உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள யேமன் நாட்டில், ஏராளமான மக்கள் உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுகின்றனர். ஒரு கோடியே முப்பது லட்சம் மக்கள் இப்போது சர்வதேச உதவி அமைப்புகள் தரும் உணவு மற்றும் இதர உதவிகளைத்தான் நம்பியிருக்கின்றனர்.
அந்த அமைப்புகளுடைய நிதிக் கையிருப்பு வேகமாகக் கரைந்து வருகிறது. உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்து வருகிறது. உள்நாட்டுப் போர் ஓய்ந்து அரசும் வெளிநாடுகளும் உதவிக்கு வராவிட்டால், ஆயிரக் கணக்கானோர் உயிரிழப்பார்கள். இந்த உதவி தேவைப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் மட்டும் மேலும் 30 லட்சம் உயர்ந்திருக்கிறது. அரபு நாடுகளிலேயே மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள யேமனில் மோதல் மிகவும் தீவிரம் அடைந்திருக்கிறது.
வியாழக்கிழமை (அக்.14) நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய உதவி பொதுச் செயலர் ரமேஷ் ராஜசிங்கம், இது தொடர்பாக உலக அமைப்புகளை எச்சரித்திருக்கிறார். இப்போது உதவி பெறுவோர் எண்ணிக்கை ஒருபுறம் இருக்க, மேலும் உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை 2 கோடிக்கும் மேல் என்று ஐ.நா. உதவி அமைப்புகள் தெரிவிக்கின்றன அடுத்த சில வாரங்களில் 40 லட்சம் பேருக்கு அளிக்கப்படும் உணவு உதவிகள் குறையும், இந்த ஆண்டின் இறுதியில் 50 லட்சம் பேருக்குக் குறைந்துவிடும் என்று ராஜசிங்கம் அஞ்சுகிறார்.
யேமனில் 2014-லிருந்து உள்நாட்டுப் போர் நடக்கிறது. ஈரானால் ஆதரிக்கப்படும் ஹவுதி புரட்சிப் படையினர், தலைநகர் சானாவையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கைப்பற்றிக்கொண்டு, சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசை நாட்டின் தென் பகுதிக்கும் பிறகு சவுதி அரேபியாவுக்கும் விரட்டிவிட்டனர். அதிபர் அபீத் ரப்போ மன்சவுரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் முயற்சியாக, சவூதி தலைமையிலான பன்னாட்டுப் படைகள் 2015 மார்ச்சில் யேமனில் நுழைந்தன. விமானப் படை மூலமான தாக்குதல்களும், தரைப்படை தாக்குதல்களும் இருதரப்பிலும் கடும் சேதத்தை ஏற்படுத்திவிட்டன. சவூதி தலைமையிலான கூட்டுப் படைகளுக்கு அமெரிக்க ஆதரவு இருக்கிறது. இருதரப்பும் கடுமையாக மோதிக்கொண்டாலும் எந்தத் தரப்பாலும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டதால், இந்தப் போரில் நேரடியாக ஈடுபடுவதிலிருந்து அமெரிக்கா ஒதுங்கிவிட்டது.
2020 தொடக்கத்தில், அரசின் கட்டுப்பாட்டில் இருந்த மரீப் மாநிலத்தின் மீது ஹவுதிகள் கடும் தாக்குதலைத் தொடுத்தனர். அதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இறந்தனர், மேலும் பல ஆயிரம் இளைஞர்கள் காயம் அடைந்தனர். இதனால் ஏராளமானோர் சண்டை நடக்கும் பகுதியிலிருந்து அகதிகளாகப் புறப்பட்டனர். மரீப் நகரைக் கைப்பற்ற நடந்த கடும் சண்டையில் 24 மணி நேரத்துக்குள் இருதரப்பிலும் சேர்ந்து 140-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர் என்று யேமன் அதிகாரிகளும் பழங்குடித் தலைவர்களும் தெரிவித்தனர். அப்தியா, அல்-ஜுபா மாவட்டங்களில் சண்டை தொடர்கிறது.
சானாவிலிருந்து வெளியேறிய யேமன் அரசு, தங்களுடைய தலைமையை நாட்டின் தெற்கில் உள்ள ஏடனில் அமைத்தது. ஹவுதிகள் ஏடன் மீதும் கடுமையாகப் பீரங்கிகளால் சுட்டும், விமானங்கள் மூலம் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தினர். சாடா, ஹஜ்ஜா, ஹொடைடா மாநிலங்களிலும் சண்டை பரவியிருக்கிறது.
