வெளிநாடுகளில் சட்டவிரோதமாகப் பணத்தை முதலீடு செய்பவர்கள் குறித்து, அவ்வப்போது பரபரப்புச் செய்திகள் வெளியாகின்றன. 2016-ல் ‘பனாமா பேப்பர்ஸ்’ எனும் சட்டவிரோத முதலீடுகள் தொடர்பான தகவல்கள், மொசாக் ஃபொன்சேகா என்ற சட்ட நிறுவனம் வழியே கசிந்ததை சர்வதேசப் புலனாய்வுப் பத்திரிகையாளர் கூட்டமைப்பு (ஐசிஐஜே) அம்பலப்படுத்தியது. வாஷிங்டனில் உள்ள அந்த அமைப்பு வெளியிட்ட தகவல்களில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், திரைக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்களின் பெயர்கள் அடிபட்டன.
இந்நிலையில், இப்போது உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் பலர், பிற நாடுகளில் தங்களுடைய பெயரிலும் பினாமிகளின் பெயர்களிலும் சேர்த்த சேமிப்புகள், செய்த முதலீடுகள் குறித்து லட்சக்கணக்கான பக்கங்கள் ஐசிஐஜே அமைப்புக்குக் கிடைத்துள்ளன. இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் உட்பட 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் உள்ளன. இந்த ஆவணத் தொகுப்புக்கு ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
பதவியில் இருந்த – இப்போதும் இருக்கும் 30-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், விளையாட்டு வீரர்கள், திரையுலகப் பிரமுகர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், மூத்த அரசு அதிகாரிகள், ராணுவத்தின் மூத்த அதிகாரிகள், முன்னாள் – இந்நாள் சர்வாதிகாரிகள், நிழல் உலக தாதாக்கள் எனப் பலரின் பெயர்கள் இதில் அடிபடுகின்றன.
119 லட்சம் கோப்புகள்
பனாமா, துபாய், மொனாகோ, சுவிட்சர்லாந்து, கேமேன் தீவுகள் போன்ற வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கபுரி நாடுகளில் இந்த முதலீடுகளும் சேமிப்புகளும் தஞ்சம் புகுந்துள்ளன. 119 லட்சம் கோப்புகள் இதில் அடக்கம். 90 நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், நீதிபதிகள், மேயர்கள், ராணுவத் தளபதிகள் செய்துள்ள முதலீடுகள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. உலகப் பெரும் பணக்காரர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். போலியான அல்லது பினாமி பெயர்களில் நிறுவனங்களைத் தொடங்கி உல்லாச வாழ்வுக்கான சொகுசு பங்களாக்கள், தனிப் படகுகளை வாங்கியுள்ளனர். வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்க உதவாத வங்கிகளின் ரகசிய கணக்குகளில் முதலீடு செய்துள்ளனர்.
நிழல் உலகம் எப்படிச் செயல்படுகிறது என்பதை இந்த ஆவணங்கள் ஓரளவுக்கு வெளிப்படுத்துகின்றன. தங்களுக்குக் கிடைக்கும் பணத்துக்கு மிகக் குறைவான வருமான வரியோ அல்லது வரியே கட்டாமலோ எப்படி ஏய்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த விவகாரங்களில் தொடர்புள்ளவர்கள் தங்களுடைய ரகசிய சேமிப்பு - முதலீடு தொடர்பாக அனுப்பிய மின்னஞ்சல்கள், நினைவூட்டுக் கடிதங்கள், ரகசிய ஒப்பந்த ஆவணங்கள், நிறுவனப் பதிவு தொடர்பான ஆவணங்கள், நிறுவனங்களில் பங்குகளை வாங்கியதற்கான பங்கு பத்திரச் சான்றிதழ்கள், முதலீட்டாளர்களின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டதாக இந்த ரகசிய வங்கிகளின் மேலாளர்கள் அளித்த பணிமுடிப்புக் கடிதங்கள் ஆகியவைதான் இந்த ஆவணங்கள். முகமூடி நிறுவனங்கள் பலவற்றின் உண்மையான முகங்கள் யார் என்பது முதன்முறையாக இந்த ஆவணங்கள் மூலம் அம்பலமாகியிருக்கின்றன.
