கவனம் ஈர்க்கும் கத்தார் முதல் தேர்தல்


கத்தார் அரண்மனை

மன்னராட்சியின்கீழ் இருக்கும் கத்தார் தேசம், தனது வரலாற்றில் முதல்முறையாக மக்களாட்சியை நோக்கி முதல் அடியை எடுத்துவைக்கிறது. மன்னரின் ஆலோசனை சபையான ஷூரா சபை (Shura Council) என்ற குழுவின் உறுப்பினர்களைக் கத்தார் குடிமக்கள் நேரடியாகத் தேர்வு செய்யும் இந்தத் தேர்தல், அக்டோபர் 2 அன்று நடைபெறுகிறது. இது, கத்தாரின் ஜனநாயகம் தழைக்க வலிகோலுமா? பார்க்கலாம்!

கத்தார் பெட்ரோலியக் கிணறு

சின்ன தேசம்; பெரிய வளம்

பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் உலகின் குட்டி நாடுகளில் ஒன்று கத்தார். 11,581 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கத்தாரின் மக்கள்தொகை 30 லட்சத்தைத் தாண்டாது. அதிலும் 90 சதவீதத்தினர் பிழைப்புக்காக அண்டிய வெளிநாட்டினர் என்ற தகவல் வியப்புக்குரியது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகையில் தொடங்கி பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆளான நாடுகளில் கத்தாரும் ஒன்று. 1971-ல் முழு விடுதலை பெற்றபோதும் அதற்கு முன்பாக, 19-ம் நூற்றாண்டிலிருந்தே அல்-தானி குடும்பத்தினரே கத்தாரை ஆண்டுவருகின்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் அணுக்கம் பேணியதன் அடிப்படையில், அவர்களே அரியணையில் தொடர்ந்தனர். எழுபதாண்டுகளுக்கு முன்புவரை மணல் மேடுகளுடன் ஏழை குடிமக்களின் தேசமாக இருந்த கத்தார், எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட பின்னர் அடியோடு மாறிப்போனது. இன்று எண்ணெய் வளத்தில் உலகின் 3-வது தேசமாக கத்தார் வளர்ந்திருக்கிறது. இயற்கையின் கொடையால் செல்வம் கொழிக்கும் தேசமாகக் கத்தார் மாறியதில், அரண்மனைக்கு அப்பாலிருந்த சாமானியர்களும் செழிக்கத் தொடங்கினர். அந்த வகையில் இன்றைக்குத் தனிநபர் வருமானத்தில் முதலிடம் பெற்றிருக்கிறது கத்தார்.

கத்தாரின் வம்புப் பங்காளிகள்

குட்டி தேசமான கத்தார், ஆட்டமன் காலம் தொட்டு பிரிட்டன் ஆளுகைவரை தனி ஆவர்த்தன ஆட்சியிலேயே ஆர்வம் காட்டியது. நாட்டை ஆண்ட அல்-தானி குடும்பத்தினர் தங்கள் பிடியை விட்டுக்கொடுக்காததில், கத்தாரை தங்கள் எல்லைக்குள் கரைக்க விரும்பிய அண்டை அரபு தேசங்கள் வெறுப்படைந்தன. எண்ணெய் வளத்தில் பெரிய அளவில் வளர்ந்ததும் கத்தார் என்ற எறும்பு, சவுதி அரேபியா போன்ற யானையின் காதுகளைப் பதம் பார்த்தது. அதில் முக்கியமாய் பெரும்பாலான அரபு நாடுகள் எதிர்த்துவந்த ஈரானுடன் நட்புறவு பாராட்டியது, அடிப்படைவாத குழுக்களுக்குப் புரவலரானது, எரிவாயு வயல் நிர்வாகத்தில் ஏகபோகம் செலுத்தியது என அரபு தேசங்களின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது கத்தார். ஆடுகளின் இந்த மோதலில் ஓநாய் ஒன்று பஞ்சாயத்துக்கு வந்தது.

கத்தாரின் அமெரிக்க படைத்தளம்

ஆதாயம் பார்த்த அமெரிக்கா

சர்வதேச முன்னணி ஆயுத வியாபாரியான அமெரிக்காவிடம் உலக அளவில் அதிக ஆயுதங்களைக் கொள்முதல் செய்த பெருமை சவுதி அரேபியாவுக்கு உண்டு. இது மட்டுமன்றி அரபு நாடுகளில் அளவில் பெரியது, செல்வாக்கு மிக்கது, எண்ணெய் வளம் கொண்டது என்பன போன்ற காரணங்களால் அமெரிக்காவும் சவுதி அரேபியாவிடம் இணக்கம் பாராட்டியது. அமெரிக்காவின் விரிவு செய்யப்பட்ட படைத்தளம் ஒன்றும் சவுதியில் அமைய இருந்தது. இதனால், கத்தார் விவகாரத்தில் அமெரிக்கா தன்னை ஆதரிக்கும் என்றே சவுதி நம்பியிருந்தது. ஆனால், இந்த நினைப்பில் மண் விழுந்தது. கத்தாரின் எண்ணெய் வயல் மீது கண் வைத்த அமெரிக்கா, சவுதியைக் கைவிட்டு கத்தாரை அரவணைத்தது. இன்றைக்கு அமெரிக்க எல்லைக்கு வெளியே அமையப்பெற்ற பெரிய அமெரிக்கப் படைத்தளம் கத்தாரில் அமைந்திருக்கிறது. சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து போன்ற பங்காளி தேசங்கள் பொருளாதாரத் தடை விதிப்பு, வான் எல்லை மூடல் உள்ளிட்ட நெருக்கடிகளை விதித்தபோதும் கத்தார் கவலையின்றி மீண்டிருக்கிறது.

