நிலக்கரியைக் கைவிட மறுக்கும் ஆஸ்திரேலியா


பருவநிலை மாற்றத்துக்கு ஒத்துழைக்காத முரட்டு நாடு என்று பெயரெடுத்திருக்கிறது ஆஸ்திரேலியா. நிலக்கரி விஷயத்தில் அந்நாடு காட்டும் பிடிவாதம்தான் இந்த அவப்பெயருக்கு வழிவகுத்திருக்கிறது.

நிலக்கரி ஏற்றுமதியில் முக்கிய இடம் வகிக்கும் தேசம் ஆஸ்திரேலியா. மிகப் பெரிய பணக்கார நாடாக இருந்தாலும் தன்னுடைய மின்சார உற்பத்திக்குப் பெருமளவு நிலக்கரியைத்தான் பயன்படுத்துகிறது. 2005-ல் வெளிப்படுத்திய கரிப்புகை அளவில் பாதியை மட்டும்தான் தன்னால் 2030-ல் குறைக்க முடியும் என்று கூறியிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன் குறைக்க ஒப்புக்கொண்ட அளவில் இது பாதி மட்டுமே. 2050-க்குப் பிறகு கரிப்புகையை எங்கள் நாட்டிலிருந்து வெளிவராமல் தடுத்துவிடுவோம் என்று உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் பாரிஸ் நகரில் நடந்த புவி வெப்பத்தைக் குறைப்பதற்கான சிறப்பு மாநாட்டில் ஒப்புக்கொண்டபோது, அது அவசியமில்லை என்று எதிர்ப்பு தெரிவித்த ஒரே நாடு ஆஸ்திரேலியா மட்டுமே. அது மட்டுமல்ல, புதைபடிமப் பயன்பாட்டைக் குறைப்பதாக எல்லா நாடுகளும் கூறியபோது, அதை மேலும் தோண்டியெடுத்து பயன்பாட்டை அதிகரிக்க முடிவு செய்த ஒரே நாடும் ஆஸ்திரேலியாதான்.

காரணம் என்ன?

பூமிக்கடியில் கிடைக்கும் புதை படிவங்களை வெட்டி எடுப்பதைக் கடந்த பல பத்தாண்டுகளாக லாபகரமாக மேற்கொண்டு வருகிறது ஆஸ்திரேலியா. அந்நாட்டிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் பண்டங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருப்பது நிலக்கரிதான். உலகிலேயே நிலக்கரி ஏற்றுமதியில் முதலிடம் இந்தோனேசியாவுக்கு. தன்னுடைய நாட்டின் செல்வ வளத்துக்குக் காரணமே நிலக்கரிதான் என்று பெருமை பேசுகிறது ஆஸ்திரேலியா. ஆண்டுக்கு 4,000 கோடி டாலர் மதிப்புக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்து மட்டுமே சம்பாதிக்கிறது. இந்த வருமானத்தில் பெரும்பகுதி ஆஸ்திரேலிய நிலக்கரி நிறுவனங்களுக்குத்தான் செல்கிறது. பத்து சதவீதத்துக்கும் குறைவாகத்தான் தேசிய வருமானத்தில் சேர்கிறது. அது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1 சதவீதம் மட்டும்தான். நிலக்கரித் தொழிலைத்தான் ஏராளமான தொழிலாளர்கள் நம்பி இருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. சுமார் 40,000 பேர்தான் அதில் ஈடுபடுகிறார்கள். ஆஸ்திரேலியாவிலேயே மெக்டொனால்ட் நிறுவனத்தில் வேலை செய்வோர் எண்ணிக்கையில் இது பாதிகூட இல்லை. ஆனால் ஆஸ்திரேலிய கிராமப்புற மக்களுக்கு நிலக்கரி மூலம்தான் தொடர் வருமானம் கிடைக்கிறது.

