ஜப்பான் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மகோ, சாமானியரான காதலரை கரம்பிடிக்க உள்ளதால் தனது இளவரசி பட்டத்தை இழக்கிறார். ஓர் இளவரசியாக அவரது ’நிறைவு’ பிறந்த நாளை ஜப்பான் மக்கள் நெகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர்.
அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசியான மகோ என்பவருக்கும், சாதாரண குடிமகனான கீ கொமுரோ என்பவருக்கும் இடையே கல்லூரி காலத்தில் நட்பாய் துளிர்த்த பழக்கம் காதல் விருட்சமாக வளர்ந்தது. ஜப்பான் அரச வழக்கில், அரச குடும்பத்துக்கு அப்பால் திருமணம் முடிப்பவர்கள் அரச மரியாதைகள் மற்றும் அடையாளங்களை இழப்பார்கள். அதனால், இந்த காதலுக்கு அரச குடும்பத்தில் சலசலப்பு எழுந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பே, இருவரும் திருமணம் செய்துகொள்வது குறித்து பொதுவெளியில் அறிவித்தனர். அரச குடும்பத்தில் எழுந்த அதிருப்தியையும் மீறி, இளவரசி மகோ தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். மகோவின் காதலர் சாதாரணர் என்பதால் மகோவின் இளவரசி பட்டமும், இதர ராஜபோக அனுகூலங்களும் பறிபோகும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
கொண்ட காதலில் தீவிரமாக இருந்த மகோவின் பிடிவாதம் ஜெயித்தது. அரச குடும்பம் இறங்கி வந்தது. திருமணத்துக்குப் பின்னரான மகோவின் வாழ்க்கைக்காக பல மில்லியன் அமெரிக்க டாலர் நிதியையும், சொத்துகளையும் அளிக்கவும் அரண்மனை முன்வந்தது. ஆனால் இளவரசி பட்டத்தை உதறியதுபோல, மேற்படி உதவிகளையும் தவிர்த்திருக்கிறார் மகோ.
விரைவில், மகோ-கொமுரா திருமணம் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. திருமண விழாவை அடுத்து அங்கேயே இருவரும் செட்டிலாக உள்ளனர். இதற்கிடையே ஓர் இளவரசியாக மகோவின் ’கடைசி’ பிறந்தநாளை, ஜப்பான் அரண்மனை நேற்று(அக்.23) விமரிசையாக கொண்டாடியது. இளம்பிராயத்தில் ஓடி விளையாடிய இடங்களை சுற்றிப் பார்ப்பது, அரச குடும்ப உறவுகள் மற்றும் பணியாளர்களுடன் புகைப்படம் எடுப்பது என மகோ தனது 30-வது பிறந்தநாளை நிறைவாகக் கொண்டாடினார்.
ஜப்பான் அரச குடும்பத்தில், இதற்கு முன்பாகவும் காதலுக்காக அரச அந்தஸ்தை இழந்தவர்கள் உண்டு. ஆனபோதும் சமகாலத்தில், காதலுக்கு மரியாதை செய்த மகோவின் மகோன்னதத்தை ஜப்பானுக்கு வெளியேயும் சிலாகித்து வருகிறார்கள். அரச குடும்பத்தை விட்டு வெளியேறினாலும் ஜப்பான் மக்கள் மனதில் மகாராணியாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் மகோ.