பருவநிலை மாற்றம்: தீர்வை முன்வைக்குமா கிளாஸ்கோ மாநாடு?


பருவநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை உலகின் பல்வேறு நாடுகள் சந்தித்துவரும் சூழலில், அக்டோபர் 31-ல் தொடங்கும் ‘கிளாஸ்கோ மாநாடு’ மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. புவி வெப்பமடைவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கடைபிடிக்க வேண்டிய உத்திகள், அடைய வேண்டிய இலக்குகள் குறித்து தீர்மானிக்க பிரிட்டனின் அங்கமான ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில், அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரையில் ஐக்கிய நாடுகள் சபை ஆதரவில் உலக மாநாடு நடைபெறுகிறது. பருவநிலை மாறுதல் குறித்து கவலையுடன் ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்யும் 26-வது மாநாடு இது. உலகமே இந்த மாநாட்டை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துருக்கி அதிபர் ரெசெப் தய்யீப் எர்டோகன், பருவநிலை மாறுதலைக் குறைக்க அயராது குரல் கொடுத்துவரும் சுற்றுச்சூழல் காப்புப் போராளி கிரேட்டா துன்பர்க், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு, கேம்பிரிட்ஜ் கோமகன் – கோமகள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரிப்புகை வெளியேற்றத்தைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, உறுப்பு நாடுகள் இந்த மாநாட்டில் உறுதிமொழி அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதே நோக்கத்துடன் நடத்தப்பட்ட, பாரிஸ் மாநாட்டுக்குப் பிறகு நடக்கும் 3-வது மாநாடு இது. பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, எல்லா நாடுகளும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தாங்கள் ஒப்புக்கொண்ட இலக்கு என்ன, அடைந்தது என்ன என்ற விவரங்களை அளிக்கும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய இந்த மாநாடு, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்போதும் பல நாடுகள், காணொலிக் காட்சி வழியாகவே இதில் பங்கேற்கின்றன. இந்த மாநாட்டுக்கு COP 26, CMP 16, CMA3 என்ற பெயர்களும் உண்டு.

இந்த மாநாட்டின் தலைவர்களாக பிரிட்டனும் இத்தாலியும் செயல்படுகின்றன. தங்களுடைய நாட்டில் பசுமைக்குடில் இல்ல வாயு வெளியேற்றங்களை வெளியேற்ற, தாங்கள் நிர்ணயித்துக்கொண்டுள்ள இலக்குகளை பாரிஸ் மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி நாடுகள் அளிக்கும். ஐந்தாண்டுகளுக்கொரு முறை இந்த இலக்குகள் அதிகரிக்கப்படும். பாரிஸ் ஒப்பந்தம் 2015-ல் கையெழுத்தானது. எனவே, 2020-ல் எல்லா நாடுகளுமே தாங்கள் குறைக்க ஒப்புக்கொண்ட கரிப்புகை வெளியேற்ற அளவு உட்பட அனைத்தையும் வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பெருந்தொற்று காரணமாக அந்த மாநாடு ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு, இப்போதுதான் நடைபெறுகிறது. அடுத்து 2023-ல் உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட, நாடுகளின் இலக்குகளும் அடைந்துள்ள முன்னேற்றங்களும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.

2015 பாரிஸ் மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட கரிப்புகை வெளியேற்ற இலக்கிலிருந்தும் தீர்மானங்களிலிருந்தும் அமெரிக்கா விலகுகிறது என்ற அறிவிப்பை, அந்நாட்டின் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் 2017 ஜூன் 1-ல் அறிவித்தார். இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் பொருளாதார முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும் என்றும் நிரந்தரமாக அதை அசவுகரியத்துக்கு உள்ளாக்கிவிடும் என்றும் அவர் கூறினார். பாரிஸ் ஒப்பந்தத்தின் 28-வது கூறின்படி, 3 ஆண்டுகளுக்கு முன்னால் நோட்டீஸ் தராமல் எந்த நாடும் விலக முடியாது. அதை ஏற்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது. ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த 2020 நவம்பர் 4-ம் தேதிக்கு மறுநாள், அமெரிக்காவின் விலகல் அறிவிப்பு அமலுக்கு வந்தது. ஆனால், அமெரிக்கா இதிலிருந்து விலகுவதை அமெரிக்கர்களும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியும் விரும்பவில்லை. தேர்தலில் ட்ரம்ப் தோற்று, ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டதால், அமெரிக்கா மீண்டும் 2021 ஜனவரி 20-ல் இந்த சர்வதேச உடன்பாட்டில் சேர்ந்துவிட்டது.

2015-ல் நடந்த சர்வதேச பருவநிலை மாறுதல் தொடர்பான மாநாடு, தொழில்புரட்சி ஏற்படுவதற்கு முன்னால் நிலவிய புவி வெப்ப நிலையில் 2 டிகிரி செல்சியஸைக் குறைக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தது. காடுகளை வளர்ப்பது, கரிப்புகை வெளியேற்றத்தைக் குறைப்பது, சுற்றுச்சூழலுக்கு சேதம் இல்லாத தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது என்ற முடிவுகளை அது எடுத்தது. கியாட்டோ மாநாட்டில், 1997-ல் வளரும் நாடுகளுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் இப்போது தரப்படவில்லை. அனைத்து நாடுகளுக்குமே அவரவருக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக, வளரும் நாடுகள் கரிப்புகை வெளியேற்றத்தைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் வழங்க வேண்டிய நிதியுதவி குறித்து மாநாடு விவாதிக்கும். ஏற்கெனவே, இப்படி 10,000 கோடி அமெரிக்க டாலர்களை வழங்க ஒப்புக்கொண்டுவிட்டு எல்லா பணக்கார நாடுகளும் அந்த இலக்கை நிறைவேற்றத் தவறிவிட்டன. எனவே, இந்த மாநாட்டில் நாடுகள் எப்படிச் செயல்படும் என்று பார்க்க வேண்டும்.

இந்த மாநாடு குறித்து கிரேட்டா துன்பர்க், நம்பிக்கை இழந்தவராகவே காணப்படுகிறார். “செய்வோம் என்று எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள் – ஒருவரும் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவதே இல்லை” என்று, தனது அனுபவத்திலிருந்து சோகம் கொப்பளிக்கப் பேசுகிறார். உலகின் வெப்பநிலையைக் குறைப்பது, ஏதோ அடுத்தவருக்குச் செய்யும் தர்மத்தைப் போலவே பணக்கார நாடுகள் நினைப்பது பரிதாபம். இந்த அளவுக்கு புவியைக் கெடுத்ததே, கொடிய பணத்தாசை கொண்ட முதலாளித்துவமும் அது ஊக்குவித்த தொழில்புரட்சியும்தான். மாநாட்டில் நாடுகள் உளப்பூர்வமாக கலந்துகொண்டு செயல்படுமா அல்லது வெறும் அடையாள சம்பிரதாயம்தானா என்பது போகப்போகத் தெரிந்துவிடும்.

கூடவே, கரிப்புகை வெளியேற்றத்தில் 3-வது பெரிய நாடான இந்தியா முன்வைக்கப்போகும் கருத்துகளும் இந்த மாநாட்டில் முக்கியத்துவம் பெறும்.

x