ஆப்கானிஸ்தானில் காணாமல்போன குழந்தைக்காக, அங்கு தொடங்கி அமெரிக்கா வரை ஆர்வலர்கள் பலர் ஈர நெஞ்சோடு இணைந்து தேடலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தாலிபான் ஆளுகைக்கு ஆப்கன் மாறியதும், அங்கிருந்து வெளியேற விரும்பியவர்களில் மிர்சா அலி குடும்பமும் அடக்கம். காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாவலராக 10 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றியவர் மிர்சா அலி. அதனால், அமெரிக்க அதிகாரிகளைப் பிடித்து குடும்பத்தோடு அமெரிக்கா சென்றுவிட முடிவு செய்தார். அதன் அடிப்படையில், மனைவி சுரையா மற்றும் 5 குழந்தைகளுடன் ஆகஸ்ட் 19 அன்று காபூல் விமான நிலையத்தை அடைந்தார்.
விமான நிலையத்தின் வாயிலை நெருங்க சில மீட்டர் தொலைவு இருக்கும்போது, கூட்டத்தில் திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பிறந்து 2 மாதமே ஆகும் தங்களது கடைக்குட்டி குழந்தையான சோஹைல் நசுங்கி விடுவானோ என்று பெற்றோர் பயந்தனர். அந்த நேரம் விமானநிலையத்தின் மதில் மேல் காவல் பணியிலிருந்த ஒரு அமெரிக்க ராணுவ வீரர் உதவிக்கு கைநீட்ட, குழந்தை சோஹைலை அவரிடம் மிர்சா ஒப்படைத்தார். நெட்டித்தள்ளிய கூட்டத்தை கடந்து விமான நிலையத்தை அடைந்ததும் சோஹைலைத் தேட ஆரம்பித்தார்கள். ஆனால், வாயிலில் தொடங்கி விமான நிலையம் முழுக்க பல மணி நேரம் தேடலில் ஈடுபட்டும், பல்வேறு அமெரிக்க அதிகாரிகளிடம் விசாரித்தும் சோஹைலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்போது மிர்சா அலி - சுரையா குடும்பம் அமெரிக்காவின் டெக்ஸாஸில், ஆப்கன் அகதி முகாம் ஒன்றில் அடைக்கலமாகி உள்ளனர். அங்கிருந்தபடி ஆப்கன் அரசின் பல்வேறு மட்ட நிர்வாகத்தினரை தொடர்புகொண்டு விசாரித்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஆப்கனை இணைக்கும் அனைத்து உபாயங்கள் வழியாகவும், தன்னார்வலர்கள் ஒரு இயக்கமாக இணைந்து குழந்தை சோஹைலை தேடி வருகின்றனர். 2 மாத குழந்தை சோஹைலுக்காக சமூக ஊடகங்களில் தீவிர பிரச்சாரமும் இணையவாசிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.