அத்துடன் அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்துகிறவர்கள் நிலக்கரிச் சுரங்க அதிபர்கள். கரிப்புகை வெளியீட்டைக் குறைக்க வேண்டும் என்று வாக்காளர்களில் பலர் ஆதரித்தாலும், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவை நிர்ணயிக்கக் கூடிய – முடிவையே மாற்றக்கூடிய - தொகுதிகள் அனைத்துமே நிலக்கரித் தொழில் நகரங்களாக இருக்கின்றன. நிலக்கரிச் சுரங்கங்கள் எவ்வளவு வெட்டியெடுக்க வேண்டும், எவ்வளவு நிலக்கரியை மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்த வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்ட வரம்புகளைக்கூட இப்போதைய ஆஸ்திரேலிய அரசு நீக்கிவிட்டது. மாறாக, புதிதாக நிலக்கரிச் சுரங்கங்களைத் திறக்கவும் அதிகம் வெட்டவும் அனுமதி வழங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 1,000 கோடி ஆஸ்திரேலிய டாலர்களை நிலக்கரிச் சுரங்க நிறுவனங்களுக்கு மானியமாக அளித்திருக்கிறது அரசு!

தொடரும் பிடிவாதம்

பருவநிலை மாறுதலைத் தடுக்க வேண்டி எல்லா நாடுகளுமே அனல் மின்நிலையங்களின் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டுவிடும் என்பதால், நிலக்கரிக்கு இனி தேவைகளும் குறையும் என்ற உலகப் பொது வாதத்தை ஏற்க மறுக்கிறது ஆஸ்திரேலியா. மாறாக, நிலக்கரிக்குத்தான் தேவை அதிகமாகும் என்கிறது. உலக அளவில் சீனாவும் இந்தியாவும்தான் உற்பத்தியாகும் நிலக்கரியில் 64 சதவீதம் பயன்படுத்துகின்றன. இப்போது கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு எல்லா நாடுகளிலுமே மின்சாரத்துக்கு அதிகத் தேவை ஏற்பட்டிருக்கிறது. பழைய அனுபவப்படி, இதை எதிர்கொள்ள அனல் மின் நிலையங்களால்தான் முடியும். ஒரு வகையில் ஆஸ்திரேலியாவின் கணிப்பும் சரிதானோ என்று எண்ணத் தோன்றுகிறது. கரிப்புகையைக் குறைக்க, பசுமைக்குடில் இல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த நாடுகள் உண்மையாகவே விரும்பினால்தான் நிலக்கரிக்குத் தேவை குறையும்.

ஆஸ்திரேலியா நினைத்தால் நாளையே கூட நிலக்கரியை வெட்டி எடுப்பதையும் அனல் மின் நிலையங்களில் பயன்படுத்துவதையும் முழுதாக நிறுத்திவிட முடியும். ஆனால், புதிதாக நிலவாயு தயாரிப்புக்கு 50 கோடி அமெரிக்க டாலர்களை அந்நாடு ஒதுக்கியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவிடமிருந்து அதிக அளவில் நிலக்கரி இறக்குமதி செய்யும் ஜப்பான், தென் கொரியா, சீனா ஆகிய நாடுகள் 2050-க்குள் கரிப்புகை வெளியேற்ற அளவை பூஜ்யமாக்கிவிடுவோம் என்று கூறியுள்ளன. வட அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நிலக்கரிப் பயன்பாடு குறைந்துவிட்டது. நிலக்கரிச் சுரங்க திட்டங்களுக்கும் அனல் மின் நிலையங்களை நிறுவுவதற்கும் கடன் கொடுப்பதை ஜி-7 நாடுகளும் சீனாவும் நிறுத்திவிடுவதாக ஒப்புக்கொண்டுள்ளன.

