உலகின் மிகப்பெரும் பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கின், ’டெஸ்லா’ எலெக்ட்ரிக் கார்கள் விரைவில் இந்திய சாலைகளை ஆக்கிரமிக்க உள்ளன. அடுத்தபடியாக எலான் மஸ்க், இந்திய பிராட் பேண்ட் சேவையில் நுழைய உள்ளார்.
இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கிளை அமைப்பான ஸ்டார்லிங்க் நிறுவனம், சாட்டிலைட் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் களத்திலிருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து இந்த சேவையில் ஈடுபட ஸ்டார்லிங்க் தயாராக உள்ளது. இதற்கான முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
பெரு நகரங்கள் மற்றும் நகரங்களில் பிராட் பேண்ட் வசதிகள் எளிதில் கிடைத்து வருவதால், ஸ்டார்லிங்க் ஊரக பகுதிகளை குறிவைத்துள்ளது. ஸ்டார்லிங்கின் முயற்சிகள் பலிதமானால், இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் இதுவரையில்லாத இணைய இணைப்பு சாத்தியமாகும் எனத் தெரிகிறது.