உலகம் முழுவதும் மனிதர்களிடையே ஒரே கலாச்சாரம்தான் நிலவுகிறது என்பதற்கு, எல்லா நாடுகளிலும் ‘பார்பி’ பொம்மைக்குக் கிடைக்கும் வரவேற்பே சான்று. விலை அதிகரித்தாலும் பொம்மைகள் விற்பனை லாபகரமாகவே இருக்கிறது என்று ‘பார்பி’ பொம்மைகளைத் தயாரிக்கும் மேட்டல் நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில், பொம்மை விற்பனை 8 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் அதன் மதிப்பு 180 கோடி டாலர்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
பொம்மைகளின் முக்கியத்துவம்
நம் நாட்டில் நவராத்திரி கொண்டாட்டத்தின்போது கடவுளரின் பொம்மைகளுடன் பிராணிகள், விலங்குகள், பறவைகள், நீர்வாழ்வன, மரங்கள், செடிகள், கொடிகள் என்று எல்லாவற்றையும் வகைக்கு ஒன்றாவது காட்சியில் வைப்பது வழக்கம். வீடுகளில் 5, 7, 9 படிகளில் பொம்மைகளை அடுக்குகிறவர்கள் ஓரறிவு, இரண்டறிவு என்று வகைப்படுத்தி ஆறறிவு மனிதனுக்கு அடுத்து ரிஷிகள், தேவர்கள், கடவுளர்கள் என்று பொம்மைகளை அடுக்குவார்கள். பொம்மைகளை 2 வயதுக் குழந்தை முதல் 20 வயது இளைஞர்கள் வரை பார்த்து ரசிப்பார்கள். அவரவர் வயது, அறிவுக்கேற்ப அவற்றின் வண்ணங்கள், வடிவங்கள், அவற்றைப் பற்றி அறிந்த செய்திகள், படித்த கதைகள் நினைவுக்கு வரும். அவற்றைப்பற்றி சக வயது நண்பர்களுடன் பேசும்போது மேலதிகத் தகவல்களைப் பெறுவார்கள். தவறாகத் தெரிந்துகொண்டதைத் திருத்திக் கொள்வார்கள். ஆம்! பொம்மைகள் வெறும் விளையாட்டுக்கு மட்டுமான காட்சிப் பொருட்கள் அல்ல.
மேலை நாடுகளில் இந்தக் கலாச்சாரத்தில் பொம்மைகளை மேலும் திட்டமிட்டு, அவற்றுக்கு உயிரும் அறிவும் இருப்பதைப்போல வடிவமைக்கிறார்கள். மாட்டு வண்டி, குதிரை வண்டி என்று மரப் பொம்மைகளாகத் தயாரித்து அதைக் கயிறு கட்டி இழுப்பதற்கு, அதில் சிறு துளைகளை வைத்திருப்பார்கள் இந்தியா போன்ற கீழை நாடுகளில். மேலை நாடுகளில் பேட்டரிகளைப் பொருத்தியும் ஸ்பிரிங்குகளைச் சேர்த்தும் அவற்றை இயக்கி, குழந்தைகளை வியக்க வைத்தார்கள். இப்போது பொம்மைகள் பேசுகின்றன, பாடுகின்றன, வாகனங்கள் தாங்களாகவே ஓடித் திரும்புகின்றன. குழந்தைகளுடன் சேர்ந்து பொம்மைகளுடன் நாம் ஆடும்போது, அந்நாளை நினைத்து வயது குறைந்தவர்களாக உற்சாகம் அடைகிறோம். இப்படி பொம்மைகள் உலகம் தனித்தன்மை வாய்ந்தது.
கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் அவருடைய வீட்டிலிருந்த, அதிகம் பயன்படாத பல்லக்கில் ஏறி அமர்ந்து அதன் திரைச்சீலையை மூடிக்கொண்டு தன்னுடைய கற்பனை உலகில் ஆழ்ந்துவிடுவாராம். பொம்மைகள் குழந்தைகளின் கற்பனைகளை வளர்ப்பதற்கான சிறந்த சாதனம். எனவே குழந்தைகளுக்கு ஆடைகள், இனிப்புகள், தின்பண்டங்கள் வாங்கித் தருவதைப்போல பொம்மைகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும். விளையாடவே விடாமல் எப்போதும் அடக்கியே உட்கார வைத்தால், குழந்தைகள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படும்.