ஆஸ்திரேலியா நினைத்தால் நாளையே கூட நிலக்கரியை வெட்டி எடுப்பதையும் அனல் மின் நிலையங்களில் பயன்படுத்துவதையும் முழுதாக நிறுத்திவிட முடியும். தீவு நாடான ஆஸ்திரேலியா நல்ல சூரிய ஒளி பாயும் தேசம். எனவே சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதைப் பெருமளவில் மேற்கொள்ள முடியும். அத்துடன் காற்றும் ஆண்டின் பெரும்பகுதி முழுக்க வீசும். எனவே காற்றிலிருந்தும் ஆற்றலைப் பெற முடியும். ஆனால் ஆஸ்திரேலியாவோ திரவ வடிவ நிலவாயு (எல்பிஜி) தயாரிப்பில் பெருமளவு ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறது. புதிதாக நிலவாயு தயாரிப்புக்கு 50 கோடி அமெரிக்க டாலர்களை ஒதுக்கியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவால் உருக்கு, அலுமினியம் போன்றவற்றின் உற்பத்திக்குக் கூட பசுமை எரிவாயுவைப் பயன்படுத்த முடியும். ஆஸ்திரேலியாவின் நிலக்கரித் தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்களை இதர அபூர்வமான கனிமங்களை அகழ்ந்தெடுக்கப் பயன்படுத்த முடியும். இந்த கனிமங்கள் பேட்டரி, காந்தம் தயாரிக்கப் பெருமளவு பயன்படும். புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களில் கான்பெர்ரா அரசு முதலீடு செய்திருக்கிறது. மைய ஆஸ்திரேலிய அரசோ இதில் ஆர்வமாக இல்லை.

ஐக்கிய நாடுகள் சபை தொடங்கிய பசுமை பருவநிலை நிதியத்துக்கு பங்களிப்புச் செய்வதிலிருந்து விலகி, அந்தத் தொகையை புதிய நிலக்கரி வயல்களில் முதலீடு செய்யும் முடிவை எடுத்திருக்கிறது. உலகின் எல்லா நாடுகளும் நிலக்கரியைக் கைவிட முடிவு செய்துள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் போக்கு விசித்திரமாக இருக்கிறது. இந்தச் செயலுக்காக ஆஸ்திரேலியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால்தான் அது வழிக்கு வரும். மேற்கத்திய நாடுகள் அப்படிச் செய்யுமா என்ன?

பாரிஸ் மாநாட்டுத் தீர்மானங்கள்

உலகின் வெப்ப நிலையை, தொழில்புரட்சி ஏற்படுவதற்கு முன்னால் இருந்த அளவைவிட 2 டிகிரி செல்சியல் குறைக்க வேண்டும். இது சாத்தியமாகாவிட்டால் 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்காவது குறைக்க வேண்டும் என்பது பாரிஸ் மாநாட்டு இலட்சியம். (தொழில்புரட்சிக்கு முந்தைய காலம் என்பது 1850 முதல் 1900 வரையில். அப்போது விவசாயத்துக்குத் தேவைப்பட்ட கருவிகள்கூட கைகளால்தான் தயாரிக்கப்பட்டன.)

கரிப்புகை வெளிப்பாட்டை 2020-க்குள் 25 சதவீதம், 2030-ல் 40 சதவீதம், 2040-ல் 60 சதவீதம், 2050-ல் 80-95 சதவீதம் குறைக்க வேண்டும் என்பது உலக இலக்கு. இந்த ஆண்டு உலக வெப்ப நிலை 15.8 டிகிரி செல்சியஸ். 1880 முதல் 2010 வரையிலான காலத்திய உலகின் பருவநிலையில் 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. இதனால் வரலாறு காணாத மழையும், பெரு வெள்ளங்களும் ஏற்பட்டு வருகின்றன. பருவமழைக் காலம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாள்களிலேயே கொட்டித் தீர்க்கிறது. வறட்சியும் காட்டுத் தீயும் அதிகரிக்கின்றன. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. வற்றாத ஆறுகள் ஆண்டின் பெரும்பகுதியில் நீரோட்டமே இல்லாமல் குட்டைபோலத் தேங்குகின்றன.

பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் குறைக்க எல்லா நாடுகளின் அரசுகளும் கால வரம்புடன் கூடிய இலக்கை நிர்ணயித்து அறிவிக்க வேண்டும், அதைச் செயல்படுத்த வேண்டும்.

புவி வெப்பமடைய காரணங்கள் என்ன?

