கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகை: சர்வதேச அளவில் புதிய முயற்சி


வரி ஏய்ப்பைத் தடுக்கவும், நிறுவனங்கள் மீதான வரி வருவாயைப் பெருக்கவும், வரிச் சலுகைகளுக்காக நிறுவனங்கள் வேறு நாடுகளில் தொழிலைத் தொடங்குவதைத் தடுக்கவும் 136 நாடுகள் கூடி சர்வதேச அளவில் புதிய உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்படி இந்த நாடுகள் அனைத்திலும் நிறுவனங்கள் மீதான (கார்ப்பரேட்) வரி குறைந்தபட்சம் 15 சதவீதமாக இருக்கும். நிறுவனங்களின் அளவு அல்லது விற்பனை போன்றவற்றைப் பொறுத்து இது உயரக்கூடும்.

வரி ஏய்ப்பு மூலம் கிடைக்கும் கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்து, ரகசியமாக மேலும் மேலும் பணம் சேர்ப்பதைத் தடுக்க புதிய ஒப்பந்தம் ஓரளவுக்கு உதவும்.

பெரிய தொழில் நிறுவனங்கள் வரிச் சலுகைகளுக்காகப் பிற நாடுகளில் தொழிற்சாலைகளையும் அலுவலகங்களையும் தொடங்குவதால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்கிற வகையில் அமெரிக்காதான் இதில் முன் முயற்சியை எடுத்திருக்கிறது. ‘பொருளாதார ஒத்துழைப்பு – வளர்ச்சிக்கான அமைப்பு’ இந்த முடிவை நேற்று (அக்.8) எடுத்தது. இதை அமைப்பின் தலைமைச் செயலர் மத்தியாஸ் கோர்மென் அறிவித்தார்.

இந்த அமைப்பில் 136 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதன் தலைமையிடம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் கூட்டாக இந்த அமைப்பை 1961-ல் ஏற்படுத்தின. இதில் உறுப்பினராக இல்லாவிட்டாலும் இந்த அமைப்புடன் இந்தியாவும் சமீபத்திய ஆண்டுகளாக இணைந்து செயல்படுகிறது.

ஹங்கேரி, அயர்லாந்து, எஸ்தோனியா போன்ற நாடுகள் கடந்த வியாழக்கிழமை இதன் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து இந்த முயற்சி வேகம் பிடித்தது.

“நிறுவனங்கள் மீதான வரி குறைக்கப்படும்; வெளிநாடுகளில் உற்பத்தியைத் தொடங்கிவிட்ட அமெரிக்க நிறுவனங்கள் மீண்டும் அமெரிக்காவிலேயே உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அதிபர் தேர்தலின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாக்குறுதி அளித்திருந்தார். சமீபத்தில் வெளியான ‘பண்டோரா பேப்பர்ஸ்’ தரவுகள், வரிச் சலுகைகளுக்காகவும் வரிகளை ஏய்க்கவும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்களும் தொழிலதிபர்களும் வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகளைப் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியது. இதில் நியாயமான காரணத்துக்காக முதலீடு செய்தவர்கள் எண்ணிக்கை குறைவாகும்.

இந்தச் சூழலில், வரி ஏய்ப்பு மூலம் கிடைக்கும் கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்து ரகசியமாக மேலும் மேலும் பணம் சேர்ப்பதைத் தடுக்க புதிய ஒப்பந்தம் ஓரளவுக்கு உதவும். அத்துடன் இன்னொரு முக்கிய முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் சாதகமானது. அமேசான், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் எந்தெந்த நாடுகளில் பண்டங்களை விற்றும் சேவைகளை அளித்தும் சம்பாதிக்கின்றனவோ, அந்தந்த நாடுகளுக்கு உரிய வரியைச் செலுத்த வேண்டும் என்பதே அந்த முடிவு. இதனால், "எங்களுடைய ஆலைகளோ, அலுவலகமோ உங்கள் நாட்டில் இல்லை" என்று கூறி எந்த நிறுவனமும் வரி செலுத்துவதிலிருந்து இனி தப்ப முடியாது.

வரி ஏய்ப்புக்கு உதவும் நாடுகள், தாங்கள் வரி ஏய்ப்புக்கு உடைந்தையாக இல்லை என்றும், வரிச் சலுகை மட்டுமே அளிக்கிறோம் என்றும் கூறி வந்தன. இனி அவற்றில் முதலீடு செய்வதும் குறையும். வரி விதிப்பாளர்களைவிட வரி ஏய்ப்பாளர்கள் சுறுசுறுப்பானவர்கள். எத்தனை உடன்பாடுகளைக் கண்டாலும் விதிகளை உருவாக்கினாலும் அவற்றை எப்படி மீறுவது என்கிற கலையில் வல்லவர்கள். எனவே, அடுத்த கட்டமாக அவர்கள் என்ன செய்வார்கள் என்றும் பார்க்க வேண்டும்.

x