சர்வதேச பிம்பத்தில் கவனம்

மனித வளமற்ற குட்டியூண்டு தேசம், கடந்த காலத்து முத்துக்குளிப்பு நிகழ்காலத்து எண்ணெய் வயல்கள் தவிர்த்து ஏனைய இயற்கை வளங்கள் இல்லாதது, எல்லைகளில் முரண்டு பிடிக்கும் பெரிய நாடுகள், அவற்றை சமாளிப்பதற்கான ராணுவ பலம் போதாதது என்பன உள்ளிட்ட பாதக அம்சங்கள் மத்தியிலும் கத்தார் சமாளித்து களமாடவே விரும்புகிறது. சர்வதேச அளவில் அதற்கான பிம்பத்தைக் கட்டமைக்கவும் முயற்சிகளைத் தொடங்கியது. அடிப்படைவாத அமைப்புகள் சிலவற்றை போஷிப்பதன் மூலம் அவற்றால் தனது எல்லைக்குள் எந்தப் பிரச்சினையும் இன்றி பாதுகாத்து வந்த கத்தார், அடுத்தகட்டப் பாதுகாப்பு நோக்கத்தில் அமெரிக்காவையும் வளைத்துப்போட்டது. ஆனபோதும் ஆச்சரியமூட்டும் வகையில், அடிப்படைவாதக் குழுக்களுடன் அதன் புரிதல்களைத் தொடர்ந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததும் தாலிபான்களிடம் பேச முடியாத தேசங்கள், கத்தார் மூலமே தங்கள் குடிமக்களை மீட்டது ஓர் உதாரணம்.

அடுத்தபடியாக சர்வதேச கவனத்துக்காக ஊடக கோதாவில் இறங்கிய கத்தார், அல்-ஜசீரா ஊடகக் குழுமத்தின் உருவாக்கத்துக்கு வித்திட்டது. தலைநகர் தோஹாவிலிருந்து செயல்படும் இந்தச் செயற்கைக்கோள் தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகம், தனது சுதந்திரமான மற்றும் தனித்துவமான பாணியால் அரபு தேசங்கள் மட்டுமன்றி சர்வதேச அளவிலான மாற்று ஊடகமாக வளர்ந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக 2022 உலகக் கால்பந்து போட்டியை நடத்தும் பொறுப்பேற்றிருக்கிறது கத்தார். அரபு தேசங்களில் இந்தப் பெருமைக்குரிய முதல் நாடு என்ற வகையிலும் தனது சர்வதேச பிம்பத்தை வலுவாகக் கட்டமைக்க விரும்புகிறது கத்தார். அளவில் சிறிய தேசங்களுக்கு எப்போதும் காத்திருக்கும் ஆக்கிரமிப்பு ஆபத்துகளை சர்வதேச நாடுகளின் நல்லபிமானம் மற்றும் ஆதரவின் மூலம் நிர்மூலமாக்க முடியும் எனவும் கத்தார் நம்புகிறது. லண்டன் உள்ளிட்ட சர்வதேசப் பெருநகரங்களில் அல்-தானி குடும்பத்தினர் பில்லியன் டாலர்களில் பெரும் சொத்துகளை வாங்கிக் குவித்து வருகிறார்கள். மறுபக்கத்தில் கத்தார் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பு முறைகேடாகச் சுரண்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. இந்த அதிருப்திகளைத் தணிக்கவும் ஜனநாயகத்தைக் கையிலெடுத்திருக்கிறது கத்தார்.

ஷூரா தேர்தல் கணக்குகள்

நாட்டை ஆளும் மன்னருக்கு முக்கிய விஷயங்களில் ஆலோசனை தருவதற்கான சபையாக விளங்குகிறது ஷூரா சபை. சக அரபு நாடுகளிலும் ஷூரா சபை நடப்பில் உள்ளது. கத்தாரின் ஷூரா சபை உறுப்பினர்களை 4 வருடங்களுக்கு ஒருமுறை மன்னரே தேர்ந்தெடுப்பார். அல்லது அரண்மனையின் சிபாரிசு பெற்றவர்களுக்கே பிரபுக்கள் அங்கீகாரத்துடனான ஷூரா அதிர்ஷ்ட வாய்ப்பு கிட்டும். கத்தார் ஷூரா சபையின் 45 உறுப்பினர்களில் 30 பேரை வாக்கெடுப்பின் மூலம் நேரடியாகக் குடிமக்களே தேர்ந்தெடுப்பது என்றும் எஞ்சிய 15 பேரை மன்னர் தெரிவு செய்வார் எனவும் அங்கு 2003-ல் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 15 ஆண்டுகள் ஆகியும் இந்த ஏற்பாடு கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

