எதிர்பார்த்தது போலவே அடித்து ஆட ஆரம்பித்துவிட்டது அமெரிக்கா. ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் கிடைத்த அவமானத்தைத் துடைப்பது, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைக் கட்டியாள்வது, அதிகரிக்கும் சீனாவின் அத்துமீறல்களை அடக்குவது என பல்வேறு வியூகங்களுடன் அண்மையில் அமெரிக்கா தொடங்கி வைத்த திட்டமே ‘ஆகஸ்’.
ஆஸ்திரேலியாவின் அணுசக்தி பலத்தை அதிகரிக்கும் நோக்கிலான அமெரிக்காவின் இந்த நகர்வைப் பனிப்போராகப் பிரகடனம் செய்திருக்கிறது சீனா. 2-வது பனிப்போர் ஆயத்தங்கள், அணு ஆயுத பலத்தை அதிகரித்துக் கொள்வது உட்பட பல அழுத்தங்களை இந்தியா மீதும் திணித்திருக்கின்றன.
களையிழந்த ‘க்வாட்’
இந்தியாவை உள்ளடக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் என நாற்கரக் கூட்டமைப்பான ‘க்வாட்’ உருவானதன் நோக்கங்கள் வெளிப்படையானவை. தனக்கு நிகராக வர்த்தகத்திலும் ஆயுதப் பெருக்கத்திலும் சீனா வலுப்பெற்று வருவதற்கு எதிராக ’க்வாட்’ அமைப்பை முடுக்க முயன்றது அமெரிக்கா. இந்தியாவும், ஜப்பானும் இதற்கு உடன்படாது போகவே, இன்னொரு கூட்டமைப்புக்கு அச்சாரமிட்டது அமெரிக்கா. அப்படி தோன்றியதுதான் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா இடையிலான ‘ஆகஸ்’ கூட்டமைப்பு. முழுக்கவும் ராணுவ ரீதியிலான நோக்கங்களை மட்டுமே தரித்த இந்தக் கூட்டணியே, உலகின் 2-வது பனிப்போருக்கு அடித்தளமிட்டிருக்கிறது.
பனிப்போர் 2.0
அமெரிக்கா- சோவியத் ரஷ்யா இடையிலான பனிப்போர் சுமார் அரை நூற்றாண்டு காலம் நீடித்தது. சோவியத் கூட்டமைப்பு உடைந்ததும் அமெரிக்காவே அடுத்த கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தது. தனக்கு நிகராகப் பொருளாதார ரீதியில் வளர்ந்த சீனாவை அமெரிக்கா அச்சுறுத்த முனைந்தது. பொருளாதாரம் மட்டுமன்றி ராணுவ பலத்திலும் சீனாவைத் தூண்டிவிட்டது. அதன் விளைவாக சோவியத் ஒன்றியம் காலி செய்த இருக்கையை தற்போது சீனா ஆக்கிரமித்துள்ளது. ஒருவழியாக அமெரிக்கா-சீனா என 2 வல்லரசுகளின் மோதல் போக்கால், பனிப்போர் 2.0 தொடங்கியுள்ளது. புவிசார் அரசியலை திருத்தி எழுதும் இந்த பனிப்போர் உரசல்கள், நாடுகளின் அசல் எல்லைகளை திருத்தி எழுதும் நிஜமான போர்களுக்கு அடித்தளமிடுவதுதான் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
‘ஆகஸ்’ ஆரம்பம்
ஆஸ்திரேலியா (AUS), பிரிட்டன் (UK), அமெரிக்கா (US) ஆகிய நாடுகளின் கூட்டணியைக் குறிக்கும் ஆகஸ் (AUKUS) கூட்டமைப்பின் பிரதான நோக்கம் சீனாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் அணுசக்தி பலத்தை அதிகரிப்பது. இதுதவிர உளவுத் தகவல்கள், குவான்டம் தொழில்நுட்பப் பரிமாற்றம் போன்ற ராணுவ ரீதியிலான உடன்பாடுகளும் அதில் உண்டு. ஆகஸ் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கான அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களைக் கட்டமைக்க அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து உதவ இருக்கின்றன. இதன் மூலம் 4,300 கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலான 8 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் 2040-ல் ஆஸ்திரேலியக் கடற்படையில் அணிவகுத்திருக்கும். இந்த நீர்மூழ்கிகள் அனைத்தும் பாதுகாப்புத் தேவைக்கானவை மட்டுமே; அணு ஆயுதங்களுக்கானவை அல்ல என ஆகஸ் கூட்டணி நாடுகள் சொல்வதை உலக நாடுகள் நம்புவதாக இல்லை. காரணம் , தேசப்பாதுகாப்பில் அணுசக்தி நீர்மூழ்கிகளின் பங்கு அத்தனை அளப்பரியது.
