உளவாளிகளைத் துரத்தும் ஒலியலைகள்


வல்லரசு நாடான அமெரிக்கா, அவ்வப்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஹாலிவுட் திரைப்படங்களையும் விஞ்சுமளவுக்கு விசித்திரம் கொண்டவை. அண்மைக்காலமாக, அமெரிக்காவின் சிஐஏ உளவு நிறுவனத்தின் அதிகாரிகளைக் குறிவைத்து தொடுக்கப்படும் மர்மத் தாக்குதல்கள் அமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன. பாதிக்கப்பட்ட உளவாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் நலனுக்காகப் தனியாக சட்டம் நிறைவேற்றும் அளவுக்கு, அங்கே நிலைமை மோசமாகி இருக்கிறது. கூடவே ஒலியலைகள் உடல்நலனில் உருவாக்கும் பாதிப்புகள் குறித்தும், ஒலியலை கொலைக்கருவியாகுமா என்ற விசித்திரமான ஆய்வுகளிலும் அமெரிக்க விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக்கொண்டுள்ளனர்.

மூளைக்குக் குறி

பிரதமர் மோடியின் அண்மை அமெரிக்க விஜயத்தை முன்னிட்டு, அலுவல் நிமித்தம் டெல்லியில் முகாமிட்டிருந்த சிஐஏ அதிகாரிகள் சிலர் உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகினர். உயிருக்கு ஆபத்தில்லை என்றபோதும், மூளை மற்றும் ஒட்டுமொத்த உடலின் நரம்பியல் மண்டலத்தைத் தாக்கிய விநோதமான பாதிப்பை அவர்கள் உணர்ந்தார்கள். அவசரமாக அமெரிக்காவுக்கு வரவழைக்கப்பட்ட அவர்களிடம், நவீன எம்ஆர்ஐ உள்ளிட்ட மூளைசார் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. முடிவில், அமெரிக்க உளவாளிகளை அடுத்தடுத்து தாக்கும் ‘ஹவானா சிண்ட்ரோம்’ பாதிப்புக்கு அவர்களும் ஆளாகி இருப்பதாக முடிவுக்கு வந்திருக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

இன்று நேற்றல்ல, சுமார் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க உளவாளிகளை அலைக்கழிக்கும் பாதிப்பு இது. மறைந்திருக்கும் எதிரி தொடுக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒலியலைகள், மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கி நிலைகுலையச் செய்கின்றன. தீராத தலைவலி, கண்பார்வை மங்குதல், தொடர் குமட்டல், காதுகளில் ரீங்கரிக்கும் கொடும் இரைச்சல், இயல்பான சிந்தனையோட்டத்தை மூளை இழப்பது, மன அழுத்தம், தீவிர குழப்பம் எனப் பல்வேறு பாதிப்புகள் இந்தத் தாக்குதலுக்கு ஆளானவர்களை பீடித்திருக்கின்றன. நடப்பில், அமெரிக்கா எதிர்கொண்டிருக்கும் சவால்களில் இந்த ‘ஹவானா சிண்ட்ரோம்’ முதல் வரிசையில் இடம் பிடித்திருக்கிறது.

க்யூபத் தலைநகரிலிருந்து ஒரு தலைவலி

நீண்டகாலமாக அமெரிக்காவின் எதிரியாக பாவிக்கப்பட்ட க்யூபாவின் தலைநகர் ஹவானாவில் முதலில் அடையாளம் காணப்பட்டதால், இந்த நோய்க்குறிக்கு ‘ஹவானா சிண்ட்ரோம்’ என்ற பெயர் சேர்ந்தது. அரை நூற்றாண்டு கால சச்சரவுகளைப் பேசித் தீர்த்துவிட்டு, அமெரிக்கா-க்யூபா இடையிலான புதிய நட்பு 2015-ல் பூத்தது. அதற்கு அடுத்த ஆண்டில், ஹவானாவில் பணியாற்றிய அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் விநோத இரைச்சல்களைச் செவியுற்றனர். வெளியிலிருந்து உணரப்படாத இரைச்சல்களைச் செவிப்பறைக்குள் உணர்ந்தார்கள். அலுவலகம், விடுதி, ஓய்விடம் என குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பாதிப்பை உணர்ந்தார்கள்.