‘தி கார்டியன்’, பிபிசி செய்தி நிறுவன சார்பு ஊடகங்கள், லீ மான்டி, வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் ஆகியவற்றுடன் இவை பகிரப்பட்டுள்ளன. 600-க்கும் மேற்பட்ட புலனாய்வுப் பத்திரிகையாளர்கள், இந்த ஆவணங்களைத் துருவிப்பார்த்து அறிக்கைகளைத் தயார் செய்துள்ளனர்.
வெளிநாடுகளில் முதலீடு செய்வதே சட்ட விரோதமாகிவிடாது. ஆனால், இந்த முதலீடு எப்படி பெறப்பட்டது, அது வரி செலுத்திய பிறகு கிடைத்த முறையான ஊதியமா என்பது முக்கியம்.
யார், யார்?
இதுபோன்ற விவகாரங்களில், ஒரு முக்கியமான விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர், தான் வசிக்கும் நாட்டைவிட்டு வெளிநாடுகளில் முதலீடு செய்வதே சட்ட விரோதமாகிவிடாது. சில வேளைகளில் தங்களுடைய முதலீட்டுக்குப் பாதுகாப்பு கருதியும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய நேரிடலாம். ஆனால், இந்த முதலீடு எப்படி பெறப்பட்டது, அது வரி செலுத்திய பிறகு கிடைத்த முறையான ஊதியமா என்பது முக்கியம்.
வரி ஏய்ப்புக்கு உடந்தையாக இருக்கும் நாடுகளில் முதலீடு செய்வோரில் பெரும்பாலானவர்கள் சொந்த நாடுகளில் வரிகளைத் திட்டமிட்டு ஏமாற்றுபவர்கள், மோசடிப் பேர்வழிகள், ஊழல் அதிகாரிகள் – அரசியல்வாதிகள், சட்டவிரோதமாக செலாவணிகளை மாற்றித்தருகிறவர்கள், மற்றவர்களும் வரி ஏய்க்க உதவுகிறவர்கள், போதை மருந்து கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள், நிலங்களை வளைத்துப்போடும் பெரிய பண முதலைகள், ஆயுத பேரங்களில் தரகு பெறும் பன்னாட்டு முகவர்கள், ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள், கள்ள நோட்டு அச்சிடுகிறவர்கள் போன்றோர்தான்!
மலைக்கவைக்கும் தரவுகள்
2016-ல் அம்பலத்துக்கு வந்த ‘பனாமா பேப்பர்ஸ்’ அளவு 2.6 டெராபைட்டுகள். பின்னர், 2017-ல் ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ என்ற நிகழ்வு நடந்தது. பெர்முடா நகரில் செயல்பட்ட ஆப்பிள்பை நிறுவனம் 1.4 டெராபைட்டுகள் அளவுக்கு தரவுகளை அப்போது வெளிப்படுத்தியது. இப்போது ‘பண்டோரா பேப்பர்ஸ்’ 2.94 டெராபைட்டுகள் அளவுக்குத் தரவுகளைக் கொண்டிருக்கிரது. 14 இடங்களிலிருந்து தரவுகள் கிடைத்துள்ளன. வியட்நாமிலிருந்து பெலிஸ் மற்றும் சிங்கப்பூர், ஆர்ச்சிபிலாகோஸ், பஹாமாஸ், செஷல்ஸ் போன்ற இடங்களிலிருந்து தரவுகள் கிடைத்துள்ளன.
