வாட்டிகனில் போப்பாண்டவரை சந்தித்த 5-வது இந்தியப் பிரதமர் மோடி!


வாட்டிகனில் மோடி-போப் சந்திப்பு

பிரதமர் மோடி - போப்பாண்டவர் இடையிலான சந்திப்பில், இந்தியாவுக்கு வருகை தருமாறு போப்பாண்டவரிடம் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதனை மகிழ்வோடு போப் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டார்.

ஜி20 உச்சி மாநாட்டுக்காக இத்தாலி சென்றுள்ள மோடி, இன்று(அக்.30) வாட்டிகனில் போப்பாண்டவரை சந்தித்தார். இருவரும் கைகுலுக்கி, தோளணைத்து நேசம் பாராட்டினர். போப்பாண்டவருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கிய பிரதமர் மோடி, அவரை இந்தியாவுக்கு வருகை தருமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார். அதனை மகிழ்வோடு போப் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக, 2016-17 இடையே பங்களாதேஷ் மற்றும் மியான்மர் தேசங்களுக்கான போப்பாண்டவரின் பயணத் திட்டத்தில் இந்தியாவுக்கான வருகையும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடியின் அலுவல் இடர்பாடுகளால் இருவரும் சந்திப்பதற்கான தருணம் வாய்க்கவில்லை. பங்களாதேஷ், மியான்மருடன் தனது பயணத்தை போப்பாண்டவர் முடித்துக்கொண்டார்.

மோடி, வாட்டிகன் சென்று நேரடியாக போப்பாண்டவரை சந்திக்கும் 5-வது இந்தியப் பிரதமராகி உள்ளார். மோடிக்கு முன்பாக நேரு, இந்திரா காந்தி, ஐ.கே.குஜரால், வாஜ்பேயி ஆகிய இந்தியப் பிரதமர்கள் போப்பாண்டவர்களை நேரடியாக சந்தித்து அளவளாவி உள்ளனர்.

போப்பாண்டவர்களின் அதிகாரபூர்வ இந்திய வருகையின் வரிசையில் முதலாவது, நான்காம் பால்-இன் மும்பை(1964) வருகை அமைந்தது. அடுத்தபடியாக போப் இரண்டாம் ஜான் பால் இருமுறை(1986 மற்றும் 1999) இந்தியா வந்திருக்கிறார்.

x