அதிகாரிகள் மட்டுமல்லாமல், உடன் தங்கியிருந்த குடும்பத்தினரும் பாதிக்கப்படவே அமெரிக்கா சீற்றமடைந்தது. க்யூபா மீதும் சந்தேகம் எழுந்தது. ஆனால், சொந்த மண்ணில் இம்மாதிரி தாக்குதல் நடத்துவதில் ஆதாயம் யாருக்கு என்ற க்யூபாவின் தர்க்கபூர்வமான கேள்விகளால் அமெரிக்கா குழம்பியது. பின்னர், க்யூபாவின் நேச தேசமான ரஷ்யா மீது அமெரிக்கா பழியைப் போட்டது. ஆனால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல், அதன் அறிவியல் பின்னணி, எதிரிகளின் நோக்கம் ஆகியவை பிடிபடவில்லை. பாதிக்கப்பட்ட அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக்கொண்டே போனது.

பீதியைத் தணிக்க தனிச் சட்டம்

அடுத்து வந்த ஆண்டுகளில், க்யூபாவில் அடையாளம் காணப்பட்ட ஹவானா சிண்ட்ரோம் இன்னும் வீரியமாக வெவ்வேறு நாடுகளில் இருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் உளவாளிகளை குறிவைத்து துரத்த ஆரம்பித்தது. போலந்து, தைவான், ஆஸ்திரியா, கிர்கிஸ்தான், கொலம்பியா, சீனா, உஸ்பெகிஸ்தான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வைத்தும் சிஐஏ உளவாளிகள் மீதான தாக்குதல்கள் அரங்கேறின. பாதிக்கப்பட்ட உளவாளிகளுக்கு, தனிநபர் உடல் தகுதியைப் பொறுத்தும் பாய்ச்சப்பட்ட ஒலியலைகளைப் பொறுத்தும் பாதிப்பு அமைந்தது. சிலநாள் ஓய்வுக்கான தலைவலி முதல் நெடுநாள் சிகிச்சைக்கான மூளையின் உள்காயம் வரை இவை வேறுபட்டன. உளவாளிகளை உளவியல் ரீதியாக இந்தத் தாக்குதல் பாதிக்கத் தொடங்கிய பின்னர், சிஐஏ விழித்துக்கொண்டது. அதற்குள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கும் அயல்பணி அதிகாரிகள், உளவாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருந்தது.

ராணுவ உத்திகளிலும், ஆயுதப் பெருக்கத்திலும், நவீன உளவு வியூகங்களிலும் கரைகண்டதாக மார்தட்டிய அமெரிக்காவின் செருக்கில் அடி விழுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் பீதியைக் குறைப்பதற்காகத் தனிச்சட்டம் ஒன்றை நிறைவேற்றும் அளவுக்கு நிலைமை வீரியம் எடுத்தது. இந்தியாவில் சிஐஏ அதிகாரி தாக்குதலுக்கு ஆளான வேளையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகேயும் ஒரு அமெரிக்க அதிகாரியிடமும் ஹவானா சிண்ட்ரோம் அறிகுறி தென்பட்டது. அதற்குச் சற்று முன்பாக, ஆசிய சுற்றுப்பயணத்தில் இருந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் வியட்நாம் பயணம் திடீர் தடங்கலுக்குள்ளானது. வியட்நாமில் அமெரிக்க அதிகாரிகள் சிலர் மீதான ஹவானா சிண்ட்ரோம் பீதியை அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து தெளிந்த பிறகே, கமலா ஹாரிஸை அங்கு அனுமதித்தனர்.

பாம்பின் கால்...

இவ்விஷயத்தில் அமெரிக்காவின் முதல் சந்தேகம் ரஷ்யா மீது விழுந்தது. அதற்கு முகாந்திரம் நிறைய உண்டு. 2-ம் உலகப்போர் காலத்தில், போட்டி போட்டுக்கொண்டு விதவிதமான ஆயுதங்களை நாடுகள் தயாரித்தன. ரஷ்யாவின் ‘மாஸ்கோ சிக்னல்’ என்ற தாக்குதல் குறித்து அமெரிக்காவும் அறிந்துவைத்திருந்தது. அடுத்தபடியாக அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் பயன்படுத்திவந்த, வீரிய மைக்ரோவேவ் சிக்னல்களைத் தொடுத்து எதிரிகளை முடக்கும் உத்திகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

