ஃபேஸ்புக், வாட்ஸ் -அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக செயலிகளை உள்ளிடக்கிய ஃபேஸ்புக் குழுமம் தனது வரலாற்றில் இதுவரை இல்லாத முடக்கத்தை நேற்று (அக்.4) சந்தித்தது. உலக அளவில் நெட்டிசன்களைக் கொதிக்கவைத்த இந்தப் பிரச்சினை, இணையவாசிகள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இதுவரையில்லாத புதிய அனுபவங்களைப் பாடமாகத் தந்திருக்கிறது.
மங்கிய திங்கள்
திங்கள் இரவில் முகநூலில் குழுமியிருந்த இணைய வாசிகள், தங்களது புதிய பதிவுகள் வலையேறாதது குறித்து கவலையடைந்தனர். மேலும் மாற்றம் ஏதுமின்றி பழைய பதிவுகளையே டைம்லைன் காட்டியதில் வெறுப்புற்றனர். இதே நிலைமை இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-அப் போன்ற ஃபேஸ்புக் நிறுவனத்தின் சகோதர சமூக ஊடகங்களிலும் பிரதிபலித்தது. கொதிப்படைந்த மக்கள் போட்டி சமூக ஊடகமான ட்விட்டரில் கூடி தங்கள் ஆட்சேபங்களைக் கொட்டித் தீர்த்தனர். வேறுவழியின்றி தங்கள் ட்விட்டர் கணக்கில் பிரசன்னமான ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் நிர்வாகிகள் மன்னிப்பும் மன்றாடலுமாக ஒரு மழுப்பலான பதிலைப் பதிவு செய்தனர்.
சுமூகம் கெட்ட சமூக ஊடகங்கள்
ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவை வெறும் பொழுதுபோக்கு மற்றும் வம்பளப்புக்கான சமூக ஊடகங்கள் மட்டுமல்ல. இவற்றின் வர்த்தக நோக்க அடிப்படையிலான பரிமாற்றங்களும் அதிகம். வாட்ஸ்-அப் போன்ற செயலிகள், நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும், பணிகளைப் பிரித்து மேற்கொள்ளவும், வாடிக்கையாளருடன் தொடர்பிலிருக்கவும், சேவை குறித்த புகார்களைச் செவிமெடுக்கவும் பயன்படுத்தி வருகின்றன. அதிலும் தற்போதைய பெருந்தொற்றுப் பரவல் காரணமாக வீட்டிலிருந்தே பணியாற்றுபவர்களை ஒருங்கிணைப்பதில் சமூக ஊடக கணக்குகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்த நிறுவனங்களின் பிரத்யேக வாட்ஸ்-அப் குழுக்கள் திடீரென முடங்கியதில், பலவிதமான வர்த்தகச் செயல்பாடுகளில் குழப்பங்கள் நேரிட்டன. முக்கியமாகப் பணப் பரிவர்த்தனைகளைத் தொடங்கியிருக்கும் வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு இந்த முடக்கம் ஒரு கரும்புள்ளியாகி இருக்கிறது.
இந்தியாவின் திணறல்
இந்தியா போன்ற ஜனத்திரட்சி அதிகமுள்ள நாடுகளில் மக்களின் மெய் நிகர் கூடுகைக்கும், இணையவழித் தொடர்புக்கும், குரல் மற்றும் வீடியோ அழைப்புக்கும் இந்தச் சமூக ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. மக்கள்தொகையில் சற்றே மேலிருக்கும் சீனா, சுதேசி சமூக ஊடகங்களை அதிகம் பாவித்து வருவதுபோல இந்தியாவின் நிலைமை இல்லை. ட்விட்டருக்கு மாற்றான ‘கூ’ போன்ற செயலிகள் இந்தியர்களிடம் வரவேற்பும் பெறவில்லை. வளர்ந்த நாடுகளில் பிரபலமான பிற சமூக ஊடகச் செயலிகளிலும் இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக்கிலேயே இந்தியர்கள் திருப்தியாகிவிடுகின்றனர். இதன் காரணமாகவும் உலகளாவிய ஃபேஸ்புக் குழும முடக்கம் இதர நாடுகளைவிட இந்தியாவை அதிகம் பாதித்தது. இந்திய ஊடகவாசிகளிடம் கடும் கண்டனத்தையும் ஃபேஸ்புக் குழுமம் எதிர்கொண்டிருக்கிறது.
சரிந்த மதிப்புகள்
உலக அளவில் ஃபேஸ்புக் செயலியை தினசரி உபயோகிப்போர் எண்ணிக்கை 200 கோடி. டிஜிட்டல் விளம்பர தளத்தில் கூகுள் நிறுவனத்துக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டுகிறது ஃபேஸ்புக். திங்களன்று நேரிட்ட தற்காலிக முடக்கத்தால், இந்த வருவாயில் அமெரிக்காவில் மட்டும் மணிக்கு சுமார் ஐந்தரை லட்சம் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு ஃபேஸ்புக் இழந்திருக்கிறது. இதர தேசங்களின் இழப்புகள் தனி.
