சீன வணிக அமைச்சகம் விடுத்த எச்சரிக்கை யாருக்கு?


சீனா எதைச் செய்தாலும் திக் திக்கென்றுதான் இருக்கும். குறிப்பாக, கரோனா பரவலுக்குப் பின்னர் அந்நாடு பூடகமாக என்ன சொன்னாலும் எல்லோரும் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். ‘அடுத்தபடியாக குளிர்காலமும் வசந்தகாலமும் வரவிருக்கிறன; மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வீட்டுத் தேவைக்குப் போதுமென்ற அளவுக்கு வாங்கிக் கையிருப்பில் வைத்துக்கொள்ளுங்கள், நீண்ட நாள் கெடாமல் வைத்திருக்கக்கூடிய காய்கறிகளை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சீன வணிகத் துறை அமைச்சகம் நவம்பர் 1-ல் மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இது உண்மையிலேயே குளிர்காலம் – வசந்த காலத்துக்கான எச்சரிக்கையா, அல்லது கோவிட்-19 வைரஸ் உருமாற்றமாகி பெரிய அளவில் நோய் தொற்றத் தொடங்கிவிட்டதா, அல்லது தைவான் மீது பெருநில சீனப் பகுதி ராணுவத் தாக்குதலைத் தொடங்கப் போகிறது என்பதற்கான சூசக எச்சரிக்கையா என்று தைவான் மக்கள், வெளிநாட்டுத் தூதரக வட்டாரங்கள், அரசியல் பார்வையாளர்கள் வரை பல தரப்பினரும் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதுபற்றி, ‘குளோபல் டைம்ஸ்’ என்ற சீன அரசு நாளிதழில் கட்டுரை எழுதியிருக்கும் அதன் தலைமை ஆசிரியர் ஹு சிஜின் (Hu Xijin), சந்தேகத்தைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மேலும் பொடிவைத்திருக்கிறார்.

“தைவான் நீரிணைப் பகுதியில் நிலைமை பதற்றமாக இருந்தாலும், இப்படியொரு எச்சரிக்கையை விடுக்கும் அளவுக்கு நிலைமை முற்றிவிடவில்லை. சீனாவுடன் இணைந்த பகுதியான தைவானுக்குப் பெருநிலப்பகுதி நிர்வாகம் விடுத்த தொடர் எச்சரிக்கைகளுக்குப் பிறகு அங்கே அடங்கிவிட்டார்கள்.

தைவான் தீவு நிர்வாகிகளும் அமெரிக்காவும் கைகோத்துக்கொண்டு சமீபகாலமாக சில சில்மிஷ வேலைகளில் இறங்கினார்கள். தீவில் அமெரிக்கா தனது துருப்புகளை இறக்கக் கூடாது என்று தெரிந்திருந்தும், பயிற்சி அளிப்பதற்காக சிறிய குழு வந்திருப்பதாகத் தைவான் தீவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ விமானமும் இத்தீவுக்கு வரக்கூடாது. அப்படியும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட்டி வரவும், சில பொருட்களை வழங்கவும் சரக்கு ஏற்றும் ராணுவ விமானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

பெரிய அளவில் சாகசம் செய்தால் சீனப் பெருநில நிர்வாகம் சண்டைக்கு வரும் என்று அஞ்சுகிறார்கள். அதேசமயம், பெருநிலத்துடன் தைவானை அடுத்த சில ஆண்டுகளில் சீனா இணைத்துக்கொண்டுவிடுமே என்றும் அச்சப்படுகிறார்கள். தைவான் மீது பெருநிலம் ஆதிக்கம் செலுத்திவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதற்காக தைவான் நிர்வாகிகளுக்குத் தெம்பூட்டவும் தைவான் கைமாறுவதைத் தாமதப்படுத்தவும் தொடர்ந்து எதையாவது செய்ய நினைக்கிறார்கள்.

தைவான் மீது ராணுவ ரீதியிலான நடவடிக்கை எடுப்பது சீன மக்கள் குடியரசின் கையில்தான் இருக்கிறது. அப்படியிருக்க தைவான் மக்களுக்கு வணிகத் துறை மூலம் இப்படி எச்சரிக்கை விடுத்து அவர்களைக் கலவரப்படுத்த சீன அரசு விரும்பவில்லை. பருவநிலை மாறுவதால் அதற்கேற்ப மக்கள் தங்களுடைய வீடுகளில் உணவுப் பொருட்கள், காய்கறி, மருந்து-மாத்திரைகள், எரிபொருள், ஆடைகள், கைக்கருவிகள் போன்றவற்றைத் தயார்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டுமே என்ற எண்ணத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது” என்று ஹு சிஜின் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “கடந்த 2 ஆண்டுகளாக இயற்கைப் பேரிடர்களும் கோவிட்-19 பெருந்தொற்றும் மாறி மாறி சீனாவின் எல்லாப் பகுதிகளிலும் கணிசமாகச் சேதம் விளைவித்து வருகிறது. இம்மாதிரியான தருணங்களில் மக்கள் அரசையும் சமுதாயத்தையும் வெளி உதவிக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தனிப்பட்ட குடும்பங்கள் பலம் வாய்ந்தவையாக இருப்பதில்லை. எனவே, அவர்களுக்கு நினைவூட்டவும் அத்தியாவசியப் பொருட்களை எல்லோருக்கும் ஒரே சமயத்தில் விநியோகிப்பது தொடக்கத்தில் பிரச்சினையாக இருக்கும் என்பதாலும் கையிருப்பில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது அரசு.

