இழுபறிக்கு பின்னர் இறுதியான ஐஎஸ்ஐ தலைவர் நியமனம்


நதீம் அகமது அன்ஜும்

பாகிஸ்தானில் 3 வாரங்களாக இழுபறியில் இருந்த, அந்நாட்டின் உளவுத் துறை தலைவர் பதவிக்கு ஒருவழியாக முடிவு எட்டப்பட்டிருக்கிறது. புதிய ஐஎஸ்ஐ தலைவராக நதீம் அகமது அன்ஜும் என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில், பிரதமர்-ராணுவம் இடையிலான மோதலும் தற்போதைக்கு தணிந்திருக்கிறது.

ஐஎஸ்ஐ

பெயரளவில் பாகிஸ்தான் ஜனநாயக தேசம் என்றாலும், பிரதமருக்கு நிகராக ராணுவ தலைமையும் அங்கே அதிகாரம் செலுத்தி வருகிறது. இந்த 2 அதிகார மையங்களும் முட்டிக்கொள்ளும்போது, பிரதமர் அகற்றப்பட்டு ராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்த வரலாறும் பாகிஸ்தானுக்கு உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் இன்னொரு நிழல் அதிகார மையமாக, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ வளர்ந்து வருகிறது. பிரதமர்-ராணுவம் என்ற இரண்டில், எவருக்கு சகாயமாக இந்த நிழல் கவிகிறதோ, அவரே அதிகார வரம்பில் அதிகம் நிமிர்ந்திருப்பார்.

தற்போதுவரை ஐஎஸ்ஐ தலைவராக நீடித்து வருபவர் ஃபயஸ் ஹமீது. இவரும் பிரதமர் இம்ரான்கானும் நெருக்கமாக இருந்ததை பாகிஸ்தான் ராணுவம் ரசிக்கவில்லை. எனவே, அவரை மாற்றும் முடிவில் இருந்தது. மேலும் ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தபோது, ராணுவத் தலைமையின் ஆலோசனையின்றி இந்த ஃபயஸ் ஹமீது, ஆப்கன் சென்று தாலிபானின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்தார். அங்கு ஆட்சியமைப்பதில், தாலிபான் தளபதிகள் இடையே மத்தியஸ்தம் செய்யுமளவுக்கு ஹமீது அவர்களோடு நெருங்கியிருந்தார். பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியான கமார் ஜாவேத் பாஜ்வா இதை ரசிக்கவில்லை. ஐஎஸ்ஐ தலைவரை மாற்றும் முடிவில் அதன் பின்னர் ராணுவம் தீவிரமானது. ஆனால், அதற்கு பிரதமர் இம்ரான் கான் பிடிகொடுக்கவில்லை.

ஃபயஸ் ஹமீது

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் - ராணுவ தலைமைத் தளபதி கமார் இடையிலான அதிகார மோதலில், தற்போதைய ஐஎஸ்ஐ தலைவர் ஃபயஸ் ஹமீதுக்கும் ஓர் உள் கணக்கு இருந்தது. ராணுவ தளபதி கமாரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பருடன் நிறைவடைய உள்ளது. அதுவரை ஐஎஸ்ஐ தலைவராக நீடித்துவிட்டு, அதன் பின் ராணுவ தலைமைத் தளபதியாகும் கனவில் இருந்தார் ஃபயஸ் ஹமீது. தனது விசுவாசி ராணுவ தலைமைக்கு நகர்வது இம்ரானுக்கும் ஆதாயம் தரக்கூடியது. ஆனால் ஐஎஸ்ஐ தலைவர் - பிரதமர் இடையிலான புதிய புரிதல்களை ராணுவம் விரும்பவில்லை. ஃபயஸ் ஹமீதின் ராணுவ தலைமைத் தளபதி ஆசை பலித்தால், அடுத்து அவரது ஆதரவு பெற்றவரே ஐஎஸ்ஐ-க்கும் புதிய தலைவராக வாய்ப்பாகும். கடைசியில் ஐஎஸ்ஐ அதன் நோக்கத்திலிருந்து ஒட்டுமொத்தமாய் வழுவி, ராணுவத்துக்கு சங்கடங்களை தந்துவிடும். எனவே, ஃபயஸ் ஹமீதுவை நீக்குவதில் ராணுவம் முழுமுனைப்பில் ஈடுபட்டது.