சட்டவிரோதமாகக் குவிக்கப்பட்டுள்ள இந்த லட்சக் கோடிக்கணக்கான அல்லது கோடி லட்சக்கணக்கான பணத்தையும் சொத்துகளையும் மீட்பது, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு எளிதான செயல் அல்ல. அவையும் கோடிக்கணக்கில் செலவு செய்தால்தான் சிறிதளவையாவது மீட்க முடியும். அதற்கு நிறைய ஆள்பலமும் பொறுமையும் நேர்மையும் தேவைப்படும். இந்த ஆவணங்களையெல்லாம் படித்துப் பார்ப்பதுடன் சரிபார்த்த பிறகே வெளியிட முடியும். அதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் பிடிக்கும்.
பிரபலங்கள், பெருந்தலைகள்
முதல் கட்டமாக உலக அளவில் பிரபலமாகியுள்ள சில தலைவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும். ஜோர்டான் மன்னர் 2-வது அப்துல்லா பற்றி கிடைத்துள்ள ஆவணங்கள்படி, அவர் மலிபு, வாஷிங்டன், லண்டன் ஆகிய மாநகரங்களில் 100 மில்லியன் டாலர்கள் மதிப்புக்கு சொத்துகளை வாங்கியிருக்கிறார். இதுகுறித்து கேட்டபோது விவரம் தரமறுத்த மன்னர், வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவது சட்டவிரோதமான செயல் அல்ல என்றார். இந்தத் தகவல் வெளியாகப் போகும் சில மணி நேரங்களுக்கு முன்னால், ஐசிஐஜே அமைப்பின் இணையதளம் ஜோர்டானில் ஞாயிறன்று முடக்கப்பட்டது.
அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவ் குடும்பம், 400 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள சொத்துகளைச் சமீபத்தில் வாங்கியிருக்கிறது. அப்படி வாங்கப்பட்ட சொத்தில் ஒன்று பிரிட்டிஷ் ராணியின் குடும்பத்துக்கே விற்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவிக்க அலியேவ் குடும்பம் மறுத்துவிட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு அரசியல் தலைவர்களின் எதிர்காலம், இப்போது கேள்விக்குறியாகியிருக்கிறது. செக் குடியரசின் பிரதமர் ஆந்திரேஜ் பாபிஸ், சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோஸ் அனாஸ்டசியாடஸ் ஆகியோரே அவர்கள். இந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளவர்கள் அனைவருமே ஊழல் பணத்தை முதலீடு செய்தவர்கள் அல்லர். பஹ்ரைன் அமைச்சர் வைத்திருந்த வீட்டை வாங்கிய வகையில், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் அவருடைய மனைவி செர்ரி ஆகியோர் 3,12,000 பவுண்டுகள் சொத்து வரியைச் (செலுத்தாமல்) சேமித்திருப்பதும் தெரிகிறது.
பெரும்பாலான இத்தகைய முதலீட்டாளர்களுக்கு லண்டன் நகரம் ஒருங்கிணைப்பு மையமாக அல்லது ஆலோசனை மண்டபமாக அல்லது செயல் அலுவலகமாகப் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. சொத்துகளை வாங்கி விற்போர், முகவர்கள், சட்ட ஆலோசனை அலுவலகங்கள், தேவைக்கேற்ப புதிய நிறுவனங்களைப் பதிவு செய்துதரும் இடைத் தரகர்கள், இந்தத் தில்லுமுல்லுகள் வெளியே தெரியாமல் கணக்கெழுதத் தெரிந்த நிபுணர்கள் லண்டனில் நிறையப்பேர் இருக்கின்றனர். இந்த மகா கோடீஸ்வரர்கள் வேறு நாடுகளில் வசிப்பவர்கள், பிரிட்டனில் தொடர்ந்து வசிக்காத குடியிருப்பாளர்கள். எனவே, வெளிநாடுகளில் வாங்கும் சொத்துகளுக்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லாதவர்கள்.