கடலில் மித மிஞ்சிய அளவில் இயந்திரப் படகு, நவீன வலைகள் மூலம் அடியோடு சுரண்டி மீன் பிடிப்பதால் கடலின் தன்மையே மாறுகிறது, வெப்ப நிலை அதிகரிக்கிறது, கடலடி நீரோட்டங்களில் இது மாற்றத்தை ஏற்படுகிறது.

தொழில்மய நடவடிக்கைகளால் எல்லா நாடுகளிலும் கரிப்புகை வெளியீடு அதிகரித்து வருகிறது.

கால்நடை வளர்ப்பில் பெரும்பண்ணை முறையால் தண்ணீர் பயன்பாடு அதிகரித்ததுடன் வெப்பமும் உயர்கிறது.

மக்களுடைய நுகர்வுக் கலாச்சாரம் அதிகரித்துவிட்டதால் எல்லா வகைப் பொருள்களும் மேலும் மேலும் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. அதனால் திட, திரவ, வாயுக் கழிவுகள் அதிகமாகின்றன.

தரை, வான், கடல் என்று எல்லா நிலைகளிலும் போக்குவரத்து வசதிகளும் வாகனங்களும் பெருகிவிட்டதால் ஆண்டின் எல்லா நாள்களிலும் நாளின் எல்லா மணிகளிலும் வாகனங்கள் போய்க்கொண்டே இருக்கின்றன. வாகனங்கள் வெளியிடும் கரிப்புகை, நகரங்களில் மக்களால் நேரடியாக உணரப்படும் அளவுக்கு வெப்பத்தை அதிகரிக்கின்றன.

எண்ணெய்த் துரப்பணப் பணிகள் கடல் பகுதியில் நிலப்பகுதியில் ஓய்வு ஒழிச்சலின்றி மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக மீத்தேன் 30 சதவீதம், கார்பன் 8 சதவீதம் காற்றில் கலக்கிறது.

அனல் மின் நிலையங்களில் நிலக்கரியைப் பயன்படுத்துவதால் 46 சதவீதம் கரிப்புகை காற்றில் கலக்கிறது.

நகரங்களில் கணினி, கைப்பேசி, வாகனங்கள், பயணங்களுக்கான பெட்டிகள், காலணிகள், ஆடைகள், பைகள், அலுமினியம், பிளாஸ்டிக், இதர உலோகம் ஆகியவை அதிகம் பயன்படுத்தப்பட்டு அவை பழுதானதும் அல்லது தீர்ந்ததும் குப்பைகளாக வீசியெறிப்படுகின்றன. அவை மக்குவதுமில்லை, மறைவதுமில்லை, அப்புறப்படுத்தப்படுவதுமில்லை. இதனால் சுற்றுச் சூழலில் மாசு அதிகரித்து வெப்பத்தையும் உயர்த்துகிறது.

கனிமத் தொழிலுக்காக, விவசாயத்துக்காக, சுற்றுலாப் பயணிகள் வந்து தங்குவதற்கு குடில்கள் அமைக்க என்று பசுமைக் காடுகள் வரம்பின்றி அழிக்கப்படுகின்றன. பண மதிப்பு மிக்க மரங்களுக்காகவும் அவை வெட்டப்படுகின்றன. இதனால் காடுகள் அழிப்பு வெகு வேகமாக நடைபெறுகிறது. புவி வெப்பம் உயர இது மிகவும் முக்கியமான காரணம்.

பெட்ரோல், டீசல், எரிவாயுப் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. போக்குவரத்துக்காக, ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் குளிர் காலங்களில் வீடுகளை சூடேற்றுவதற்காக இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

இப்படி புவி வெப்பமடைய மனிதர்கள் உருவாக்கிய காரணங்களே முக்கியமாகத் திகழ்கின்றன. எனவே இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்குத் திரும்பினால் மட்டுமே புவி வெப்ப நிலையைக் குறைக்க முடியும். நிலக்கரிப் பயன்பாட்டைக் குறைப்பது அதில் முக்கியமானது.

x