இம்ரான் கான்

ஐஎஸ்ஐ அமைப்பின் சீரிய நோக்கங்கள் என்ன என்பதை, பாகிஸ்தானியர்களை விட இந்தியாவிலிருக்கும் நாம் நன்றாகவே அறிவோம். ஐஎஸ்ஐ-ன் முதலும் கடைசியுமான கடமை என்பது, எதிரி தேசமான இந்தியாவை சீண்டுவதாகவே இருக்கும். இந்திய எல்லையோர தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது, உள்நாட்டின் கிளர்ச்சியாளர்களை ஊக்குவிப்பது, வாய்ப்பு கிடைத்தால் நாச வேலைகளில் ஈடுபடுவது; இப்படி இந்தியாவுக்கு எதிரான மறைமுகப் போரை ஐஎஸ்ஐ தொடர்ந்து நடத்தும். நேரடிப் போரில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தோல்வி நிச்சயம் என்பதால், ஐஎஸ்ஐ அமைப்பு வாயிலான மறைமுகப் போருக்கு முக்கியத்துவம் தருகிறது.

ஆனால், தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ஐஎஸ்ஐ உளவாளிகளை எல்லைக்கு அப்பால் கவனம் செலுத்த அனுமதியாது, தனது அரசியல் தேவைக்காக உள்நாட்டிலேயே பணிப்பதாக ராணுவத் தலைமைக்கு பெரும் ஆதங்கம் உண்டு. அப்படி ஐஎஸ்ஐ உளவாளிகளின் திருவிளையாடலில், இம்ரானுக்கு எதிரான பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கடும் நெருக்கடிகளை சந்தித்தன. அதனாலேயே, ஐஎஸ்ஐ தலைவரை மாற்ற வேண்டும் என்ற ராணுவத்தின் முடிவுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தன. முக்கிய எதிர்க்கட்சியான பிஎம்எல் தலைமையில் அண்மையில், ஐஎஸ்ஐ தலைவர் ஃபயஸ் ஹமீதுக்கு எதிராக நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பத்திரிக்கையாளர்களை கடத்துதல், சாதக தீர்ப்புகளுக்காக நீதிபதிகளை மிரட்டுதல் என அடியாள் படைக்கான வேலைகளை ஓர் உளவு நிறுவனம் செய்து வருவதாக, நவாஸ் ஷெரீப்பின் மகளும் பிஎம்எல் துணைத் தலைவருமான மரியம் நவாஸ் குற்றம்சாட்டுகிறார். அதனால், இம்ரானுடனான ஃபயஸ் ஹமீதின் தொடர்பை அறுக்க மரியமும் போராடி வருகிறார்.

லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அகமது அன்ஜும் என்பவரை, ஐஎஸ்ஐ தலைவராக்க ராணுவம் முடிவு செய்தது. ஆனால், அதற்கான முடிவு எடுக்கப்பட்டு 3 வாரங்களாகியும் பிரதமர் இம்ரான்கான் இழுத்தடித்து வந்தார். ராணுவ அதிகார மையங்களுக்கு இடையே, சிவில் தலைவர் தலையிடுவதாக ராணுவ தலைமைத் தளபதி வெளிப்படையாக எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. கடைசியில் ராணுவத்தின் கை ஓங்கவே, புதிய ஐஎஸ்ஐ தலைவருக்கான அறிவிப்பை பிரதமர் இம்ரான்கான் நேற்று(அக்.26) வெளியிட்டார். இந்த அதிகார மோதல் இழுபறியில், ராணுவத்தால் பிரதமர் நாற்காலிக்கு ஆபத்து நேரும் வாய்ப்பு தென்பட்டதும் இம்ரான்கான் இறங்கி வந்திருக்கிறார். தற்போதைய ஐஎஸ்ஐ தலைவர் ஃபயஸ் ஹமீது நவ.19 வரை அந்தப் பதவியில் நீடிப்பார். புதிய தலைவராக நதீம் அகமது அன்ஜும் நவ.20 அன்று பதவி ஏற்கிறார்.

தற்போதைய ஐஎஸ்ஐ தலைமை மாற்றத்தில் இழப்பு இம்ரான்கானுக்கு மட்டுமல்ல; ஒருவகையில் இந்தியாவுக்கும்தான். உளவு அமைப்பின் புதிய தலைவர் ராணுவத்தின் இழுப்புக்கு இசைபவர் என்பதால், இந்தியாவின் அமைதியை குலைக்கும் நாசகாரங்களை மேலும் அதிகரித்து பாகிஸ்தான் ராணுவத்திடம் நல்ல பெயரெடுக்கவே அவர் விரும்புவார்.

x