தீபாவளித் திருநாளையொட்டி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தபோது செய்த சிறு பிழைக்காக, பாகிஸ்தானின் சிந்து மாகாண முதலமைச்சரை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்தது இணையத்தில் இயங்கும் பலரின் சகிப்புத்தன்மையின்மையைக் காட்டுகிறது.
சிந்து மாகாண முதலமைச்சரான சையது முரத் அலி ஷா, தீபாவளித் திருநாளையொட்டி ட்விட்டரில் பாகிஸ்தான் வாழ் இந்துக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சிந்து மாகாணத்தில் வசிக்கும் சிந்திகளில் இந்துக்கள் அதிகம். (லால் கிருஷ்ண அத்வானியும் பாகிஸ்தானின் சிந்து மாநிலத்திலிருந்து இந்தியா வந்தவர்தான்.) ஆனால், ‘தீபாவளி வாழ்த்துகள்!’ என்பதற்குப் பதிலாக ‘ஹோலி வாழ்த்துகள்!’ என்று குறிப்பிட்டுவிட்டார் முதல்வர் ஷா. இதை ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டதுடன், பாகிஸ்தானில் இந்துக்கள் அதிகம் வாழும் சிந்து மாகாணத்தின் முதலமைச்சர் அலுவலகத்தில் இருப்பவருக்கு தீபாவளிக்கும் ஹோலிக்கும் வித்தியாசம் தெரியாதது வருத்தத்துக்குரியது என்றும் எழுதிவிட்டார்.
சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்போர் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் மற்றவர்களை முட்டாளாகவும் நினைப்பதாலும் இப்படி அடிக்கடி நேர்கிறது.
உடனே ஏராளமானோர் சமூகவலைதளங்களில் அவரைக் காய்ச்சி எடுத்துவிட்டனர். ஒரு முதலமைச்சருக்கு இதுகூட தெரியாதா என்றும் ஹோலிக்கும் தீபாவளிக்கும் வேறுபாடு தெரியாதவர் முதலமைச்சராக எப்படிப் பதவி வகிக்கலாம் என்றும் தங்களுடைய அறிவுக்கூர்மையால் விளாசித் தள்ளினர்! தவறு உணரப்பட்டதும் பழைய வாழ்த்து நீக்கப்பட்டு சரியான தீபாவளி வாழ்த்து வெளியிடப்பட்டது. அதற்குள் பலர் அந்த ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்து அவரை மிக மோசமாக விமர்சித்துப் பதிவுகளை எழுதிவிட்டனர்.
அரசியல் தலைவர்கள் அவ்வப்போது இப்படியான தர்மசங்கடத்துக்குள்ளாவதுண்டு. சில வேளைகளில் இந்த வேலையைச் செய்யும் அட்மின்கள்(!) கூட ஆர்வக் கோளாறால் தவறு செய்வதற்கு வாய்ப்பு உண்டு. இந்துக்களுக்கு இன்று பண்டிகை, இதற்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று நினைத்த சையது முரத் அலி ஷாவின் பெருந்தன்மையை ஏற்றுப் பாராட்டுவதே சரி. நாம்கூட வீட்டிலிருக்கும்போது மனதில் ஒன்றை நினைத்து, பேசும்போது இன்னொன்றைக் கூறிவிடுவோம். அப்படி இதை எடுத்துக்கொள்ளாமல் அவரைக் கேலி செய்தும் கண்டித்தும் பலரும் கருத்து தெரிவித்தது உண்மையிலேயே வருந்தத்தக்கது. சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்போர் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் மற்றவர்களை முட்டாளாகவும் நினைப்பதாலும் இப்படி அடிக்கடி நேர்கிறது. மகிழ்ச்சிகரமான தருணங்களில் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள் இப்படி சரிபார்க்கப்படாமல் நேரடியாக அனுப்பப்பட்டுவிடும் வாய்ப்பு உண்டு. இதுவே அரசின் நடவடிக்கை பற்றிய அறிவிக்கை என்றால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் சரிபார்க்கப்பட்டு, ஒப்புதல் கிடைத்த பிறகே பொதுவெளிக்கு வரும்.
மதம் வேறு கடவுள் வேறு என்று நினைப்பதுகூட சரியில்லை. கடவுள் ஒருவரே, அவருக்கு உருவமுமில்லை, பெயரும் இல்லை.
பொதுவாகவே, பிற மதத்தவருடைய பண்டிகைகளுக்கு இடையே வேறுபாடுகள் குறித்து யாரும் அதிகம் தெரிந்துகொள்ள முயற்சிப்பது கிடையாது. இந்தியாவிலும்கூட முஹர்ரம் நாளன்று முஸ்லிம்களுக்கு வாழ்த்து தெரிவித்த மேதாவிகள் உண்டு. ரம்ஜான், பக்ரீத் போலவே முஹர்ரமும் என்றே பலர் நினைக்கிறார்கள். இதெல்லாம் புரிதலில் ஏற்படும் சிக்கல். எல்லாவற்றையும் தாண்டி, வாழ்த்த வேண்டும் என்பதுதான் இங்கு அடிப்படையான விஷயம். எல்லா மதத்தவரும் பிற மதத்தவருடைய திருவிழாக்களில் சகோதரர்களாகப் பங்கேற்கும்போது அதைப் பற்றிய புரிதல்கள் அதிகமாவதுடன் நினைவில் வைப்பதும் எளிதாகிவிடும்.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ளவர்கள் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், பவுத்தம், ஜைனம், சீக்கிய மதம், யூத மதம் என்று உலகின் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களுடனும் அன்போடு கலந்து உறவாடவும் தெரிந்துகொள்ளவும் வாய்ப்புகள் அதிகம். யூத மதத்தவர் பாகிஸ்தானில் இப்போது இல்லாமல் இருக்கலாம், இந்தியாவிலும் அவர்கள் எண்ணிக்கை குறைவுதான். ஆனால், ஆப்ரஹாம் வழிவந்த மூன்று மதங்களுமே ஓரிடத்திலிருந்து கிளைத்தவைதான்.
மதம் வேறு கடவுள் வேறு என்று நினைப்பதுகூட சரியில்லை. கடவுள் ஒருவரே, அவருக்கு உருவமுமில்லை, பெயரும் இல்லை. இதையே அனைத்து மதங்களின் வேதங்களும் சொல்கின்றன. அப்படியானால் நாம் வெவ்வேறு மதம் என்று ஏன் நினைக்கிறோம்? புற அடையாளங்களைக் கொண்டும் வழிபாட்டு முறைகளில் உள்ள வேறுபாடுகளைக் கொண்டும் வெவ்வேறு கடவுள்களை வழிபடுவதாக நம்புகிறோம். அவ்வளவுதான்!
இதில் தெளிவு ஏற்பட்டுவிட்டால் உலகம் ஒரே குடும்பமாகிவிடும். வாழ்த்துச் செய்தியில் இருந்த பிழைக்காகக் கண்டித்தும் கேலி செய்தும் பதிவுகளை நல்ல நாள்களை வீணடிக்க மாட்டோம்!