ஊதலை வாங்கி இடைவிடாமல் ஊதும்போது, நமக்கு காதுக்கு நாராசமாகத் தெரிந்தாலும் அது வளரும் குழந்தைகளின் நுரையீரல் விரிவடையவும் வலுவடையவும் உதவும். இதனால்தான் அந்தக் காலத்தில், பனையோலைத் தட்டுகளில் பீப்பி செய்து தந்து குழந்தைகளை ஊத வைப்பார்கள். இப்படி ஒவ்வொரு பொம்மைக்கும் ஒரு பயன் இருக்கிறது. குழந்தை வாயில் வைத்துச் சுவைக்கும்போது நல்ல ரசம் வாயில் சேர்ந்து குழந்தையை நோய் அண்டாதபடிக்கு காக்கும் வகையில், நல்ல மரங்களில் மரப்பாச்சி செய்து வழங்கினார்கள். குழந்தைகளுக்கான பொம்மைகளைச் செய்வோர் அதை அந்நாளில் விலைக்கு விற்க மாட்டார்கள். பசிக்குச் சோறும், உடுத்த பழைய ஆடையும் வாங்கிச் செல்வார்கள். அதை வணிகப் பொருளாக என்றைக்குமே பார்த்தது கிடையாது.
கிறிஸ்துமஸ் கால பொம்மைகள்
இவ்வளவையும் சொன்னதற்குக் காரணம், பொம்மைகள் குழந்தைகளுக்கு அவசியம் என்பதை அறிவார்ந்த சமூகங்கள் அங்கீகரித்துள்ளன என்பதைக் காட்டத்தான். நவராத்திரி கொலுவுக்கு பொம்மைகள் வாங்குவதைப்போல, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குக் குழந்தைகளுக்குப் புதிய பொம்மைகளை வாங்கித் தருவது ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் வழக்கம். ஏசு பிரான் குழந்தையாகப் பிறக்கும்போது அவர் விளையாடுவதற்கு பொம்மைகள் வேண்டாமா? அவர் பிறந்தபோது வானில் ஒளிர்ந்த நட்சத்திரங்கள், அருகிலிருந்த ஒலிவ மரம், தொழுவத்திலிருந்த ஆடுகள் ஆகியவற்றுடன் கீழை நாட்டு அறிஞர்கள் ஆகியோரின் பொம்மைகளையும் வைத்து கிறிஸ்துமஸ் குடிலை அலங்கரிப்பார்கள். கிறிஸ்துமஸ் குடில் அலங்காரம் என்பது குழந்தைகளுடையது மட்டுமல்ல, குழந்தைகளாகவே மாறும் அந்தந்த வீட்டுப் பெரியவர்களின் ரசனையையும் சேர்த்தே பிரதிபலிக்கும்.
பொம்மைகளும் குடில்களும் அமைக்க முடியாத ஏழைச் சிறுவர் சிறுமியரும் ஏக்கத்தில் வீழ்ந்துவிடக் கூடாது என்ற நோக்கில், தேவாலயங்களைச் சேர்ந்தவர்களும் பணக்காரப் புரவலர்களும் அவர்களுக்கு இவற்றை வாங்கித் தருவார்கள். இப்போது கோவிட்-19 பெருந்தொற்றுக் காலம். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தேவாலயங்களுக்குக்கூட செல்ல முடியாதபடிக்கு, வீட்டோடு முடங்கிக் கிடக்க வேண்டியதாக இருந்தது. இந்த ஆண்டு தடுப்பூசிகள் வந்ததாலும் அவை கிடைக்கத் தொடங்கியதாலும் வெளியில் செல்ல அனுமதி கிடைத்திருக்கிறது.
மீண்டும் சந்தைக்கு வந்த பொம்மைகள்
பொம்மை தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக பொம்மைகளை விற்க முடியாததால், உற்பத்தியைக் குறைத்தோ, அடியோடு நிறுத்தியோ வேதனைப்பட்டார்கள். இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிறிஸ்துமஸ் நெருங்கிவிட்டது. ஓராண்டுக்கும் மேற்பட்ட பொம்மைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது. உலகம் முழுக்க இன்னமும் துறைமுகங்கள் முழுதாகத் திறக்கப்படவில்லை. கப்பல்கள் ஓடத் தயாராகவில்லை. ஓடும் ஒரு சில சரக்குக் கப்பல்களும் அத்தியாவசியப் பண்டங்களுக்கும், அதிக லாபம் தரும் சரக்குகளுக்குமே முன்னுரிமை தருகின்றன. உலக அரசுகள் முழுக் கவனம் செலுத்தி போக்குவரத்தைச் சீர்படுத்திவிட்டால், பொம்மைகள் கிடைப்பது அதிகரிக்கும்.