அதிக உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குடும்பங்கள் அல்லது சமுதாயமாகச் சேர்ந்து வாழும் அடுக்ககக் குடும்பங்கள் அவசரத் தேவைக்காக மின்சார ஜெனரேட்டர்கள், அதற்கான எரிபொருட்கள் ஆகியவற்றை வாங்கித் தயாராக வைத்துக்கொள்ளும். பல மாடி குடியிருப்புகளில் தீ விபத்து காரணமாக, மின்சார சப்ளை நின்றுபோய் மின்தூக்கிகள் செயல்படாமல் போனால், மக்களைக் கீழே கொண்டுவர பலமான கயிறுகளை வாங்கி வைத்துக்கொள்வார்கள். சீன மக்களும் அவரவர் வசிப்பிடங்களுக்கேற்ப தற்காப்புக்கான சாதனங்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இப்போதைய சூழல் ஒவ்வொரு வகையில் சவாலானது. இருந்தும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, தொற்றைக் கட்டுப்படுத்தியிருக்கிறோம், தடுப்பூசிகளைப் போட்டிருக்கிறோம். அடிக்கடி வைரஸ் உருமாறுவதால் வேலையும் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்று நம்முடைய கையை மீறிவிடுமா அல்லது கட்டுப்படுத்திவிடலாம் என்று நினைக்கிறோமா? கட்டுப்படுத்திவிடலாம் என்றே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்கி கையிருப்பில் வைத்துக்கொள்ளுங்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்தும் அதே வேளையில், விலைவாசி உயராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கும் சொல்கிறோம். சீன நாட்டின் வட மாகாணங்களில் குளிர்காலத்துக்கு முன்னதாக முட்டைக் கோஸ், முள்ளங்கி ஆகியவற்றை அதிக அளவில் வாங்கி, கையிருப்பில் வைத்துக்கொள்வது வழக்கம். இப்படிப்பட்ட பழக்கங்களைத்தான் அரசு நினைவுபடுத்தி ஊக்குவிக்கிறது.

மக்கள் எப்போதுமே உணர்ச்சிவசப்படுவார்கள். இது வழக்கமானதுதான். அரசின் அறிவிப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு விபரீதமாக எதையும் செய்துவிடக் கூடாது. தைவானை ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி (டிபிபி) தலைவர்கள், தங்கள் விருப்பப்படிதான் நடப்போம் என்று அடம்பிடித்தால் போர் என்ற வாள் அவர்களுடைய தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

தைவான் அரசைத் தண்டிக்க வேண்டும் என்றால் தாக்குதல் தொடுத்துத்தான் அதைச் செய்ய வேண்டும் என்பதில்லை. போர் விமானங்கள் தொடர்ந்து தைவான் மீது பறந்து கண்காணித்தால் அவர்களால் என்ன செய்ய முடியும்? (பிற நாடுகளும் தைவானுக்கு உதவிக்கு வர முடியாது என்று மறைமுகமாக எச்சரிக்கிறார்).

ஹாங்காங்கில் 2 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலைமை என்ன, இப்போது என்ன என்று ஒப்பிட்டுப் பாருங்கள். மக்கள் விடுதலை சேனையை (பிஎல்ஏ) ஹாங்காங்கில் கொண்டுபோய் நிறுத்த வேண்டும் என்று பலர் கோரினர். அது மட்டுமே ஹாங்காங்கை மீட்கும் என்று நினைத்தனர். தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பதை சீன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அதை அங்கே அமல்படுத்திய பிறகு அனைத்தும் அடங்கிவிட்டது. ஜனநாயக முற்போக்குக் கட்சியின் செல்வாக்கை அகற்ற வேண்டும் என்று சீன மக்கள் குடியரசு நினைத்துவிட்டால், போர் மூலம் அதைச் செய்துவிட முடியும். அதற்கும் அரசு தயாராக இருக்கிறது. ஆனால் வேறு வழிகளையும் கையாண்டு பார்க்க விரும்புகிறது. அவசரப்பட வேண்டிய அவசியமே இல்லை.

தைவானை ஆளும் டிபிபி கட்சியினர்தான் பதற்றத்தில் இருக்கின்றனர். அமைதியாக இருப்பதைப்போல நடிக்கின்றனர். சீன அரசுடன் மோதல் போக்கில் இறங்கி முட்டுச்சந்தில் போய் சிக்கிக்கொண்டுவிட்டனர். சீன அரசுடன் நீண்ட நாளைக்கு மோத முடியாது. அவர்களுடைய எதிர்காலம் இருண்டுவருகிறது. தைவானும் அமெரிக்காவும் விடுக்கும் மிரட்டல்கள் குறித்து பெருநிலப்பகுதி சீனர்கள் குழம்ப வேண்டியதில்லை.

போருக்கு நாம் தயாராக இருக்க வேண்டும், அதே சமயம் சமூக, பொருளாதார வாழ்க்கை சீர்குலைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சீனப் பெருநிலத்துடன் தைவான் போருக்குப் பிறகுதான் சேருமா அல்லது அமைதியான முறையில் இணையுமா என்பது டிபிபி கட்சியின் தலைமையைப் பொறுத்தது. அது வரலாறு எழுதப்போகும் விதியையும் பொறுத்தது” என்று ஹு சிஜின் எழுதியிருக்கிறார்.

இதைப் படித்தால் நிச்சயம் இது கோவிட்-19 பெருந்தொற்றை ஒட்டிய எச்சரிக்கை அல்ல என்பது விளங்குகிறது. இருந்தாலும் இத்தனைப் பீடிகை அவசியமில்லைதான். ஆனால், சீனாவின் பாணியே தனி ஆயிற்றே!

x