மனிதச் செவியின் கேட்கும் வரம்பு 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸுக்கு இடைப்பட்டது. இதற்கு குறைவான அல்லது அதிகமான அதிர்வெண்ணில் ஒலியலைகள் தொடுக்கப்பட்டால், அவற்றை உணரும் சக்தி மனித செவிக்குக் கிடையாது. ஆனால் ஒலியலைக்கு ஒத்திசையும் வழக்கமான சாதக பாதகங்களுக்கு உடலின் உள் அவயங்கள் உட்படும். சோமாலியக் கொள்ளையர்களை நிலைகுலையச் செய்வதற்காக இம்மாதிரி ஒலியலைகளைப் பாய்ச்சி கவனத்தைத் திசைதிருப்பும் வசதியை, வளர்ந்த நாடுகளின் வர்த்தகக் கப்பல்கள் வைத்துள்ளன. பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் கலவரக் கும்பலைக் கலைக்க இதே பாணியிலான ஒலியலைகளையும் ஒரு உத்தியாகப் போலீஸார் கொண்டுள்ளனர். பயங்கரவாதிகளின் மன உறுதியைக் குலைத்து அவர்களிடமிருந்து உண்மையைக் கறப்பதற்காக, அமெரிக்கச் சிறைகளின் விசாரணைக் கூடங்களில் ஒலியையும் ஒரு ஆயுதமாக வைத்திருக்கிறார்கள். பாம்பின் கால் பாம்பறியும் என்பதால், மைக்ரோவேவ் அலைகள் பக்கம் தங்கள் ஆய்வுகளை அமெரிக்கா முடுக்கிவிட்டது. ஆனால், எதிராளியின் நோக்கம் பிடிபடாததில் அமெரிக்காவின் அடுத்த அலைக்கழிப்பு தொடர்ந்தது.

ஸ்மார்ட் சாதனங்களுக்குக் குறி?

இந்த விவகாரத்தை முன்வைத்து ரஷ்யா, சீனா, வடகொரியா வரிசையில் வேற்றுக்கிரகவாசிகள் வரை தங்களது எதிரிகளின் பட்டியல் மற்றும் அவர்களின் நோக்கங்களை அமெரிக்கா ஆராய்ந்து சலித்து வருகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஹவானாவில் பாதிப்புக்குள்ளான தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை மையமாக்கி, அமெரிக்கா இன்னமும் ஆய்வுகளைத் தொடர்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் மூளைகளை ஆராய்ந்ததில், கார் விபத்து மற்றும் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் உயிர் பிழைத்தோரின் மூளை பாதிப்புக்கு இணையான தடயங்களை நிபுணர்கள் கண்டறிந்தனர். ‘சோனிக் அட்டாக்’ என்ற அடையாளத்தின் கீழான, நவீன மைக்ரோவேவ் உமிழும் சாதனங்களால் அவர்கள் தாக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக, தாக்குதலின் இலக்கு மனிதர்கள் அல்ல; டிஜிட்டல் தகவல்தொடர்பு சாதனங்களே என்ற இடைமுடிவுக்கும் வந்திருக்கிறார்கள். ராஜாங்க அதிகாரிகள் மற்றும் உளவாளிகள் கையாளும் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களே எதிரிகளின் இலக்கு. அவற்றில் பொதிந்திருக்கும் ரகசிய ஆவணங்கள், தகவல்தொடர்புப் பரிமாற்றங்கள் ஆகியவற்றுக்காக மறைவிடங்களில் இருந்தபடி ஒலியலைகளைப் பிரயோகித்து களவாட முயற்சிக்கிறார்கள் எதிரிகள். டிஜிட்டல் சாதனங்களைக் குறிவைத்த ஒலியலைகளின் பாதையில் மனிதர்கள் குறுக்கிடும்போது உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாவதாகத் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதுவும் ஊகம் மட்டுமே; இறுதியான முடிவல்ல. அமெரிக்காவின் குழப்பங்களும், ஆய்வுகளும் தொடர்கின்றன.

‘கட்டதுரைக்குக் கட்டம் சரியில்லை’ பாணியில், அண்மைக்காலமாக அமெரிக்காவுக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது. சில காலத்துக்கேனும் உலக வம்புகளைத் துழவாது, சொந்தப் பிரச்சினைகளை கவனித்தாக வேண்டிய கட்டாயமும் அதற்கு நேர்ந்திருக்கிறது.

x