அசகாய அணு நீர்மூழ்கிகள்
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா என 6 நாடுகளில் மட்டுமே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. ‘ஆகஸ்’ ஏற்பாட்டில் 7-வது நாடாக ஆஸ்திரேலியாவும் இணைகிறது. போர் அல்லது போர் முஸ்தீபுகள், அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என தடுப்பாட்ட ஏற்பாடுகளில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அணு ஆற்றலுக்கான எரிபொருட்களை நிரப்பி நீருக்குள் மூழ்கினால், ஆண்டுக்கணக்கில் கூட அவை வெளிப்படாது ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். உள்ளிருப்போர் உணவுத் தேவைகளுக்காக மட்டுமே வெளிவந்தால் போதும். இதிலிருக்கும் அணு உலை வெளியிடும் அபரிமிதமான ஆற்றலைக் கொண்டு நீர்மூழ்கி செயல்பாட்டுக்கான மின்னாற்றலில் தொடங்கி, கடல்நீரைக் குடிநீராக்குவது போன்ற அடிப்படைத் தேவைகள் வரை அனைத்தும் சாத்தியமாகும்.
அமெரிக்காவின் அதிரடி வியூகம்
ஆயுதப் போட்டியில் முடிசூடா மன்னனான அமெரிக்காவிடமே அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அதிகாரபூர்வ கணக்கின்படி அந்த எண்ணிக்கை 68. அடுத்த இடங்களில் ரஷ்யா (29), சீனா (12). பிரிட்டன் (11), பிரான்ஸ் (8), இந்தியா (1) ஆகியவை வருகின்றன. முன்னதாக பிரிட்டனுக்கு மட்டுமே தனது அணுசக்தி நீர்மூழ்கி நுட்பங்களைத் தாரைவார்த்த அமெரிக்கா, அரை நூற்றாண்டு இடைவெளியில் இப்போது இன்னொரு நட்பு தேசத்துக்கு அணு நேசம் காட்டுகிறது.
ஆஸ்திரேலியாவின் படைபலத்தில் அணுசக்தி நீர்மூழ்கிகள் சேர்வதன் மூலம் அமெரிக்கா நேரிடையாகவே நிறைய பயனடையப் போகிறது. சீனாவுக்கு ’செக்’ வைத்திருப்பதோடு, இன்னொரு பகை தேசமான வட கொரியாவுக்கும் இதன் மூலம் மிரட்டல் விடுத்திருக்கிறது அமெரிக்கா. ‘ஆகஸ்’ பூர்வாங்கச் செய்திகள் வெளியான சூட்டில், வடகொரியா தனது நீர்மூழ்கிகளில் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பொருத்தி போர் ஒத்திகை மேற்கொண்டதும், இடையில் நிறுத்தி வைத்திருந்த யுரேனியம் செறிவூட்டல் பணிகளை மீண்டும் தொடங்கி இருப்பதுமே இதற்கு சாட்சி.
ஆவேச ஆஸி.
கடந்த சில தசாப்தங்களாகச் சீனாவுடனான உறவில் ஆஸ்திரேலியா சுமூகம் பாராட்டியே வந்தது. ஆஸி அரசியலில் நிகழ்ந்த சில குழப்பங்கள் மற்றும் பாதுகாப்பு வளையத்தில் ஓட்டையிட்ட சைபர் அட்டாக் விவகாரங்களின் பின்னே சீனா இருந்ததாக அறிந்ததும் ஆவேசமானது. ஆனபோதும் சீனாவை முழுவதுமாக ஆஸியால் பகைக்கவோ, நிராகரிக்கவோ முடியாது. வர்த்தக ரீதியிலான பெருமளவு தேவைகளுக்குச் சீனாவை சார்ந்திருப்பதே இதற்குக் காரணம். சீன முஸ்லிம்களுக்கு வரிந்துகொண்டு குரல் கொடுத்ததிலும், கரோனாவின் நதிமூலத்தை ஆராயும் அமெரிக்காவின் குரலுக்கு வலு சேர்த்த நாடுகளில் இணைந்ததிலும் இந்த உறவில் சுமூகம் கெட்டது.
அமெரிக்கா-ஆஸ்திரேலியா இடையிலான புதிய சமன்பாடுகள் உருவான பிறகே, சீனாவை ஆஸி முழுதாய் புறக்கணித்தது. அணுசக்தி நீர்மூழ்கி தொழில்நுட்பத் தேவைக்காக பிரான்ஸ் தேசத்துடன் நெருங்கியிருந்த ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் தோழமை கிடைத்ததும் அதை உதறியது. வெகுண்ட பிரான்ஸ், தன் முதுகில் குத்திவிட்டதாகப் புலம்பியதோடு அமெரிக்கா, ஆஸி நாடுகளில் இருந்து தனது தூதர்களைத் திரும்பப் பெற்றது. அதற்கெல்லாம் ஆஸி மசியவில்லை. அணுசக்தியில் முதன்மை வல்லரசான அமெரிக்கா உடனிருக்க ஆஸிக்கு பயமேன்!
