக்குமே இப்போது வயது 60-க்கும் மேல். இப்படி அடுப்புகளைத் தானம் செய்யும் முடிவுக்கு இருவரும் வந்ததன் பின்னணியில், மனதை கனக்கச் செய்யும் நிகழ்வு ஒன்று உண்டு.
கருணையும் அன்பும் சுரக்கும் தாயுள்ளம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. சிலர் அதை வாய்ப்பு வரும்போது காட்டி, மற்றவர்களுக்குப் பயன்படுகிறவர்களாகிவிடுகிறார்கள்.
21 ஆண்டுகளுக்கு முன்னால் இவர்களுடைய கடைக்கு வந்த, வெளியூரைச் சேர்ந்த ஒரு தம்பதியர் எதுவும் வாங்காமல், இவர்கள் சற்றுத் தலை நிமிருவார்களா, பேச முடியுமா என்பதைப்போல கடைக்கு அருகிலேயே காத்திருந்தார்கள். ‘அருகிலேயே நிற்கிறார்கள், எதுவும் வாங்கவில்லையே’ என்று மனதுக்குள்ளேயே நினைத்துக்கொண்ட வான்ஜுவோசெங்கும், ஜியாங் ஜெங்ஜியாங்கும், “உங்களுக்கு என்ன வேண்டும்? ஏன் இத்தனைத் தயக்கத்துடன் காணப்படுகிறீர்கள்?” என அவர்களிடம் கேட்டனர்.
அப்போது அந்தத் தம்பதியர், “எங்கள் குழந்தைக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். குழந்தைக்காகத் தனிப் பக்குவத்தில் சமைக்க வேண்டியிருக்கிறது. உங்களுடைய வேலை முடிந்துவிட்டால் எண்ணெய்யோடு அடுப்பைத் தர முடியுமா?” என்று கேட்டனர். உடனே இருவரும் சம்மதித்து அடுப்பைக் கொடுத்தனர். பின்னர் தங்களுக்குள் அதுபற்றிக் கலந்துரையாடினர். “நாம் சமைப்பதை, நல்ல உடல் நிலையில் இருப்பவர்கள் சாப்பிட முடியும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சாப்பாட்டை அவர்களுக்கு வேண்டியவர்கள் சமைப்பதுதான் நல்லது. அதற்கு வெளியூரிலும் அவர்களுக்கு அடுப்பு கிடைக்க வேண்டுமே” என்று தங்களுக்குள் விவாதித்தார்கள். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் அன்று இரவே தீர்மானித்தனர்.
அடுத்த நாளிலிருந்து சமைப்பதற்கான எண்ணெய்யோடு அடுப்புகள் சிலவற்றை வாங்கி அருகில் வைத்துவிட்டார்கள். ‘யாருக்கு வேண்டுமோ சொந்தமாகச் சமைத்துக்கொள்ளலாம்’ என்றும் அறிவித்துவிட்டார்கள். அதற்குக் கட்டணமோ வாடகையோ கிடையாது. இதையறிந்ததும், மருத்துவமனைக்கு உறவினர்களைச் சிகிச்சைக்காக அழைத்து வருபவர்கள் நிம்மதியுடன் இந்தத் தம்பதியின் கடையை அணுகி, அடுப்புகளைப் பயன்படுத்தி சமைக்கத் தொடங்கினர். அன்றிலிருந்து இன்றுவரை20 ஆண்டுகளாக அன்றாடம் பலர் என்று, ஆயிரக்கணக்கானவர்கள் இவர்களுடைய வாடகையில்லா இலவச அடுப்பு தானத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
அற உணர்வுகள் மனிதனுக்கு இயற்கை தந்தது. அதற்கு மதம், மொழி, இனம், நாடு என்ற எல்லைகள் கிடையாது. கருணையும் அன்பும் சுரக்கும் தாயுள்ளம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. சிலர் அதை வாய்ப்பு வரும்போது காட்டி, மற்றவர்களுக்குப் பயன்படுகிறவர்களாகிவிடுகிறார்கள். “அடுப்பெல்லாம் தர முடியாது, ஏதாவது வேண்டுமென்றால் வாங்கிச் சாப்பிடு” என்று ஒற்றை வரியில் இவர்கள் முடித்திருந்தால், அது யாருடைய காதுகளுக்கும் எட்டியிருக்காது. சிற்றுண்டி விற்பவருடைய வேலையா அது என்றும் மற்றவர்கள் நியாயப்படுத்திவிடுவார்கள். அடுப்பு கேட்டதில் உள்ள நியாயத்தை ஏற்று, இலவசமாகப் பகிர்ந்துகொண்டதால் இன்று உலக அளவில் பேசப்படுகிறவர்களாகிவிட்டார்கள்.
வீரம், நேர்மை, அர்ப்பணிப்பு, கருணை ஆகியவற்றுக்காக தேசிய விருதுபெற தேர்வு செய்யப்பட்டவர்களுடன் வான்ஜுவோசெங், ஜியாங் ஜெங்ஜியாங் இணையரையும் சீன அரசு தேர்ந்தெடுத்து கவுரவித்தது. பாரம்பரியம் மிக்க சீன நாட்டில் மற்றவர்களுக்காக உதவிகளைச் செய்வதை வெவ்வேறு அரச வம்சங்களின் காலத்திலும் வலியுறுத்தியுள்ளனர். அது மட்டுமல்லாது, சீன மெய்யியலாளர்களும் மக்களுக்கு அவற்றைப் போதித்துள்ளனர். அற போதனைகளைக் கேட்பதோடு நிறுத்திக்கொள்பவர்கள்தான் அநேகம்;செயல்படுத்துகிறவர்கள் மிகச் சிலரே. டாவோயிசம், கன்பூஸியனிஸம் அனைத்துமே, ‘பிறருக்காக வாழும் வாழ்க்கையே பேறு பெற்றது’ என்றே வலியுறுத்துகின்றன.
விருதுபெற்ற இவ்விணையர், அந்த விருதுக்கான நிகழ்ச்சிக்காக பெய்ஜிங் வரவேண்டும் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசு அழைத்தபோது மறுத்துவிட்டனர். வர முடியாததற்கு இருவரும் சொன்ன காரணம், “நான்சாங்கில் புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அடுப்புக்காகக் காத்திருப்பார்கள்.”
எத்தனை உயர்ந்த உள்ளம் பாருங்கள்!