ஏரியை ’காணோம்’: பருவநிலை மாற்றத்தின் அவலக் கோலம்!


வறண்டு கிடக்கும் துஸ் ஏரி

துருக்கியின் இரண்டாவது பெரிய ஏரியான ’துஸ்’ ஏரி முழுவதுமாய் வறண்டு போனது சூழியல் ஆர்வலர்களை கவலை அடையச் செய்திருக்கிறது.

அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் குறையும் மழை என பருவநிலை மாற்றத்துக்கான அடையாளங்களை உலகம் கண்டு வருகிறது. அதன் அண்மை அவல உதாரணமாகி இருக்கிறது துருக்கியின் துஸ் ஏரி.

இறந்த ஃபிளமிங்கோ பறவைகள்

சுமார் 1600 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்த ஏரி, துருக்கியின் இரண்டாவது மிகப்பெரும் ஏரியாகும். இது துருக்கியின் ஏராளமான பறவையினங்களுக்கு சரணாலயமாக இருந்தது. வலசை வரும் பறவையினங்கள் தனி. புத்தாயிரம் பிறந்தபோது ஏரிக்கு ஏழரை ஆரம்பித்தது. செயற்கைக்கோள் ஆய்வுகளின் அடிப்படையில் அதிகரிக்கும் வெப்பநிலையால் ஏரியின் ஆவியாகும் நீரின் அளவு அதிகரித்ததும், மழை குறைந்ததுமாக துஸ் ஏரி காணாமல் போயிருக்கிறது. துருக்கி அரசின் தவறான நீர்ப்பாசன கொள்கைகளால் நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமாக குறைந்தும் துஸ் வறண்டதுக்கு ஒரு காரணம்.

பாரிஸ் பருவநிலை மாநாட்டின் முடிவுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும் போதெல்லாம், செத்துக்கொண்டிருந்த துஸ் ஏரி குறித்தும் கவலைகள் பரிமாறப்படும். தற்போது அக்.31 அன்று கிளாஸ்கோ பருவநிலை மாநாடு தொடங்க உள்ள நிலையில் துஸ் முழுதுமாய் வறண்டிருக்கிறது. கடந்த ஜூலையில் ஏரியை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான ஃபிளாமிங்கோ பறவைகள், வறளும் ஏரியின் பரப்பில் இறந்து கிடந்த காட்சிகள் உலகை உலுக்கின. பருவநிலை மாற்றத்தின் அவலத்தை உணர்த்த இந்தப் படங்கள் ஆவணமாகவும் மாறின.

x