தன்னுடைய நாட்டிலிருந்து ஊழலை ஒழிப்பதாகக் கூறி, 2019 தேர்தலில் வாக்குறுதி தந்த உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பெயரிலும் ஆவணங்கள் சிக்கியுள்ளன. பிரச்சார காலத்தில் வெளிநாட்டு நிறுவனமொன்றில் தனக்கிருந்த பங்கு மதிப்பில் 25 சதவீதத்தை தன்னுடைய நெருங்கிய நண்பரின் வெளிநாட்டு நிறுவனத்துக்கு மாற்றினார் ஜெலன்ஸ்கி. இப்போது அவர்தான் ஜெலன்ஸ்கியின் முதன்மை ஆலோசகர். இதுகுறித்து கேட்டபோது பதில் அளிக்க ஜெலன்ஸ்கி மறுத்துவிட்டார்.
ரகசியமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துவிட்டார் என்று அமெரிக்கத் தலைவர்களால் சந்தேகிக்கப்படும் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் பெயரில், ஒரு ஆவணமும் இல்லை! சிறு வயதிலிருந்தே அவருடைய நண்பராகத் திகழும், மறைந்த பீட்டர் கோல்பின் பெயரில் நிறைய சொத்து இருக்கிறது. அவரை ‘புதினின் மணிபர்ஸ்’ என்றே செல்லமாக அழைப்பதுண்டு. புதினுடன் உறவு வைத்திருப்பவர் என்று கருதப்படும் பெண்ணின் பெயரிலும் ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளன.
சட்டவிரோதமாகச் சம்பாதிக்கும் பணத்தை அல்லது வரி ஏய்ப்பு செய்ய நினைக்கும் பணத்தை வெளிநாடுகளில் எப்படி இயல்பாக முதலீடு செய்கிறார்கள் என்ற வழிமுறை இப்போது அம்பலமாகியிருக்கிறது. இது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தர்மசங்கடத்தைத் தரக்கூடும். காரணம், அதிபர் தேர்தலின்போது அவர்தான் உலக நிதி நிர்வாக முறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவருவோம் என்று பேசினார். அமெரிக்கா - அதிலும் தெற்கு டகோடா மாநிலம் - இத்தகைய முதலீடுகளுக்கு சொர்க்கபுரியாகத் திகழ்வது கசிந்த ஆவணங்கள் மூலம் தெரிய வருகின்றது.
ஆப்பிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆசிய நாடுகள் என்று எதுவுமே ஊழலுக்கு விலக்கானவை அல்ல. பாகிஸ்தானின் மூனிஸ் இலாஹி 337 லட்சம் டாலர்களை முதலீடு செய்ய சிங்கப்பூரை அணுகியுள்ளார். இவர் பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பிரபலம்.
இப்படிப் பிற நாடுகளில் ரகசியமாக செய்யப்பட்டிருக்கும் முதலீடுகளின் மதிப்பு, 11.3 லட்சம் கோடி டாலர்கள் என்று 2020-ல் மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது உலக அளவில் பல்வேறு நாடுகளின் கருவூலத்துக்குச் சென்றிருக்க வேண்டிய வரி வருவாய்.
‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் அம்பல நிகழ்வுக்குப் பிறகு, சர்வதேச ஊழல் தலைவர்களும் எச்சரிக்கை அடைந்து வழிமுறையைக் கவனமாகக் கையாளத் தொடங்கியிருப்பது இப்போதைய ஆவணங்களைப் பரிசீலிக்கும்போது தெரிகிறது. ஒரு நிறுவனம் தான் பதிவு செய்திருந்த நாட்டைவிட்டு வெளியேற விரும்பியபோது, ‘ஏன் இந்த முடிவு?’ என்று கேட்டதற்கு, ‘எல்லாம் இந்த பனாமா பேப்பர்ஸ் தந்த குடைச்சல்தான்’ என்று வெளிப்படையாகவே பதில் அளித்திருக்கிறது. தன்னுடைய ‘கட்சிக்காரருக்காக’ சொத்துகளை வாங்கிய ஒரு வழக்கறிஞர், மின்னஞ்சலில் அவருடைய பெயரைத் தெரிவிக்காமல், ‘ரகசியமாக இருக்க வேண்டும் - டிஜிட்டலாக பதிவு செய்யக்கூடாது’ என்ற நிபந்தனையோடு தெரிவித்திருக்கிறார்.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பேசும் அரசியல் தலைவர்கள் அனைவருமே, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக செய்யப்படும் முதலீடுகளைத் தடுக்கவோ, கண்டுபிடிக்கவோ உதவும் சீர்திருத்தங்கள் எதுவும் நடந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள் என்பதால், இதில் முன்னேற்றமே இருக்காது என்கிறார் ஐசிஐஜே இயக்குநர் ஜெரார்டு ரைல்.