யேமன் நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாகப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஹான்ஸ் கிரண்டன்பர்க், யேமன் அரசுப் பிரதிநிதிகளுடனும் ஹவுதி பிரிவுத் தலைவர்களுடனும் பேசினார். அரசியல் தீர்வு மூலம் யேமனில் அமைதியை நிலைநாட்டுவது அவசியம் என்று வலியுறுத்தினார். ஆனால், இரு தரப்பும் பரஸ்பரம் அவநம்பிக்கையை வளர்த்து வருவதால் தீர்வு எட்டாக்கனியாக இருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது, இனியும் போரைத் தொடர்வதால் யார் வெற்றி பெற்றாலும் நாட்டை மீட்பது மிகவும் சவாலாக இருக்கும் என்பதை இருதரப்புக்கும் அவர் உணர்த்தியிருக்கிறார்.
யேமன் நாட்டுக்குச் சரக்குகள் வருவது அறவே நின்றுவிட்டது. யேமன் நாட்டு ரியாலின் மதிப்பு வெகுவாக சரிந்துவிட்டது. ஒரு அமெரிக்க டாலருக்கு 1,270 ரியால்களைத் தர வேண்டியிருக்கிறது. பணம் கொடுப்பவர்களுக்குத் தருவதற்கான உணவுப்பண்ட இறக்குமதியே, கடந்த ஆண்டைவிட 8 சதவீதம் குறைந்துவிட்டது. எரிபொருள் இறக்குமதி 64 சதவீதம் குறைந்துவிட்டது. இது மிகவும் எச்சரிக்கைக்குரிய அளவாகும். மத்திய வங்கி மூலம் வெளிநாட்டுச் செலாவணிகளை அதிக அளவில் புழக்கத்தக்கு விட்டால்தான் நிலைமை சரியாகும். உணவுப் பண்டங்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் அதிக அளவு இறக்குமதி செய்யப்பட வேண்டும், நாட்டின் எல்லா துறைமுகங்களும் திறந்துவிடப்பட வேண்டும், கப்பல் போக்குவரத்தை முழுமையாக அனுமதிக்க வேண்டும், அதற்குச் சண்டை ஓய வேண்டும் என்றார் ராஜரத்தினம். ஹொடைடா, சலீஃப் துறைமுகங்களில் இறக்குமதிக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதுடன், அரசு ஊழியர்களுக்கு நிலுவை உட்பட ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
அரபு வசந்தத்தில் தொடங்கியது
2011-ல் அரபு நாடுகளில் சர்வாதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தனர். யேமனில், அதிபர் அலி அப்துல்லா சாலே ஆட்சியை துணை அதிபர் அப்துருப்பு மன்சௌர் ஹாடி என்பவரிடம் ஒப்படைத்தார். இந்தச் சூழலில், நாட்டின் தெற்கில் ஜிகாதிகள் என்ற பிரிவினைவாதிகள் அரசுத் துருப்புகளுக்கு எதிராக கடும் தாக்குதலைத் தொடங்கினர். ராணுவ வீரர்களோ பழைய அதிபருக்கே விசுவாசமாக இருந்தனர்.
நாட்டில் ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், உணவுப் பண்டங்களுக்குப் பற்றாக்குறை ஆகியவை இருந்தது. அதிபர் பொறுப்பை ஏற்ற ஹாடியால் இவற்றைச் சமாளிக்க முடியாததால் நாட்டைவிட்டே ஓடினார். ஹவுதிகள் 2014-15-ல் தலைநகர் சானாவையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கைப்பற்றினர். ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதிகளுக்கு ஈரான் ஆதரவு தந்ததால், சவூதி அரேபியாவும் வேறு 8 நாடுகளும் ஹவுதிகளுக்கு எதிராக வான் தாக்குதலையும் பீரங்கித் தாக்குதலையும் தொடங்கின. ஈரானுக்கு எதிரான சண்டை என்பதால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை சவூதிக்குப் போக்குவரத்தில் உதவின.
யேமனுக்கு, குறிப்பாக ஹவுதிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கக் கூடாது என்பதற்காக, யேமன் துறைமுகங்களை யாரும் நெருங்காதபடிக்கு சவூதி அரேபியா முற்றுகையிட்டது. அப்போது நின்ற கப்பல் போக்குவரத்து இன்னமும் சீரடையவில்லை. இப்படி பல வெளிநாடுகளின் தலையீட்டாலும் ஷியா, சன்னி மனமாச்சரியங்களாலும் நிற்காமல் தொடர்கிறது போர். போர் தொடங்கியதிலிருந்து இதுவரையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். நாட்டின் துறைமுகங்கள் மூடப்பட்டதால் உணவு தானியம் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. உள்நாட்டில் பிற உற்பத்திகளும் குறைந்துவிட்டன. பொருளாதாரம் நாசமாகிவிட்டது.