கத்தார் மன்னர் தமிம் பின் ஹமத் அல்-தானி

2017-18-ல் பங்காளி அரபு தேசங்களின் அச்சுறுத்தல் அல்-தானி குடும்பத்துக்குப் பயம் காட்டிப்போனது. காலம்காலமாய் காத்துவரும் அரியணை கைநழுவிப் போவதையோ அதற்கான முகாந்திரங்களையோ அவர்கள் அடியோடு வெறுத்தார்கள். ராஜாங்க நகர்வுகளில் சமயோசிதமான ஆலோசனைகள் கிடைக்காத காரணத்தினாலேயே, மன்னரின் முடிவுகள் சொதப்பியதாகவும் கத்தார் அரண்மனை கருதியது. எனவே கிடப்பிலிருந்த ஷூரா சபை உறுப்பினர்களுக்கான தேர்தலைத் தூசுதட்டியது. மேலும் மன்னராட்சி நடக்கும் நாட்டில் தேர்தல் அறிவிக்கப்படுவதும், மக்களின் வாக்குரிமை உறுதி செய்யப்படுவதும் கத்தார் மீதான சர்வதேச மதிப்புக்கும் உதவும் அல்லவா! உடனடியாக 2021, அக்டோபர் 2-ல் ஷூரா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என்றும், 30 வயது நிரம்பிய கத்தார் குடிமகன்கள் இந்தப் பொறுப்புக்குப் போட்டியிடலாம் என்று அறிவித்தார்கள். பெயரளவோடு நின்றுவிடாது அடுத்த கட்டத்துக்குச் செல்லும் வகையில், தற்போதைய மன்னர் தமிம் பின் ஹமத் அல்-தானி இதில் ஆர்வம் காட்டினார்.

அக்கறை நிஜமானதா?

மன்னருக்கான ஆலோசனைக் குழு என்று பெயரளவில் இருந்தபோதும், ஷூராவின் செயல்பாடுகள் வரையறைகளுக்குட்பட்டவைதான். பிரதமரின் கொள்கை சார்ந்த முடிவுகளுக்கு எதிராகத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க மட்டுமே ஷூரா குழுவினருக்கு உரிமை உண்டு. அதிகபட்ச நடவடிக்கையாக 3-ல் 2 பங்கினர் கூடி நம்பிக்கை வாக்கெடுப்பைக் கோரலாம். அதிலும் சமூக, பொருளாதார அம்சங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தேசத்தின் பாதுகாப்பு, முதலீடு, ராணுவ விவகாரம், அயலுறவு உள்ளிட்ட கொள்கைகளை விவாதிக்க அனுமதி கிடையாது.

90 சதவீதம் வெளிநாட்டவர் வசிக்கும் தேசத்தில் சுமார் 3 லட்சம் கத்தாரிகள் மட்டுமே உள்ளனர். அவர்களில் வாக்குரிமைக்கான வயது வாய்த்த சொற்ப எண்ணிக்கை வாக்காளர்கள் மட்டுமே இந்தத் தேர்தலின் முடிவைத் தீர்மானிப்பார்கள். அவர்களிலும் 1971-க்குப் பின்னர் கத்தாரில் நிலையாக வசிக்காத கத்தாரிகளுக்கு வாக்குரிமை கிடையாது. அந்த வகையில் சவுதி அரேபிய ஆதரவாளர்களான ‘அல்-முர்ரா’ என்ற கத்தார் ஆதிகுடிகளும் வாக்குரிமை இழப்பார்கள். குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் என்பதால் அவர்களை மடைமாற்றுவதும், செல்வாக்கு செலுத்துவதும்கூட எளிதானது.

மாற்றம் ஆரோக்கியமாகட்டும்

இந்தியாவைப் பொறுத்த அளவில், தேசத்துக்கு வெளியிலிருக்கும் ஒரு மாநிலம் என்று சொல்லும் அளவுக்குக் கத்தார் விளங்குகிறது. அங்கிருந்து அந்நியச் செலாவணியைப் பெருமளவு ஈட்டித்தரும் இந்தியர்கள், கத்தார் மக்கள்தொகையில் சுமார் 20 சதவீதம்வரை நிறைந்திருக்கின்றனர். கத்தாரின் ஆரோக்கிய நகர்வுகள் ஒவ்வொன்றும், இந்த இந்தியர்களின் எதிர்காலம், சர்வதேசக் கச்சா எண்ணெய் சந்தை போன்றவற்றின் மூலம் நமக்கும் முக்கியமாகிறது. எந்த வகையில் பார்த்தாலும், ஜனநாயகத்தை நோக்கிய பாதையில் கத்தார் அடியெடுத்து வைத்திருப்பது வரவேற்புக்குரியதுதான்!

x