கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில், இஸ்ரேலிய எரிசக்தி துறை அமைச்சரான கரீன் எல்ஹரர் எதிர்கொண்ட கசப்பான அனுபவம், மாற்றுத்திறனாளிகள் மீது தொடுக்கப்படும் உலகளாவிய அலட்சியத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது.
அண்மையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், தனது கன்னியாக்குமரி பயணத்தை முன்னிட்டு, தான் எதிர்கொண்ட வேதனைகளை முகநூலில் பதிவு செய்திருந்தார். ரயில் மற்றும் தங்கும் விடுதியின் கழிவறைகள் மாற்றுத்திறனாளிகள் அணுக முடியாதபடி இருந்ததன் நிதர்சனத்தையும், விடுதியின் லிஃப்டில் தான் மாட்டிக்கொண்ட சூழலையும் அதில் விவரித்திருந்தார். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் பொதுவெளியில் சந்திக்கும் சவால்கள் குறித்து சமூக ஊடக வெளியில் விவாதங்கள் தொடர்ந்தன.
நம்மூரில், நம் நாட்டில் என்றில்லை; மாற்றுத்திறனாளிகள் பாராமுகமாய் நடத்தப்படுவது உலகளாவிய பிரச்சினை என்பதை, கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாநாடு பட்டவர்த்தனமாய் வெளிப்படுத்தியது. இஸ்ரேலிய எரிசக்தி துறை அமைச்சரான கரீன் எல்ஹரர், தசைநார் தேய்வு பாதிப்புக்கு ஆளானவர். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது கடமைகளை ஆற்றுபவர்.
திங்களன்று மாநாடு அரங்குக்கு சென்ற எல்ஹரர் அதிர்ச்சி அடைந்தார். ஐக்கிய சபையின் சார்பில் பிரிட்டனும் இத்தாலியும் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மாநாட்டின் கூட்ட அரங்கு, சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளிகள் அணுக வாய்ப்பின்றி அமைந்திருந்தது.
அதிருப்தி அடைந்த எல்ஹரர் தனது வேதனையை ஹீப்ரு மொழியில் டிவிட்டரில் பதிவு செய்தார். எல்ஹருக்கு ஆதரவாக உலகெங்குமிருந்து கண்டனக் குரல்கள் பாய்ந்தன. உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டில், அதுவும் சர்வதேச அளவில் கவனக்குவிப்பு பெற்ற நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் துச்சமாக நடத்தப்பட்டதற்கு எதிர்ப்புகள் அதிகரித்தன.
அதையடுத்து இஸ்ரேலுக்கான பிரிட்டன் தூதர் பகிரங்கமாய் மன்னிப்பு கேட்டார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். உடனடியாக மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகுவதற்கான ஏற்பாடுகள் அங்கே செய்யப்பட்டன. செவ்வாயன்று, அமைச்சர் எல்ஹரரின் சக்கர நாற்காலி தடையேதுமின்றி மாநாட்டின் கூட்ட அரங்கில் பிரவேசித்தது.