போர்க்களங்களுக்கு இணையாக சிறைச்சாலைகள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக் கணக்கான கைதிகளை விடுவிக்கும் ஆயுதக் குழுக்களால் நைஜீரியா தேசம் நடுங்கி வருகிறது.
நைஜீரிய நாட்டில் அண்மைக்காலமாக ஆயுதக்குழுக்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன. தேசத்தின் வடகிழக்கில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களும், வடகிழக்கில் ஆட்கடத்தல் குழுக்களுமாக எல்லை பிரித்து நாட்டின் சட்டம் ஒழுங்கை ஏலம் விட்டு வருகிறார்கள்.
ஓயோ மாகாணத்தின் சிறைச்சாலை வெள்ளியன்று பின்னிரவில் இதுபோன்ற தாக்குதலுக்கு ஆளானது. டைனமைட் வெடிகுண்டுகளை வைத்து சிறைச்சாலையின் அரண்களையும், கதவுகளையும் தகர்த்தவர்கள், சிறையின் பாதுகாவலர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடத்தி முன்னேறினார்கள். தாக்குதல் சம்பவத்தின் முடிவில் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பிச் சென்றனர். கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டதில் 262 பேர் மீண்டும் கைதானார்கள். 575 கைதிகளை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். காவல்துறையை தலைகுனியச் செய்யும் இந்த சம்பவம் குறித்து தாமதமாகவே சிறை நிர்வாகம் வெளியுலகுக்கு அறிவித்தது.
சிறைச்சாலைகள் மற்றும் காவல் நிலையங்கள் மீதான தொடரும் தாக்குதல் சம்பவங்களால் நைஜீரியா திணறி வருகிறது. கோகி மாகாணத்தில் கடந்த மாதம் 266 கைதிகளும், இமோ மாகாணத்தின் ஏப்ரல் தாக்குதலில் 1800 கைதிகளும் இதுபோன்று தப்பித்துள்ளனர். ஆட்கடத்தலில் பெரும் தொகை பெயர்வதில்லை என்பதால், இம்மாதிரி சிறையிலிருக்கும் பெரும்புள்ளிகளை விடுவிக்க பேரம் பேசி தாக்குதலில் இறங்குகிறார்கள். ஓரிருவர் விடுவிப்புக்கான தாக்குதலில் நூற்றுக் கணக்கான கைதிகள் தப்பிச் செல்லும் போக்கு நைஜீரியாவில் பெரும் தலைவலியாகி வருகிறது.