ஃபேஸ்புக் குழுமச் செயலிகள் மணிக்கணக்கில் முடங்கியதும் அதற்கு மக்கள் மத்தியிலான எதிர்ப்பும் அமெரிக்கப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. ஃபேஸ்புக்கின் பங்கு சுமார் 5 சதவீதம் வரை அங்கு சரிவு கண்டது. அமெரிக்க டாலர் மதிப்பில் இதன் இழப்பு ரூ.4,700 கோடி வரை சென்றது. பங்குச் சரிவை நிறுத்த ஃபேஸ்புக் நிறுவனம் சில விளக்கங்கள் மற்றும் வாக்குறுதிகளைத் தனது பங்குதாரர்களுக்குத் தெரிவித்தது. ஆனால், பொய்யான தகவல்களை அளித்து பங்குச்சந்தையின் போக்கைக் கையிலெடுக்க ஃபேஸ்புக் முயல்கிறது என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளானது.
ஃபேஸ்புக் வரலாற்றில்...
வருவாயைவிட இணையவாசிகளிடம் எழுந்த சலசலப்பும், கசப்பும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கவலையை அதிகரித்திருக்கிறது. ஆளும் அரசுகளுக்கு ஏற்ப பாரபட்சம் காட்டுவது, பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் களவு போக உடந்தையாவது, போட்டி நிறுவனங்களை முடக்கி ஏகபோகமாய் செயல்பட்டு சந்தையில் அவர்களை நசுக்குவது என்ற புகார்களால், ஏற்கெனவே ஃபேஸ்புக் நிறுவனம் திணறிவருகிறது.
பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வர்த்தக விளம்பரங்கள் மூலம் ஏராளமாய் சம்பாதிக்கும் ஃபேஸ்புக் நிறுவனம், பயனர் தகவல் பாதுகாப்பு, நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாடு போன்றவற்றுக்கு உரிய நிதி ஒதுக்க மறுக்கிறது என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து குற்றம்சாட்டினர். 2019 மார்ச் போன்று இதற்கு முன்னரும் ஃபேஸ்புக் அணுகையில் பிரச்சினைகள் எழுந்ததுண்டு. ஆனால், உலகம் முழுமைக்குமான பிரச்சினையை இப்போதுதான் ஃபேஸ்புக் சந்தித்திருக்கிறது. ஃபேஸ்புக் தனது வரலாற்றில் பெரும் இடரை எதிர்கொண்டிருப்பதாக, தனக்கு வந்த புகார்களின் அடிப்படையில் கணித்திருக்கிறது இணைய முடக்கத்தைக் கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் (https://downdetector.com/) தளம்.
ஏர்டெல் மீது பழி
இந்தியாவில் ஃபேஸ்புக்கின் இந்தப் பகுதி அளவிலான முடக்கம், சுமார் 6 மணி நேரங்களுக்கு நீடித்தது. பெரும்பாலான இந்தியர்கள் இந்தத் தடுமாற்றங்களை இணைய சேவை நிறுவனங்களின் கோளாறாகவே முதலில் கணித்தனர். வழக்கு தொடர்பான வோடபோன் நிறுவனத்தின் சிக்கல்களால், அதன் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நிறுவனத்துக்கு அண்மையில் மாறினார்கள். திடீரென அதிகரித்த வாடிக்கையாளர் எண்ணிக்கையால், கடந்த சில தினங்களாகவே ஏர்டெல் நிறுவனத்தின் இணைய இணைப்பு அடிக்கடி மூச்சுத்திணறி வருகிறது. அதிலும் இணையத்தில் அதிகமானோர் சஞ்சரிக்கும் பிரைம் டைம் நேரங்களில் இணைய சேவை மொத்தமாகவே படுத்துவிடுகிறது. இது தொடர்பாகப் பெரும் சலிப்பிலிருந்த இணையவாசிகளுக்கு, சமூக ஊடகங்கள் முடங்கிய விவகாரம் கொதிப்பை அதிகப்படுத்தியது.
தற்காலிக இளைப்பாறல்
பாதிப்புக்குள்ளான இணையவாசிகள் ட்விட்டரில் கூடி தங்களது குமுறலைப் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தினர். ஒரு சிலர் இந்த இணைய முடக்கத்தை நேர்மறையாகவும், நகைச்சுவையாகவும் எதிர்கொண்டனர். ‘என் வாலிப வாழ்க்கையில் இன்றுதான் நேரத்துக்கு உறங்கச் செல்கிறேன்’ என்று ஒரு இளைஞர் குதூகலமாய் பதிவு செய்திருந்ததை ஏராளமானோர் ரி-ட்வீட் செய்தனர். இந்த வரிசையில் ‘ஜன்னல் காற்றையும் எதிர்சாரி வீட்டுப் பெண் தரிசனத்தையும் இன்றுதான் முழுதுமாக உள்வாங்கினேன்’ என்று ஒருவர் பதிவிட, மற்றொருவர் ‘பரிமாறப்பட்ட டின்னரைப் பார்த்து ரசித்து உணர்ந்து ருசிக்க வாய்ப்பளித்த ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு நன்றி’ என்று நெக்குருகியிருந்தார்.
டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்களில் சிறைப்பட்டிருக்கும் இளைய சமுதாயத்தினருக்கு, இதுபோன்ற முடக்கங்களும் அவ்வப்போது அவசியம்தான் போலிருக்கிறது!