சீறும் சீனா
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் பேசிய அதிபர் ஜி ஜின்பிங், “சீனாவை அழிக்க நினைப்பவர்களைச் சீனப் பெருஞ்சுவரில் தலைமோதச் செய்து ஒழிப்போம்” என்று சீறினார். அந்தக் கொண்டாட்டங்களின் அங்கமாக கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகளைச் செலுத்தவல்ல ‘சைலோ’ என்ற தளங்களை கன்சு மாகாணத்தின் பாலைவனத்தில் அலங்கரித்து நிறுத்தியது சீனா. ’ஆகஸ்’ நகர்வுகளை அடுத்து அந்த ஏவுகணைகள் ஆஸ்திரேலியாவின் திசைக்குத் திருப்பிப் பொருத்தப்பட்டுள்ளன என்கின்றன சீன ஊடகங்கள்.
ஆகஸ் கூட்டமைப்பில் இணைந்ததன் மூலம், அணு குண்டு தாக்குதலுக்கு ஆளாகும் அபாயத்துக்கு ஆஸ்திரேலியா தயாராகிவிட்டதாக சீனாவின் அரசு ஊடகமான ‘தி குளோபல் டைம்ஸ்’ அறிவித்துள்ளது. ’ஆஸ்திரேலியா வலிய சீனாவின் பகை நாடாகி இருக்கிறது’ என்று செல்லமாய் மிரட்டல் விடுக்கவும் செய்திருக்கிறது சீனா. சில தினங்களுக்கு முந்தைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஐநா உரை, பனிப்போர் முகாந்திரங்களை நிராகரித்திருக்கிறது. ஆனால், ஆகஸ் நகர்வுகள் அனைத்தும் பனிப்போருக்கான ஆயத்தங்களே என சீனா உறுதியாக நிற்கிறது.
கேள்வியாகும் பிராந்திய அமைதி
அமெரிக்காவும் பிரிட்டனும் ஆஸ்திரேலியாவின் அணுசக்தியை ஊட்டி வளர்ப்பது, வட்டார ஆயுதப் போட்டியை அதிகரித்து பிராந்தியத்தின் அமைதிக்கும் வேட்டு வைக்கும். பஞ்சசீலக் கொள்கை, அணி சேராமை என வெள்ளைப் புறாக்களைப் பறக்கவிடும் இந்தியாவும் தனது அணு ஆயுத பலத்தை மேலும் அதிகரித்தாக வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகும். இது மறைமுகமாகப் பாகிஸ்தானையும் உசுப்பேற்றி அந்நாட்டின் அணுசக்தி பலத்தையும் அதிகரிக்கும். பாகிஸ்தானிடம் பெருகும் அணு ஆயுதங்கள், இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே அச்சுறுத்தலாக மாறக்கூடியவை.
பாகிஸ்தானின் அணுசக்திக்கு அடித்தளமிட்ட விஞ்ஞானிகள் வாயிலாக ஈரான், லிபியா, வட கொரிய நாடுகளுக்கு முறைகேடாக தொழில்நுட்பங்கள் விற்கப்பட்ட குற்றச்சாட்டும் வழக்கு விசாரணைகளும் அங்கு நிலுவையில் இருக்கின்றன. பாக். மார்க்கமாக ஈரானுக்குச் சென்ற அணு கச்சா பொருட்களை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியதாகவும், ஒசாமா பின் லேடன் சூடானில் தங்கியிருந்தபோது அல்-கொய்தா அமைப்பும் அவ்வாறான கச்சாப் பொருட்களை வைத்திருந்ததாகவும் பகீர் தகவல்கள் உண்டு. ஆயுத பலத்தின் போட்டியும் அதற்கொப்ப சமநிலையை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளும் அணுக்கருவின் பெருவெடிப்பு போலவே எல்லையற்ற நாசத்துக்கு வித்திடுபவை. எனவே, ‘ஆகஸ்’ நகர்வு உலகுக்கு ஆக்கபூர்வமானதல்ல என்றே இன்றைய சூழலில் கணிக்க முடிகிறது.
பெட்டி செய்தி:
இந்தியாவின் சுதேசி அரிஹந்த்
இந்தியாவின் ஒற்றை அணு நீர்மூழ்கி கப்பலின் பெயர் ‘ஐ.என்.எஸ் அரிஹந்த்’. முழுக்கவும் சுதேசி தயாரிப்பாக உருவானபோதும் இதன் அணுசக்தி சிக்கல்களைத் தீர்ப்பதில் ரஷ்யா உதவி இருக்கிறது. அரிஹந்த் கட்டுமானத்தில் அவசியமான அணு உலை கல்பாக்கத்தில் தயாரானது. டி.ஆர்.டி.ஓ., பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய கடற்படை தயாரித்திருக்கும் அரிஹந்த், 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கடல் எல்லைகளைப் பாதுகாத்து வருகிறது. இந்த வரிசையில் மேலும் 3 அணுசக்தி நீர்மூழ்கிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.