ஹெச்ஐவி அச்சம்: கோவிட் தடுப்பூசிக்கு தடைபோடும் ஆப்பிரிக்க நாடுகள்


ஸ்புட்னிக் 5 தடுப்பூசி

ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் 5 என்ற கோவிட் தடுப்பூசிக்கு ஆப்பிரிக்க நாடுகள் அடுத்தடுத்து தடை போட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிக்கும் எய்ட்ஸ் பரவலுக்கும் இடையிலான நிரூபிக்கப்படாத ஐயத்தை மையமாக்கி ஆப்பிரிக்க நாடுகள் பீதி கிளப்புகின்றன.

உலகில் இன்னமும் எய்ட்ஸ் பரவல் அதிகமுள்ள நாடுகள் ஆப்பிரிக்காவில் அடங்கியுள்ளன. அதே போல கடந்த ஆண்டில் பரவத் தொடங்கிய கரோனா தொற்றும் ஆப்பிரிக்க நாடுகளை அதிகம் பாதித்துள்ளன. பொருளாதாரத்தில் நொடித்த ஆப்பிரிக்க நாடுகளின் நல வாழ்வுக்காக ஐ.நா மற்றும் இதர கூட்டமைப்புகள் இலவசமாக கோவிட் தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன.

ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் 5 என்ற கோவிட் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்கும் பணிகள் நமீபியாவில் அண்மையில் தொடங்கின. அதற்கிடையே தென்னாப்பிரிக்காவில் ஸ்புட்னிக் 5 தடுப்பூசிகள் போடும் பணியை அந்நாட்டு நிறுத்தி வைத்தது. எய்ட்ஸ் தொற்றுக்கு ஆளாவோர் மத்தியில் ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் ஹெச்ஐவி பாதிப்பு வீரியம் கூடுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தென்னாப்பிரிக்க அரசு தடுப்பூசிக்கு தடை போட்டது.

தென்னாப்பிரிக்காவின் வழியில் நமீபியாவும் தடுப்பூசி வழங்குவதை நிறுத்தி வைத்தது. இதையடுத்து ஸ்புட்னிக் தடுப்பூசிகளை நிறுத்துவது குறித்தும், இந்திய தயாரிப்பான கோவிஷீல்ட் மற்றும் சீன தயாரிப்பான சைனோவேக் தடுப்பூசிகளுக்கு மாறுவது குறித்தும் இதர ஆப்பிரிக்க நாடுகள் பரிசீலித்து வருகின்றன. ஆனால் ஸ்புட்னிக் தடுப்பூசியில் அடங்கியுள்ள வேதி உட்பொருட்களுக்கும், ஹெச்ஐவி தாக்கம் தூண்டப்பெறுவதற்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆப்பிரிக்க நாடுகளின் குற்றச்சாட்டை ரஷ்யா தடுப்பூசி நிறுவனம் மறுத்துள்ளது.

x