இப்படிப் பிற நாடுகளில் ரகசியமாகச் செய்யப்பட்டிருக்கும் முதலீடுகளின் மதிப்பு, 11.3 லட்சம் கோடி டாலர்கள் என்று 2020-ல் மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது உலக அளவில் பல்வேறு நாடுகளின் கருவூலத்துக்குச் சென்றிருக்க வேண்டிய வரி வருவாய். இந்தத் தொகை கிடைத்தாலே போதும், பல நாடுகள் கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட இழப்பிலிருந்து மீண்டுவிட முடியும். மிகச் சில பணக்காரர்கள் அடிக்கும் கொள்ளையால், பல கோடி ஏழைகள் மேலும் ஓட்டாண்டிகளாகிறார்கள் என்பதையே இந்த முதலீடுகள் காட்டுகின்றன என்கிறார் ரைல்.
பனாமா அரசு அதிருப்தி
இந்திய திரைப்பட இயக்குநர் ஒருவரின் மகன் லண்டனில் மிகவும் சொகுசான பங்களாவை வாங்கிப் பிறகு, அதை பாகிஸ்தானின் 3 நட்சத்திர அந்தஸ்துள்ள ராணுவ ஜெனரலின் மனைவிக்கு விற்றிருக்கிறார். வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ளனர். பெரும்பாலானவர்கள் பனாமா நாட்டைச் சேர்ந்த நிறுவன உதவியுடன் முதலீடு செய்துள்ளனர்.
பிரிட்டிஷ் வர்ஜின் ஐலேண்ட்ஸ், பனாமா, பெலிஸ், சைப்ரஸ், ஐக்கிய அரசு சிற்றரசு நாடு, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் நிதிச் சேவை அளிக்கும் நிறுவனங்களிடமிருந்தும் இந்தப் புலனாய்வுக்கான ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சில அமைச்சர்கள் உட்பட 700-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் பண்டோரா பேப்பர்ஸில் இடம் பெற்றுள்ளன. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், ஆக்சாட் நிறுவனத் தலைமை நிர்வாகி ஷோயிப் ஷேக் உள்ளிட்ட தொழிலதிபர்கள், ஊடக நிறுவன உரிமையாளர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
“இப்படி அடிக்கடி எங்கள் நாட்டைப்பற்றிய செய்திகள் வெளியானால், அது எங்களுக்கும் எங்களுடைய மக்களுக்கும் சர்வதேச அரங்கில் தலைக்குனிவைத்தான் ஏற்படுத்தும். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக அதிகமாகவே இருக்கும். பிற நாட்டவர்கள் எங்கள் நாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வது சட்டவிரோதம் அல்ல. நீங்கள் அதை வெளியிடும் விதம் எங்கள் மீது தவறான கண்ணோட்டத்தையே மக்களுக்கு ஏற்படுத்தும்” என்று பனாமா நாட்டு அரசு, ஒரு சட்ட நிறுவனம் மூலம் ஐசிஐஜே அமைப்புக்குக் கடிதம் எழுதியிருக்கிறது.
பின்குறிப்பு:
சச்சின் டெண்டுல்கர் தொடர்பான தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இந்திய வருமானவரித் துறையிடம் உரிய வகையில் தகவல் தெரிவித்துவிட்டுத்தான் டெண்டுல்கர் முதலீடுகளைச் செய்திருக்கிறார் என்று அவருடைய சார்பில் வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், இவ்விவகாரம் அவர் மீது ஒரு கரும்புள்ளியை வைத்துவிட்டது என்னவோ உண்மை!