சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க வேண்டும் என்று பலரும் பேசுகிறோம். அதற்கு என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்று கேட்டால் நம்மில் எத்தனை பேரிடம் பதில் உள்ளது? ஆனால், திருவண்ணாமலையைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கரிடம் பதில் மட்டுமல்ல உலகுக்கே வழிகாட்டுதல் உள்ளது.
’ஐயர்ன் மேக்ஸ்’ எனும் தீர்வு!
கரித்துண்டுகளை எரித்துச் செய்யப்படும் பாரம்பரிய இஸ்திரி முறைக்குப் பதில், சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து கடந்த ஆண்டு உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தார் வினிஷா. இவர் வடிவமைத்தது ‘ஐயர்ன் மேக்ஸ்’ என்ற சூரிய ஒளியால் இயங்கும் இஸ்திரிப் பெட்டி.
வழக்கமாக இஸ்திரி போடும் வண்டியின் மேற்கூரையில் சோலார் தகடுகளை பொருத்தி அதன் வழியாக பேட்டரியை சார்ஜ் செய்யும் முறையை முன்மொழிந்தார் வினிஷா. 5 மணிநேரம் சூரிய ஒளியை கிரகித்து 6 மணிநேரம்வரை இஸ்திரி செய்யும் ஆற்றலை ஈட்டும் கண்டுபிடிப்பு இது. இஸ்திரி பெட்டி வண்டியுடனே இணைக்கப்படுவதால் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.
1 கோடி தொழிலாளர்கள் 5 கோடி கிலோ கரித்துண்டுகள்!
இந்தியாவில் மட்டும் கரித்துண்டுகளை பயன்படுத்தும் 1 கோடி இஸ்திரி பெட்டித் தொழிலாளர்கள் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு தோராயமாக 5 கிலோ கரித்துண்டுகளை இஸ்திரி செய்ய எரிக்க வேண்டிவருகிறது. அப்படியானால், நாளொன்றுக்கு 5 கோடி கிலோ கரித்துண்டுகள் இஸ்திரிப் போட மட்டுமே எரிக்கப்படுகிறது. இந்நிலையில் வினிஷாவின் சூரியஒளியில் இயங்கும் இஸ்திரிப் பெட்டிகள் பரவலான பயன்பாட்டுக்கு வந்தால், நாள்தோறும் கோடிக்கணக்கான கரித்துண்டுகள் எரிக்கப்படுவதைத் தவிர்க்கலாம். அதன் மூலம் சுற்றுச்சூழலில் கலக்கும் கார்பன் வெளியேற்றத்தைத் தடுக்கலாம். இது தவிர, கரித்துண்டுகளுக்காகும் செலவு தவிர்க்கப்பட்டு இஸ்திரி தொழிலாளர்களுக்கு லாபமும் கிடைக்கும்.
வெயில் கொளுத்தும்போது மட்டும்தானே இது வேலை செய்யும் என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, மேக மூட்டமாக இருக்கும்போதும் மழைக்காலத்திலும் வேலை செய்யும் அறிவியல் நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார் வினிஷா. அதுவும் சூழலியலுக்கு தோழியான தொழில்நுட்பத்தையே வடிவமைத்தார்.
சூழலியல் தோழிக்கு விருதுகள்!
வினிஷாவின் இந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்டி, ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான அறக்கட்டளை ‘இளம் வயது கண்டுபிடிப்பாளர் விருது 2020’ கொடுத்தது கவுரவித்தது. இந்திய மதிப்பில் ரூ.8 லட்சத்து 46 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்திய அரசு பாலபுரஸ்கார் விருதுக்குப் பரிந்துரைத்திருக்கிறது. அதற்கு முன்பே 2019-ல் அப்துல் கலாம் இக்னைட் விருது பெற்றவர்தான் இந்த சிறுமி. இதுபோக, தொடாமல் இயக்கக்கூடிய கருவிகள் குறித்த ஆராய்ச்சியில் கரோனா காலத்தில் ஈடுபடத் தொடங்கினார். இவ்வளவு நேரம் சொன்னவையெல்லாம் வெறும் டீசர்தான். இனிதான் மெயின்பிக்சர் வருகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் விதமான கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த, இங்கிலாந்து இளவரசர் வில்லியம் சூழலியல் ஆஸ்கர் பரிசு என்றழைக்கப்படும் ‘எர்த்ஷாட்’ பரிசு அறிவித்திருந்தார். அதில், ‘Clear Our Air’ பிரிவில் தேர்வான 15 பேரில் வினிஷாவும் ஒருவர். இந்நிலையில், ஐநா சபை கிளாஸ்கோவில் நடத்திவரும் பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்ற, வினிஷாவுக்கு இளவரசர் வில்லியம் அழைப்புவிடுத்திருந்தார்.