இந்த இடைக்காலத்தில் முடிந்தவரையில் சாலை மார்க்கமாக பொம்மைகளைக் கொண்டுபோகிறார்கள். இருந்தாலும் பல்வேறு காரணங்களால் உற்பத்திச் செலவு கூடி விலையும் அதிகரித்துவிட்டது. ஆனாலும் பாருங்கள், பெற்றோர்கள் இதைப் புரிந்துகொண்டு பொம்மைகளை வாங்கத் தொடங்கிவிட்டார்கள். குழந்தைகளின் முகத்தில் சிரிப்பையும் உற்சாகத்தையும் பார்ப்பதற்கு எவ்வளவு செலவானாலும் சரி, எப்படிக் கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் பரவாயில்லை என்றே தாயுள்ளங்கள் தீர்மானிக்கும். எனவே, இந்த கிறிஸ்துமஸுக்கு குழந்தைகளுக்கு நல்ல பொம்மைகளைத் தேடித்தேடி வாங்கத் தொடங்கிவிட்டார்கள்.
அதிகரிக்கும் விலை
இந்தச் சூழலில்தான் பார்பி பொம்மைகளின் விற்பனை அதிகரித்திருக்கிறது. அனைத்து நாடுகளிலும் அனைத்து ஊர்களிலும் தங்களுடைய பொம்மைகளுக்குத் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு, ‘பார்பி’ பொம்மைகளைத் தயாரிக்கும் மேட்டல் நிறுவனம் தீவிரமாக ஏற்பாடுகளைச் செய்கிறது. பிளாஸ்டிக் பொம்மைகளுக்கான மூலப்பொருள் விலையேற்றம், சரக்குப் பெட்டகம் வாடகை அதிகரிப்பு, கப்பல்களில் சரக்குக் கட்டண உயர்வு ஆகியவற்றால் விலை உயர்ந்திருக்கிறது. அதிகமாக விலையை உயர்த்தாமல் அதைக் குறைப்பது குறித்தும் பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் சிந்தித்து வருகின்றன. விலை காரணமாகப் பொம்மையை வாங்க முடியாமல் போய்விடக்கூடாது என்று அவை நினைக்கின்றன.
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் – இந்த ஆண்டு குழந்தையாக இருக்கும் சிறார்கள் அடுத்த ஆண்டு மேலும் வளர்ந்துவிடும்போது, அவர்களுக்கு நாட்டம் வேறொன்றின் மீது செல்லவும் வழியிருக்கிறது. எனவே குழந்தையாக இருக்கும்போது விரும்பி, கொஞ்சி, ரசித்துப் பார்க்கும் பொம்மைகள் கிடைத்துக்கொண்டே இருப்பது அவசியம். ஏராளமானவர்கள் தாங்கள் சிறு வயதில் விளையாடிய பொம்மைகளைப் பாதுகாப்பாக எடுத்துவைத்து, அடுத்த இரு தலைமுறைகளுக்குக்கூட அளிப்பது வழக்கம்.
விதவிதமான பார்பி பொம்மைகள்
பார்பி பொம்மைகளுடன ‘ஹாட் வீல்ஸ்’ கார்களும் அதிகம் வாங்கப்படுகின்றன. ‘ஜூராசிக் வேர்ல்ட்’, ‘மாஸ்டர்ஸ் ஆஃப் த யுனிவர்ஸ்’ பொம்மை செட்டுகளுக்கும் கிராக்கி இருக்கிறது. ‘மேட்டல்’ நிறுவனத்தின் போட்டியாளரான ‘ஹாஸ்ப்ரோ’வும் பொம்மை தயாரிப்பையும் விநியோகத்தையும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. மேட்டல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு நியூயார்க் பங்குச் சந்தையில் 6 சதவீதம் கூடிவிட்டது. பார்பி பொம்மைகள் ஒரே மாதிரியாக இல்லாமல் ஆசிரியர், மருத்துவர், செவிலியர், ராணுவ அதிகாரிகள், பைலட்டுகள் என்று பல வடிவங்களில் தயாராகின்றன. அத்துடன் டென்னிஸ் வீராங்கனை நவாமி ஒசாகா போலவும் விற்கப்படுகின்றன. மேட்டல் நிறுவனம், ‘பாலி பாக்கெட்’, ‘மேஜிக் 8 பால்கள்’, ‘டிஸ்னி கிளாசிக்ஸ்’ கதாபாத்திரங்கள், ‘ஃபிஷர்-பிரைஸ்’ பிராண்டுகளிலும் பொம்மைகளைத் தயாரிக்கிறது.
ரூத், எலியட் ஹேண்ட்லர், ஹெரால்ட் ‘மேட்’ மேட்சன் ஆகியோர் 1945-ல் தொடங்கிய இந்த பொம்மை தயாரிப்பு நிறுவனம், பன்னாட்டுத் தொழில் நிறுவனமாக வளர்ந்து கோடிக்கணக்கான குழந்தைகளின் பால பருவத்தை மறக்க முடியாத அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறது!