தலைமறைவு தாலிபான் தலைவரின் முதல் பொது தரிசனம்


ஹைபதுல்லா அகுந்த்சதா

திரைமறைவில் இருந்தபடி தாலிபான்களை இயக்கி வந்த அதன் உச்ச தலைவரான ஹைபதுல்லா அகுந்த்சதா, முதல்முறையாக பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருக்கிறார்.

தாலிபான் அமைப்பின் நிறுவனத் தலைவரான முகமது ஒமருக்குப் பின்னர், அக்தர் முகமது மன்சூர் என்பவர் தலைவராக பொறுப்பேற்றார். பதவியேற்ற ஒரே வருடத்தில் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார். அதையடுத்து தாலிபான் தலைவராக ஹைபதுல்லா அகுந்த்சதா என்பவர் பொறுப்பேற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஒற்றை புகைப்படம் தவிர்த்து அவரது இருப்பு, நடமாட்டம் உள்ளிட்ட எதையும் அமெரிக்க உளவாளிகளால் கூட கண்டறிய முடியவில்லை. தாலிபான்களின் அரசியல் மற்றும் ஆன்மிக தலைவராக இவர் பொறுப்பேற்றது முதலே, அமெரிக்காவின் தாக்குதலுக்கு அஞ்சி தலைமறைவாக இருந்தார். இடையில் இவர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

போஸ்டர்களில் மட்டுமே தரிசனம்

ஆப்கானிஸ்தான் குகைகளில் மறைந்திருந்தும், பாகிஸ்தானின் மதக் கல்வி நிலையங்களின் ஆசிரியராகவும் தலைமறைவு வாழ்க்கை நடத்தியிருக்கிறார். 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், முதல்முறையாக நேற்று(அக்.30) ஹைபதுல்லா திரைமறைவிலிருந்து வெளிப்பட்டார். இதை தாலிபான் அமைப்பு ஞாயிறு காலை உலகுக்கு அறிவித்தது. ஹைபதுல்லா பங்கேற்ற பொதுநிகழ்வின் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, அங்கு கேமரா மற்றும் டிஜிட்டல் உபகரணங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தாலிபான் ஆதரவு சமூக ஊடகங்கள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளன.

ஆப்கனில் தாலிபான் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றபோதும், ஹைபதுல்லா தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. அதற்கு முன்னரும் பிறகுமான முக்கிய அரசியல் நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்றதில்லை. எந்த நிகழ்வாயினும் அவர் சார்பிலான பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்பார்கள். அந்த வகையில் தாலிபான் தளபதிகள் பலரும் நேற்றுதான் தங்கள் தலைவரை தரிசித்தனர்.

ஆப்கன் தலைநகராக காபூல் விளங்கியபோதும் தாலிபான்களை பொறுத்தவரை? கந்தகர் நகரை மையமாகக் கொண்டே இயங்கி வருகிறார்கள். அந்த வகையில் கந்தகரில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுநிகழ்வு ஒன்றில் ஹைபதுல்லா அகுந்த்சதா பங்கேற்றார்.

ஆப்கன் மீட்புக்கான ’போரில்’ கொல்லப்பட்ட தாலிபான்களுக்கு அஞ்சலி செலுத்துதல் மற்றும் இறை வழிபாடு தொடர்பான நிகழ்வுகள் மட்டுமே நடைபெற்றதாக, தாலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மிக முக்கிய காரணங்களுக்காக தாலிபான் தலைவரின் பொது தரிசனம் அரங்கேறியதாகவும், முக்கியமான அரசியல் முடிவுகள் அங்கு எடுக்கப்பட்டதாகவும், அவை குறித்து வரும் நாட்களில் தெரிய வரும் என்றும் சொல்லப்படுகின்றன.

x