கோபம் கொள்ள நேரமில்லை... செயலாற்றவே விரும்புகிறேன்!
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன் உட்பட 100-க்கும் அதிகமான உலக நாடுகளின் தலைவர்கள் கூடியிருந்த கிளாஸ்கோ சிஓபி26 பருவநிலை மாநாட்டில், நேற்று உரையாற்றிய தமிழக மாணவி வினிஷா, “எல்லோரிடமும் மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து பேச்சை நிறுத்திவிட்டுச் செயலில் இறங்குவோம். எர்த்ஷாட் பரிசு பெற தேர்வானவர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் முன்வைக்கும் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் மற்றும் தீர்வுகளுக்கு உங்களுடைய ஆதரவு எங்களுக்குத் தேவைதான். ஆனால், புதுப்பிக்கமுடியாத எரிவாயு, புகை, மாசு மீது கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரம் எங்களுக்கு தேவையில்லை. பழைய விவாதங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, புதிய எதிர்காலத்துக்கான புதிய பார்வையை கைக்கொள்ள வேண்டும். ஆகவே, உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் முயற்சிகளையும் எங்கள் மீது முதலீடு செய்தால், எங்களது எதிர்காலத்தை நாங்கள் வடிவமைப்போம். எர்த்ஷாட் பரிசு விருதாளர்கள் மற்றும் இறுதியாளர்கள் சார்பில் எங்களுடன் கைகோக்க உங்களை அழைக்கிறேன். எங்களுடன் இணைந்து நிற்க அழைக்கிறேன்.
உங்களுடைய பழைய பழக்க வழக்கங்களையும் பழைய சிந்தனை முறையையும் கைவிடுவீர்கள் என்று நம்புகிறோம். அதேநேரம் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். எங்களுடன் இணைய உங்களுக்கு அழைப்புவிடுத்தாலும் நீங்கள் வராது போனால் நாங்களே தலையெடுப்போம். நீங்கள் தாமதித்தால் நாங்கள் செயலாற்றுவோம். நீங்கள் கடந்த காலத்திலேயே சிக்கித் தவித்தாலும் நாங்கள் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம். ஆனால், என்னுடைய அழைப்பை தயவு கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்காக நிச்சயம் வருந்தமாட்டீர்கள். வெற்று உறுதிமொழிகளை அளித்துவிட்டு, அவற்றை நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது கோபமும் விரக்தியும் என் தலைமுறையைச் சேர்ந்த பலருக்கு உள்ளது. அவ்வாறு சீற்றம் கொள்ளவும் நியாயமான காரணங்கள் எங்களுக்கு இருக்கவே செய்கிறது. ஆனால், எனக்குக் கோபம் கொள்ள நேரமில்லை. நான் செயலாற்றவே விரும்புகிறேன். நான் வெறும் இந்தியாவிலிருந்து வந்த சிறுமி அல்ல. நான் இந்த பூமியின் சிறுமி. அதைப் பெருமிதத்துடன் அறிவிக்கிறேன். நான் மாணவியும்கூட. கண்டுபிடிப்பாளரும்கூட. சூழலியலாளரும்கூட, தொழிலதிபரும்கூட. எல்லாவற்றுக்கும் மேலாக நான் ஒரு நேர்மறையாளர்” என்று முழங்கினார் வினிஷா.
பருவநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்த செயலாற்றாமல், தன்னுடைய கனவுகளையும் குழந்தை பிராயத்தையும் உலகத் தலைவர்கள் அபகரித்துக் கொண்டதாக 2019-ல், அமெரிக்காவில் நடந்த பருவநிலை கூட்டத்தில் சீறியெழுந்தார் ஸ்வீடன் சிறுமி கிரேட்டா தன்பெர்க். அவர் அன்று நிகழ்த்திய உரைவீச்சுக்கு நிகராக, அவர் அன்றைய அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது வீசிய பார்வையும் பேரதிர்வை உண்டாக்கியது. இந்நிலையில், நேற்று வினிஷா துணிந்து நிமிர்ந்து ஆற்றிய உரை அவரை ‘தமிழகத்தின் கிரேட்டா தன்பெர்க் வினிஷா’ என்று சொல்ல வைத்திருக்கிறது.