ரஷ்யாவில் ஊதிய விடுமுறை; சீனாவில் விரிவடையும் ஊரடங்கு


ரஷ்யாவில் பணிக்கு செல்லும் கோவிட் மருத்துவர்கள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெருந்தொற்றுப் பரவல் மற்றும் உயிரிழப்புகளை அடுத்து, ரஷ்யா மற்றும் சீனாவில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

ரஷ்யாவின் அவசரகால கோவிட் மருத்துவமனை

ரஷ்யாவை இதுவரை இல்லாத அளவில் பெருந்தொற்று படுத்தி வருகிறது. முன்தினத்தை விட அதிகமாகும் அன்றாட தொற்றுப் பரவல் மற்றும் உயிரிழப்புகளை அடுத்து, அங்கு ஊதியத்துடனான விடுமுறையை அதிபர் புதின் அறிவித்திருக்கிறார்.

அதன்படி, இன்று தொடங்கி(அக்.30) நவம்பர் 7 வரை தேசம் தழுவிய ஊதிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று பரவலின் கண்ணிகளை இந்த விடுமுறை உடைக்கும் என ரஷ்யா நம்புகிறது. மேலும் தடுப்பூசிகள் அளிப்பதையும் ரஷ்யா துரிதப்படுத்தி வருகிறது. உள்நாட்டுத் தயாரிப்பான ஸ்புட்னிக் ஊசிகளை இலவசமாக அரசு வழங்கியும் அங்கே 3-ல் ஒருவர் மட்டுமே தடுப்பூசி பெற்றிருக்கின்றனர்.

அரசு அறிவிப்பின்படி, 22 ஆயிரத்துக்கும் மேலானோர் செப்டம்பர் மாதத்தில் மட்டும் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவே, அக்டோபர் மாதத்தின் தினசரி இறப்பு எண்ணிக்கை, சராசரியாக ஆயிரத்தை கடந்துள்ளது.

சீன மருத்துவமனை ஒன்றில்

இன்னொரு ஆசிய வல்லரசான சீனாவும், ரஷ்யாவைப் போலவே பெருந்தொற்றுப் பரவலில் திணறி வருகிறது. கரோனா கண்டறியப்பட்டதில் மட்டுமல்ல சுதாரித்துக்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கியதிலும் சீனாவே முதலிடத்தில் இருக்கிறது.

அந்த வகையில், 141 கோடி மக்கள் தொகையில் 107 கோடி பேருக்கு தடுப்பூசிகளை சீன அரசு அளித்திருக்கிறது. அதாவது 4-ல் மூவருக்கு தடுப்பூசி சேர்ந்திருக்கிறது. கூடுதலாக பூஸ்டர் ஊசியையும், 18 வயதுக்கும் குறைவானோருக்கான சிறப்பு தடுப்பூசிகளையும் வழங்கி இருக்கிறது. 3-11 வயதினருக்கான தடுப்பூசியை தனியாக உருவாக்கி, அவற்றையும் உரிய குழந்தைகளுக்கு அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஆனபோதும் 14 மாகாணங்களில் பெருந்தொற்று பரவி வருகிறது. கரோனா பரவல் அதிகரிக்கும் மாகாணங்களில் தேவைக்கேற்ப ஊரடங்கை பரவலாக்கும்படி சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

x